மு.க.ஸ்டாலின்

“பாலியல் குற்றவாளிகளை காக்கும் பழனிசாமி” - ராஜேஷ்தாஸை கைது செய்ய கோரும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்!

பழனிசாமியின் பிடியிலிருந்து தலைமைச் செயலாளரும், உள்துறை செயலாளரும் வெளியில் வந்து ஒரு பெண் எஸ்.பியின் பாதுகாப்பிற்கே அச்சுறுத்தலாக உள்ள சிறப்பு டி.ஜி.பி, எஸ்.பியை உடனடியாக கைது செய்ய உத்தரவிடவேண்டும்

“பாலியல் குற்றவாளிகளை காக்கும் பழனிசாமி” - ராஜேஷ்தாஸை கைது செய்ய கோரும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

"முதலமைச்சர் பழனிசாமியின் பிடியிலிருந்து தலைமைச் செயலாளரும், உள்துறை செயலாளரும் வெளியில் வந்து - பெண் எஸ்.பி.யின் பாதுகாப்பிற்கே அச்சுறுத்தலாக உள்ள சிறப்பு டி.ஜி.பி. மற்றும் எஸ்.பி.யை உடனடியாக கைது செய்ய உத்தரவிட வேண்டும்; தாமதித்தால், தேர்தல் ஆணையமே நேரடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தி.மு.கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பான அவரது அறிக்கையில்,

“சிறப்பு டி.ஜி.பி.யால் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்ட பெண் எஸ்.பி.க்கே கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதற்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். கொலை மிரட்டலைப் பார்த்துக் கொந்தளித்த பெண் ஐ.பி.எஸ் அதிகாரிகள் 10 பேர் தமிழகக் காவல்துறைத் தலைவரைச் சந்தித்துப் புகாரளித்த பிறகும் - இந்த நிமிடம் வரை சிறப்பு டி.ஜி.பி.யையும், செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி.யையும் பாதுகாத்துக் கொண்டிருக்கும் முதலமைச்சர் பழனிசாமி பெண்ணினத்திற்கே சாபக்கேடாகி விட்டார்!

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகும் இன்னும் பழனிசாமியின் சட்ட விரோத உத்தரவுகளை மதித்து பாலியல் தொந்தரவு கொடுத்தவரையும், புகார் கொடுக்க விடாமல் தடுத்தவரையும் தமிழகத் தலைமைச் செயலாளரும், உள்துறைச் செயலாளரும் காப்பாற்றிக் கொண்டிருப்பது மிகுந்த வேதனைக்குரியது; கண்டனத்திற்குரியது.

பாதிக்கப்பட்ட ஐ.பி.எஸ். அந்தஸ்தில் உள்ள பெண் போலீஸ் எஸ்.பி.க்கு கொலை மிரட்டல் விடுக்கும் துணிச்சல் குற்றவாளிகளுக்கு வந்தது எப்படி? இப்படி அடாவடித்தனத்தில் ஈடுபட்டுள்ள இரு போலீஸ் அதிகாரிகளையும் இன்னும் சஸ்பெண்ட் செய்து கைது செய்யாமல் விட்டு வைத்திருப்பது எதற்காக? அ.தி.மு.க.விற்கு தேர்தல் வேலை செய்யப் போகிறார்களா? தனக்குச் சிறப்பு டி.ஜி.பி.யின் காருக்குள் நேர்ந்த கொடுமை குறித்து பெண் எஸ்.பி. புகாரளித்து 13 நாட்கள் கழிந்து விட்டன. நான் கண்டித்து அறிக்கை விட்டு - திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் மாதர் சங்கங்கள் போராட்டம் நடத்திய பிறகு, எஸ்.பி.யின் புகார் மீது சி.பி.சி.ஐ.டி வழக்குப் பதிவு செய்து சிறப்பு டி.ஜி.பி.யையும், செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி.யையும் A1 மற்றும் A2-களாக அறிவித்து இன்றோடு 7 நாட்களாகி விட்டன. ஆனாலும் இதுவரை சிறப்பு டி.ஜி.பி.யும், செங்கல்பட்டு எஸ்.பி.யாக இருந்தவரும் இடைநீக்கம் செய்யப்படவில்லை. சி.பி.சி.ஐ.டி. பதிவு செய்த வழக்கில் கைதும் செய்யப்படவில்லை!

“பாலியல் குற்றவாளிகளை காக்கும் பழனிசாமி” - ராஜேஷ்தாஸை கைது செய்ய கோரும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்!

