மு.க.ஸ்டாலின்

“வெற்றி மாலையை கலைஞர் நினைவிடத்தில் சமர்ப்பிக்க சபதம் கொள்வோம்” - மு.க.ஸ்டாலின் பேச்சு!

கொளத்தூரில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ.43 லட்சம் மதிப்பீடில் அமைக்கப்பட்ட மேயர் முனுசாமி விளையாட்டு திடலைத் திறந்து வைத்தார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

“வெற்றி மாலையை கலைஞர் நினைவிடத்தில் சமர்ப்பிக்க சபதம் கொள்வோம்” - மு.க.ஸ்டாலின் பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், இன்று கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பாக முகவர்கள் மற்றும் கழக நிர்வாகிகளுடனான கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்றார். இந்நிகழ்வில், கழகத்தின் முழுமையான வெற்றிக்கு முழுமூச்சாகப் பணியாற்றுமாறு, உரிய ஆலோசனைகளை வழங்கி அனைவருக்கும் ஊக்கமளித்தார்.

அத்துடன், வார்டு 67- ரங்கசாயி தெருவில், சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ.43 லட்சம் மதிப்பீடில் அமைக்கப்பட்ட மேயர் முனுசாமி விளையாட்டு திடலைத் திறந்து வைத்தார்.

பின்னர் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை விவரம் :

“இன்றைக்கு 238 பாக முகவர்கள் உள்ளிட்ட 3,069 களப்பணியாளர்கள் - அதாவது பூத் கமிட்டியில் இடம்பெற்றிருப்பவர்களை எல்லாம் இடம்பெற்று ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியாக இந்த நிகழ்ச்சியை நாம் இங்கே நடத்திக் கொண்டிருக்கிறோம்.

தேர்தல் களத்திற்கு நீங்கள்தான் முக்கியமானவர்கள். நீங்கள் இல்லை என்று சொன்னால் அந்தக் களத்தில் நாம் முழு வெற்றியை பெற்றிட முடியாது. அதை முறைப்படுத்தி, ஒழுங்குபடுத்தி அந்த களம் எப்படி இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து பணியாற்றக் கூடியவர்கள், நீங்கள்.

அனைத்து களப்பணியாளர்களும், பாக முகவர்களும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் - ஏதோ கொளத்தூர் தொகுதியில் மட்டுமல்ல, இந்த முறை 234 தொகுதிகளிலும் முறைப்படுத்தி இது அமைக்கப்படவேண்டும் என்று தலைமைக் கழகத்தில் இருக்கும் வழக்கறிஞர்கள் மூலமாக மாவட்டக் கழகச் செயலாளர்களிடத்தில் அறிவுறுத்தி, அந்த பணியை இன்றைக்கு நாம் சிறப்பாக நிறைவேற்றி இருக்கிறோம்.

ஏன் இதில் அதிகமான கவனத்தை எடுத்து, அதற்குப் பயிற்சி கொடுத்து, அதை முறைப்படுத்துகிறோம் என்றால், இன்றைக்கு நம்மை எதிர்க்கக் கூடியவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல. வெறும் அ.தி.மு.க.வாக மட்டும் இருந்தால் அதை தூக்கி போட்டுவிட்டு சென்று விடலாம். ஆனால் அ.தி.மு.க.வுடன் சேர்ந்து மத்தியில் இருக்கும் பா.ஜ.க, பா.ஜ.க., மட்டுமல்ல; ஊடகங்கள், மாநில அரசிற்கும் - மத்திய அரசிற்கும் துணை புரியும் குறிப்பிட்ட சில அதிகாரிகள், குறிப்பிட்ட சில காவல் துறையைச் சார்ந்தவர்கள், இவர்களெல்லாம் இன்றைக்கு பக்கபலமாக இருந்து கொண்டிருக்கிறார்கள்.

நான் பொதுக்குழுவில், மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அடிக்கடி சொல்வதுண்டு. நாம் மிகவும் சுலபமாக வெற்றி பெற்றிட முடியாது. நான் ஏதோ சந்தேகத்தில் சொல்கிறேன் என்று நினைக்கக்கூடாது. நம் வெற்றியை தடுப்பதற்கு பல முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதாவது யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்று இன்றைக்கு மக்கள் முடிவெடுத்திருக்கிறார்கள்.

எவ்வளவு தான் கொள்ளை அடித்தாலும், எவ்வளவு தான் அக்கிரமம் செய்தாலும், எவ்வளவு தான் ஊழல் செய்து கொண்டிருந்தாலும், அ.தி.மு.க.வே ஆட்சியில் இருக்கட்டும். தி.மு.க. வந்தால் அடுத்து தோற்கடிக்கவே முடியாது. தொடர்ந்து அவர்களள் தான் ஆட்சியில் இருப்பார்கள் என்ற ஒரு பயம், அச்சம் இன்றைக்கு ஒரு சில குறிப்பிட்டவர்களுக்கு வந்திருக்கிறது.

