மு.க.ஸ்டாலின்

ஊழலற்ற ஆட்சியை அமைப்போம் எனும் மோடி OPS, EPSன் ஊழலை மட்டும் ஆதரிக்கிறாரா? - மு.க.ஸ்டாலின் கேள்வி!

என்.டி.டி.வி ஆங்கில தொலைக்காட்சிக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அளித்துள்ள நேர்காணலின் மூன்றாம் பாகத்தின் தொகுப்பு!  

ஊழலற்ற ஆட்சியை அமைப்போம் எனும் மோடி OPS, EPSன் ஊழலை மட்டும் ஆதரிக்கிறாரா? - மு.க.ஸ்டாலின் கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

செய்தியாளர்:- புதுச்சேரியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் விலகியுள்ளதால் பல்வேறு குழப்பங்கள் எழுந்துள்ளன. அரசுக்கே ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது. நீங்கள் அதை எப்படி பார்க்கிறீங்க?

தலைவர் மு.க.ஸ்டாலின்:- காங்கிரஸ் கட்சியிடம் கேட்க வேண்டிய கேள்வி இது.

செய்தியாளர்:- புதுச்சேரியில் தி.மு.க. அதிக இடங்களில் போட்டியிடுமா?

தலைவர் மு.க.ஸ்டாலின்:- அதிக அளவில் போட்டியிடனும் என்று அங்கே இருக்கின்ற கட்சி, அங்கே இருக்கின்ற கட்சி நிர்வாகிகள் சொல்லிக்கிட்டு இருக்காங்க, நாங்கள் தலைமைக் கழகத்தோடு அது குறித்து ஆலோசித்து முடிவெடுப்போம்.

செய்தியாளர்:- சமீபத்தில் அரசு நிகழ்ச்சியில் பிரதமர் இ.பி.எஸ். ஒ.பி.எஸ். கரங்களை தூக்கிப் பிடித்தது பற்றி உங்கள் கருத்து என்ன? அதில் என்ன தவறை காண்கிறீர்கள்?

தலைவர் மு.க.ஸ்டாலின்:- மோடியினுடைய தொடர் பிரச்சாரம், அவர் ஊழலற்ற ஆட்சியை அமைப்போம் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார். ஆனால் ஊழல் செய்து கொண்டு இருக்கக் கூடியவர் முதலமைச்சர் பழனிச்சாமி, அவர் மீது ஏற்கெனவே சி.பி.ஐயிடம் வழக்கு பதிவாகி இருக்கு. உயர் நீதிமன்றத்திற்கு போய், காண்டிராக்டில், தன்னுடைய சம்மந்திக்கு எல்லாம் 2000 கோடி, 3000 கோடி ரூபாய் டெண்டர் விட்டதில் ஊழல் நடந்திருக்கின்றது என்று எங்கள் வழக்கறிஞர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி. போட்ட வழக்கு, சென்னை உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு, சி.பி.ஐ. விசாரிக்கணும்னு உத்தரவிடப்பட்டு, அதனை பழனிசாமி போய் `ஸ்டே’ வாங்கி வைச்சு இருக்கார். வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது.

அதே மாதிரி ஓ.பன்னீர்செல்வம் மீது சொத்துக் குவிப்பு வழக்குகள் பல வெளிநாடுகளில் சொத்து வாங்கி வைத்துள்ளார் என்ற வழக்கும் உள்ளது. இதனை விசாரிக்கச் சொல்லி தமிழக ஆளுநரிடம் பெட்டிஷன் கொடுத்து இருக்கிறோம். அப்படிப்பட்ட கறை படிந்த கரங்கள்தான் அவர்களுடைய கரங்களைப் பிடித்து மோடி பிரதமராக இருக்கக் கூடியவர் ஒரு கையால் இ.பி.எஸ். இன்னொரு கையால் ஓ.பி.எஸ். கையைப்பிடித்து நின்று உள்ளார். இதனையெல்லாம் அவர் ஏற்றுக்கொள்கிறாரா? ஆதரிக்கிறாரா? என்றுதான் சந்தேகம் வருது! அதற்கு பிரதமர் உடந்தையாக இருக்கிறாரா என்கிற சந்தேகம் எண்ணம்தான் எனக்கு வருகிறது.

ஊழலற்ற ஆட்சியை அமைப்போம் எனும் மோடி OPS, EPSன் ஊழலை மட்டும் ஆதரிக்கிறாரா? - மு.க.ஸ்டாலின் கேள்வி!

ஜனநாயகத்தைப் படுகுழியில் தள்ளும் பா.ஜ.க. அரசு!

செய்தியாளர்:- அவர்கள் தண்டிக்கப்படவில்லை என்று தானே பலரும் சொல்லுகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் அப்படி சொல்வது முறையாக இருக்குமா?