ஒரு பெண் எஸ்.பி.க்கே நிகழ்ந்த இந்த அநீதி மற்றும் பாலியல் சித்ரவதையைப் பார்த்து ஒட்டுமொத்த தமிழகமே எரிமலையாகக் குமுறிக் கொண்டு இருக்கிறது. தாய்மார்கள் கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாடு ஐ.பி.எஸ். அதிகாரிகள் சங்கம் ஏற்கனவே இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி விட்டது. பரனூர் சுங்கச்சாவடியில் அத்துமீறி பெண் எஸ்.பி. மறிக்கப்பட்டது குறித்து விளக்கம் கேட்டு, மனித உரிமை ஆணையம் உள்துறைச் செயலாளருக்கும் - தமிழக டி.ஜி.பி.க்கும் நோட்டீஸ் அனுப்பி விட்டது. மேலும், தமிழக டி.ஜி.பி.யை நேற்றைய தினம் 10 பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் நேரில் சந்தித்து “பெண் எஸ்.பி.க்கு கொலை மிரட்டல்” எனப் புகாரும் அளித்து விட்டார்கள். சக பெண் அதிகாரிக்கு நீதிகேட்டு முறையிட்ட அந்தப் பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகளின் தார்மீக, அறவுணர்ச்சியை நான் பாராட்டுகின்ற நேரத்தில் - தமிழகமெங்கும் “இருவரையும் கைது செய்” என்ற தாய்மார்கள் போராட்டக்குரல் கேட்பதை உணர முடிகிறது. ஆனாலும் இந்த இரு குற்றவாளிகளையும் முதலமைச்சர் திரு. பழனிசாமியும் - அவரது பேச்சை இன்னும் கேட்டுக் கொண்டிருக்கும் உள்துறை செயலாளரும், தலைமைச் செயலாளரும் அரண் போல் நின்று காப்பாற்றி வருவது நியாயமா? ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக இருக்கும் இவர்கள் சக ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு நடைபெற்ற இந்தக் கொடுமையை இன்னும் வேடிக்கை பார்ப்பதா? பாலியல் அத்துமீறலும், அதிகாரத் திமிரும் கொண்டு - அடக்கி ஒடுக்க நினைக்கும் இந்த அட்டூழியச் செயல் தமிழகக் காவல்துறை வரலாற்றில் – ஏன், தமிழக அரசு நிர்வாக வரலாற்றில் கூட ஒரு அழிக்க முடியாத களங்கத்தை ஏற்படுத்தி விட்டது.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் அ.தி.மு.க. குற்றவாளிகளை இரண்டு ஆண்டுகள் காப்பாற்றினார் முதலமைச்சர் திரு. பழனிசாமி. பிறகு ஒரு பெண் எஸ்.பி.க்கு நேர்ந்த பாலியல் தொந்தரவு வழக்கில் - சி.பி.சி.ஐ.டி வழக்குப் பதிவு செய்தும் அந்த ஐ.ஜி.யைக் காப்பாற்றி - தன் மீதுள்ள ஊழல் வழக்குகளையும் - தனது அமைச்சரவை சகாக்கள் மீதுள்ள ஊழல் வழக்குகளையும் நீர்த்துப் போக வைத்தார். இப்போது தனது “கைத்தடியாக” இருந்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினரின் அராஜகத்தை வேடிக்கை பார்த்து - விவசாயிகள் மீதே கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்த சிறப்பு டி.ஜி.பி.யையும், எதிர்க்கட்சியினர் மீது தடியடி நடத்தவும், பொய் வழக்குப் போடவும் துணை போன செங்கல்பட்டு எஸ்.பி.யையும் பாதுகாத்து நிற்பது முதலமைச்சர் திரு. பழனிசாமி மட்டுமல்ல - தற்போதுள்ள தமிழக அரசு நிர்வாக இயந்திரமும்தான் என்பது வெட்கித் தலை குனிய வைக்கிறது. சட்டத்தின் ஆட்சி அ.தி.மு.க. ஆட்சியின் அந்திம காலத்தில் மேலும் சந்தி சிரித்து நிற்கிறது.

“பாலியல் புகாருக்கு உள்ளானவர்களைப் பாதுகாப்பதும்” “பெண் எஸ்.பி.களுக்கே பாதுகாப்பற்றதும்” தான் அ.தி.மு.க. ஆட்சியில் “வெற்றி நடை போடும் தமிழகம்” என்ற பிரச்சாரத்தின் லட்சணமா? அதற்கு மக்கள் வரிப்பணத்தில் விளம்பரமா - வெட்கம்! வெட்கம்! மன்னிக்க முடியாத குற்றம்! பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கும் முதலமைச்சர் பழனிசாமிக்குத் தமிழகத் தாய்மார்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்பது மட்டும் நிச்சயம்! ஆகவே முதலமைச்சர் பழனிசாமியின் பிடியிலிருந்து தலைமைச் செயலாளரும், உள்துறை செயலாளரும் வெளியில் வந்து – பெண்ணினத்தின் - அதிலும் ஒரு பெண் எஸ்.பி.யின் பாதுகாப்பிற்கே அச்சுறுத்தலாக உள்ள சிறப்பு டி.ஜி.பி. மற்றும் எஸ்.பி.யை உடனடியாக கைது செய்ய உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். ஒருவேளை தாமதித்தால் - தேர்தல் ஆணையமே நேரடியாகத் தலையிட்டு இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

banner

Related Stories

Related Stories