அதனால்தான் திட்டமிட்டு வதந்திகளை ஊடகங்களில், பத்திரிகைகளில், சமூக வலைதளங்கள் மூலமாக செய்யும் பரப்புரைகளை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதையெல்லாம் இன்றைக்கு முறியடிப்பதற்கு விஞ்ஞான ரீதியாக வளர்ந்து வந்திருக்கும் தொழில்நுட்பத்தை நாமும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

அது ஒருபக்கம் இருந்தாலும், வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வருவது களப்பணியாளர்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அவர்களை பாக முகவர்களாக, பூத் ஏஜெண்டுளாக இருக்கக்கூடியவர்கள் எவ்வளவு விழிப்போடு இருக்க வேண்டும் என்பதற்கு எத்தனையோ தேர்தல்கள் உங்களுக்கு பாடம் கற்பித்து தந்திருக்கிறது.

எனவே உங்களுக்கு நான் அதிகம் சொல்ல வேண்டிய அவசியமில்லை. எனவே நம்முடைய இலக்கு என்னவாக இருக்க வேண்டும்? வெற்றி ஒன்றே நமது இலக்காக இருந்திட வேண்டும்.

கலைஞர் அவர்கள் அடிக்கடி சொல்வார்கள். அர்ஜுனன் வில்வித்தை கதையை அடிக்கடி சொல்லி இருக்கிறார்கள். அவர் வில்வித்தையில் மிகவும் தேர்ந்தவர். அர்ஜுனன் அந்த வில்லை எடுத்து விடுகிறபோது, அவனுக்கு மரத்திலிருக்கும் கிளை தெரியாது, மரத்திலிருக்கும் இலை தெரியாது, அவனது கண்ணுக்கு தெரிவது அந்த மரத்தில் உட்கார்ந்து இருக்கும் அந்த பறவையின் கழுத்து மட்டும் தான் தெரியும். அதுதான் அர்ஜுனன். அதனால்தான் அர்ஜூனன் வில்வித்தையில் தேர்ச்சி பெற்றவனாக விளங்கி இருக்கிறார் என்பதை கலைஞர் அடிக்கடி சொல்வார்கள்.

எனவே நமக்கு எந்த பிரச்சினையாக இருந்தாலும் சில வதந்திகளை பரப்புவார்கள். அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் நம்முடைய குறிக்கோளை, நம்முடைய கொள்கையை, நம்முடைய ஒரே உணர்வு, வெற்றி… வெற்றி… வெற்றி… என்பது தான்.

திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு என்று இருக்கும் ஒரு கட்டமைப்பு, நான் பெருமையோடு சொல்கிறேன். தமிழ்நாட்டில் அல்ல, இந்தியாவில் அல்ல, உலகத்திலேயே எந்த கட்சியிலும் இருக்கமுடியாது. இருக்க வாய்ப்பே இல்லை. அப்படி ஒரு கட்டமைப்பை அண்ணா அவர்கள் நமக்கு வகுத்துத் தந்து, தலைவர் கலைஞர் அவர்கள் அதை வழிநடத்தி, இன்றைக்கு நம்மிடத்தில் ஒப்படைத்து விட்டு சென்றிருக்கிறார்கள்.

எனவே அதை இன்றைக்கு நாம் வழி நடத்திக் கொண்டிருக்கிறோம். முதன்முதலில் நாம் ஆட்சிக்கு வந்தது 1967ஆம் ஆண்டு. 1949ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழக இயக்கத்தை உருவாக்கிய அண்ணா அவர்கள், அதற்குப் பிறகு 1957ஆம் ஆண்டு தான் முதன் முதலாக தேர்தல் களத்தில் ஈடுபட்டோம். 15 இடங்களில் முதல் தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்றத்தில் நுழைகிறோம், 1957ஆம் ஆண்டு. 1962ஆம் ஆண்டு 50 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குள் நுழைகிறோம். அதற்குப் பிறகு 1967-ல் அண்ணா தலைமையில் ஆட்சி பொறுப்பேற்று கம்பீரமாக சட்டமன்றத்தில் ஆட்சிப் பொறுப்பில் உட்காருகிறோம். 1967இல் ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு முன்னாள் முதலமைச்சர் பக்தவச்சலம் அவர்கள் இல்லத்தில் சென்று நிருபர்கள் மரியாதைக்காக சந்தித்தார்கள்.

