மு.க.ஸ்டாலின்

“முதல்வர் பழனிசாமியின் வறண்ட இதயத்தை அரசு ஊழியர்கள் என்றும் மறக்க மாட்டார்கள்” : மு.க.ஸ்டாலின் சாடல்!

"போராடும் போக்குவரத்துக் கழக ஊழியர்களை அழைத்துப் பேச முதலமைச்சர் பழனிசாமி முன்வருவாரா?" என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

“முதல்வர் பழனிசாமியின் வறண்ட இதயத்தை அரசு ஊழியர்கள் என்றும் மறக்க மாட்டார்கள்” : மு.க.ஸ்டாலின் சாடல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஏற்காமல் வஞ்சிக்கும் அ.தி.மு.க அரசைக் கண்டித்து போக்குவரத்து தொழிலாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், "தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தி இருப்பது தேர்தலுக்கான அறிவிப்பாக இருப்பினும் வரவேற்கத்தக்கதே! எனினும், போராடியவர்கள் மீது அடக்குமுறையை ஏவிய முதலமைச்சர் பழனிசாமியின் அரசு ஊழியர்கள் விரோத மனப்பான்மையை என்றும் மறக்கமாட்டார்கள்" என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தி இருப்பது வரவேற்கத்தக்கது. சென்ற முறை 58 வயதில் இருந்து 59 வயதாக மாநில அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை உயர்த்தியபோதே 60 வயதாக ஆக்கியிருக்க வேண்டும்.

தற்போது தேர்தல் வருகின்ற காரணத்தால் அதைக் கருத்தில் கொண்டு அரசியல் ரீதியான பலன்களை எதிர்பார்த்துத் தொடர்ந்து பல அறிவிப்புகளை வெளியிடும் முதலமைச்சர் பழனிசாமி, இப்போதுதான் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தி இருக்கிறார். அதே நேரத்தில், படித்து கல்வித் தகுதி பெற்று, தமது எதிர்காலத்தை நினைத்து, மிகுந்த கவலையுடனும் எதிர்பார்ப்புடனும் காத்துக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளை அதிகரித்து, அவர்களுக்கான வாய்ப்புகள் வேறு எந்த வழியிலும் பறிபோகாமல் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை வகுத்துச் செயல்படுத்துவதும் அவசியம்!

ஆனால், போராடும் போக்குவரத்துக் கழக ஊழியர்களை அழைத்துப் பேசுவதற்குக் கூட முதலமைச்சர் பழனிசாமிக்கு மனமில்லை. ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு உரிய பயன்களை அளிக்காமல் ஒருபுறம் நிந்தித்து - போராடும் அரசு ஊழியர்களைக் கொச்சைப்படுத்தி, வழிமறித்து, இரவோடு இரவாகக் கைது செய்து, அடக்கு முறைகளைக் கையாண்ட அரசு ஊழியர்கள் விரோத மனப்பான்மை கொண்ட - முதலமைச்சர் பழனிசாமியின் வறண்ட இதயத்தை அரசு ஊழியர்கள் என்றும் மறக்க மாட்டார்கள். இப்போதாவது போக்குவரத்துக் கழக ஊழியர்களை முதலமைச்சர் நேரில் அழைத்துப் பேசி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முன் வருவாரா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

banner

Related Stories

Related Stories