நீங்கள் வெற்றி வாய்ப்பை இழந்துவிட்டீர்கள். தி.மு.க. வெற்றி பெற்றிருக்கிறது. ஆட்சிக்கு வந்திருக்கிறது. அண்ணா முதலமைச்சராக பொறுப்பேற்கிறார். அவரை வாழ்த்தி, அவரைப் பாராட்டி ஏதேனும் செய்தி சொல்ல முடியுமா என்று கேட்டார்கள். அப்போது அவர் வெற்றியை இழந்த சோகத்தில் இருந்த காரணத்தினால், எரிச்சலின் காரணமாக தமிழ்நாட்டில் விஷக்கிருமிகள் பரவிவிட்டன. அவற்றை அழித்து ஒழிக்கப்போகிறேன் என்று சொன்னார். சொன்னவர் நிலை என்ன ஆயிற்று என்று தெரியும். அதை பற்றி நான் பேச விரும்பவில்லை. அதேநேரத்தில் இன்னொன்றையும் சொன்னார். 1949 இல் கட்சியைத் தொடங்கி, 1957இல் முதன்முதலில் தேர்தல் களத்தில் நின்று, 1962இல் எதிர்க்கட்சியாக வந்து, 1967இல் ஆட்சியைப் பிடித்து விட்டார்கள். அதை பற்றி உங்கள் கருத்து என்ன என்று என்று நிருபர்கள் கேட்டபோது, அப்போது அவர் ‘தி.மு.க. காரன் என்றால் வேலை செய்வதில் கில்லாடி. அதனால் டீயை குடித்துவிட்டு வேலை செய்து வெற்றியை பிடித்திருக்கிறான்’ என்று சொன்னார். அதற்காக அப்போது டீ குடித்தோம் என்பதற்காக, இப்போது வரைக்கும் டீயை குடித்துவிட்டு வேலை செய்யுங்கள் என்று சொல்வதற்கு நான் தயாராக இல்லை. இப்போது காலத்தில் சூழ்நிலை வேறு. இருந்தாலும் அந்த உணர்வு நம் தொண்டர்கள் இடத்தில் இன்றைக்கும் இருந்து கொண்டிருக்கிறது.

நான் முதல் முதலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் வேட்பாளராக நின்றபோது, அப்போது தேர்தல் பணியை என் கூட இருந்து கவனித்தவர் மறைந்த ஆயிரம் விளக்கு உசேன் அவர்கள். அவர் ஆயிரம் விளக்கு பகுதியில் செயலாளராக இருந்தவர். அவர்தான் எல்லா இடத்திற்கும் என்னை அழைத்து விட்டு செல்வார். வீடுவீடாக படி ஏறுவோம். அங்கு அதிகம் அடுக்குமாடிக் குடியிருப்பு இருக்கும். ஒவ்வொரு குவார்ட்டர்ஸாக ஏறுவோம். குடிசை மாற்று வாரியம் அதிகம். அங்கு போலீஸ் குவார்டர்ஸ் அதிகமாக இருக்கும். அங்குதான் பீட்டர்ஸ் காலனி இருக்கிறது. அங்கு 3, 4, 5 மாடிகள் எல்லாம் இருக்கிறது. 3 முறை ஒவ்வொரு வீட்டிற்கும் நான் சென்று விட்டு வந்திருக்கிறேன்.

ஆனால் அப்போது நான் வெற்றி பெறும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. எதற்காக சொல்கிறேன் என்றால் அவ்வாறு உசேன் அழைத்து விட்டு செல்வார். நானும் கூட செல்வேன். என்னை அப்போது அதிகமாக அறிமுகம் கிடையாது. அதனால் ஒரு சில வாக்காளர்கள் இடத்தில் உசேன் அவர்கள் அறிமுகப்படுத்துவார், இவர்தான் கலைஞருடைய மகன் ஸ்டாலின். இவர்தான் வேட்பாளராக நிற்கிறார், அவருக்கு ஓட்டு போடுங்கள் என்று அறிமுகப் படுத்துவார். அப்போது அவருக்கு மூச்சு இளைக்கும். அதையெல்லாம் நினைத்துப் பார்க்கிறேன் எதற்காக சொல்கிறேன் என்றால் அப்படி எல்லாம் பாடுபட்டு இருக்கிறோம். நமது தோழர்கள் பாடுபட்டிருக்கிறார்கள்.

ஒருமுறை நள்ளிரவு 1 மணி இருக்கும். நானும் உசேன் அவர்களும் காரில் சுற்றுப் பயணம் செல்கிறோம். மறுநாள் தேர்தல் நடக்கின்றது. நம் தோழர்கள் எல்லாம் தயாராக இருக்கிறார்களா? பூத் வாசல்களில் நிழற்குடை போட்டுவிட்டார்களா? பந்தல் போட்டு விட்டார்களா? டேபிள் சேர் போட்டு விட்டார்களா? என்று ஆயிரம்விளக்குத் தொகுதியைச் சுற்றி வருகிறோம்.

அப்போது நம்முடைய கழகத் தோழர் வட்டச் செயலாளர் மகன் ஒருவர் ஓவியர். அவர் உதயசூரியன் சின்னத்தை அங்கு வரைந்து கொண்டிருக்கிறார். மழை பெய்து கொண்டிருக்கிறது. மழை பெய்கிறது, நிற்க முடியாது, பார்க்க முடியாது என்று நாங்கள் கிளம்பிச் சென்றுவிட்டோம். அவர் கோபத்தில் ஒரு வேட்பாளராக வரக்கூடியவர் என்னை பார்க்காமல் சென்றுவிட்டார் என்று பெயின்ட் பிரஸை கீழே போட்டுவிட்டு வீட்டில் சென்று படுத்துவிட்டார். மறுநாள் எங்களுக்கு அந்த செய்தி கிடைக்கின்றது. அவரது வீட்டிற்குச் சென்று சமாதானம் செய்து ‘மழை பெய்தது அதனால் தொந்தரவு செய்யக்கூடாது என்றுதான் சென்றோமே தவிர மற்ற காரணமல்ல’ என்று சொன்னோம்.

கழகத் தொண்டர்கள் அவ்வளவு உற்சாகமாக, உணர்வோடு இருக்கக்கூடியவர்கள் என்பதற்காக தான் சொன்னேனே, தவிர வேறல்ல. அப்படிப்பட்டவர்கள் படிப்படியாக இன்றைக்கு இந்த இயக்கத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு நம்முடைய கடமையை ஆற்றிக் கொண்டிருக்கிறோம். வேறு ஒன்றும் உங்களுக்கு அதிகம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

தேர்தல் களம் எப்படி இருக்கும் என்பது உங்களுக்கு தெரியும். இந்தியாவிலேயே மூன்றாவது இடத்தில் நாடாளுமன்றத்தில் நாம் அமர்ந்திருக்கிறோம் என்று சொன்னால், அதுவும் கலைஞருடைய மறைவிற்கு பிறகு அந்த வெற்றியை நாம் பெற்று இருக்கிறோம்.

கலைஞருடைய ஆசையெல்லாம் மீண்டும் நாம் ‘ஆட்சிக்கு வரவேண்டும். இப்போது இருக்கும் அ.தி.மு.க. ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும்’ என்று நினைத்துக் கொண்டிருந்தார். ஈரோட்டில் நடந்த மண்டல மாநாட்டை தலைவர் உடல் நோயுற்று வீட்டில் இருந்த நேரத்தில், நாம் அந்த மாநாட்டை நடத்தினோம். நான் அப்போது ஒரு உறுதிமொழி எடுத்துக்கொண்டேன். என்ன உறுதிமொழி என்றால் கலைஞர் காலடியில் நாம் ஆட்சியை கொண்டு சென்று ஒப்படைக்க வேண்டும் என்று நினைத்தேன். அந்த ஆசை நிறைவேறாமல் சென்று விட்டது. ஆனால் அவர் உயிரோடு இருந்து அவர் இடத்தில் ஒப்படைக்க முடியவில்லை என்று சொன்னாலும், அவர் உறங்கிக் கொண்டிருக்கும் அவருடைய நினைவிடத்தில் கொண்டு சென்று அந்த வெற்றி மாலையை வரவிருக்கும் தேர்தலில் வைப்பதற்கு நாமெல்லாம் சபதம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று உங்களை எல்லாம் இந்த நேரத்தில் அன்போடு கேட்டுக்கொண்டு, உங்களையெல்லாம் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் பெருமைப்படுகிறேன். நான் இன்றைக்கு ஒரு இயக்கத்தின் தலைவனாக இருக்கிறேன் என்பது உங்களுக்கு தெரியும். தலைவராக இருந்தாலும் தலைவன் என்று சொல்வதில் எனக்கு பெருமை இல்லை. தலைமைத் தொண்டன் என்று சொல்வதிலேயே பெருமைப்படுகிறேன் என்று கலைஞர் அவர்கள் அடிக்கடி சொல்வார்கள். அதே உணர்வோடு தான் நானும் என்னுடைய பயணத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறேன்.

தமிழ்நாடு முழுவதும் சுற்ற வேண்டிய நிலையில் இருக்கிறேன். நான் தான் வேட்பாளர் என்று கருத வேண்டிய அவசியம் இல்லை. இங்கு இருக்கும் அத்தனை பேரும் வேட்பாளர்கள் தான். அத்தனை பேரும், நீங்கள் ஸ்டாலினாக மாறி உங்கள் கடமையை ஆற்றுங்கள். நிறைவேற்றுங்கள் என்று கேட்டு, வாய்ப்புக்கு நன்றி சொல்லி விடைபெறுகிறேன்.”

இவ்வாறு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

banner

Related Stories

Related Stories