தலைவர் மு.க.ஸ்டாலின்:- தீர்ப்பு எல்லாம் வந்துவிட்டதா? வரவில்லையா? என்பது இல்லை. அப்புறம் எப்படி உயர் நீதிமன்றம் இதனை சி.பி.ஐ. விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லணும்.

செய்தியாளர்:- மத்தியில் பா.ஜ.க. அரசின் செயல்பாடுகள் குறித்து எப்படி பார்க்கிறீர்கள்?

தலைவர் மு.க.ஸ்டாலின்:- மத்திய ஆட்சி மிகுந்த பலத்தோடு இருக்கின்ற காரணத்தால் ஒரு சர்வாதிகாரத்தனத்தோடு ஆட்சியை நடத்திக்கிட்டு இருக்காங்க. இந்த மூன்று வேளாண் சட்டங்களை நாடாளுமன்றத்தில் முறையா ஓட்டெடுப்பு கூட நடத்தாமல் ஜனநாயகத்தை படுகுழியில் தள்ளி இருக்காங்க. அது மட்டுமில்லாமல் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய மெஜாரிட்டி ஆட்சியைக்கூட கவிழ்க்கக் கூடிய ஒரு சூழ்நிலையை ஜனநாயகத்தையே படுகுழியில் தள்ளக்கூடிய சூழ்நிலையை தொடர்ந்து செய்துக்கொண்டு இருக்கிறார்கள். இது ஜனநாயகத்திற்கு முறையல்ல, நாட்டிற்கு நல்லதல்ல.

நாங்கள் எதிர்பார்ப்பதைவிட அதிக அளவு வெற்றி கிடைக்கும்!

செய்தியாளர்:- 2019 தேர்தலில் தி.மு.க. பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றது. அது பா.ஜ.கவுக்கு எதிராக தெளிவான வாக்காக மக்கள் பார்த்தார்களா? இந்த முறையும் அதே மாதிரி வெற்றி கிடைக்கும்னு நினைக்கிறீர்களா? இங்கே, பீகார் தேர்தலை பார்த்த பிறகு இது சவாலான தேர்தலா இருக்கும் என்று நினைக்கிறீர்களா?

தலைவர் மு.க.ஸ்டாலின்:- தமிழ்நாட்டைப் பொறுத்த வரை, நாடாளுமன்றத் தேர்தலை மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் கட்சியுடன் கூட்டணி வைத்துதான் அவர்கள் தேர்தலை சந்தித்தார்கள். அதனால் இது பா.ஜ.க.வுக்கு மட்டும் தோல்வியில்லை. அ.தி.மு.க.வுக்கும் படுதோல்விதான் அந்தத் தேர்தலைப் பொறுத்த வரைக்கும். நாடாளுமன்றத் தேர்தல் நடந்த போதே கிட்டத்தட்ட 22 இடங்களுக்கு சட்டமன்றத் தேர்தல் நடந்தது. அதில் 13 இடங்களில் தி.மு.கழகம்தான் வெற்றி பெற்றது. பல இடங்களில் அவர்கள் சீட்டையே இழந்திருக்கிறார்கள். ஆளுங்கட்சி சீட்டை இழந்திருக்கிறார்கள். அதற்குப் பிறகு உள்ளாட்சித் தேர்தல் நடந்திருக்கு. கிராம அளவில் நடந்தது. அதில் 60 சதவிகிதம் தி.மு.கழகம்தான் வெற்றி பெற்றது.

இதுதான் இருக்கக்கூடிய நிலை. நாடாளுமன்றத் தேர்தல் நடந்தபோது இடைத்தேர்தல் நடந்தது. அதிலேயும் பெரும்பான்மை இடங்களில் தி.மு.கழகம் தான் வெற்றி பெற்றது. அதற்குப் பிறகு உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. அதில் 60 சதவீதம் வெற்றி பெற்று இருக்கிறோம். இதில் வந்து நாங்கள் எதிர்பார்த்ததை விட நிச்சயம் அதிக அளவில் வெற்றி கிடைக்கப் போகுது!

செய்தியாளர்:- நீங்கள் வாக்களித்துள்ள திட்டங்களை அ.தி.மு.க. அரசு ஏற்கெனவே அமல்படுத்தி இருக்காங்க. குறிப்பாக விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி நீங்கள் புகார் தெரிவிக்கலாம் என்று கூறியதும் மொபைல் மூலம் புகார் தெரிவிக்கலாம் என்று அறிவித்து இருக்காங்க, இதனை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

கடன் தள்ளுபடி தீர்ப்பை எதிர்த்து அ.தி.மு.க. அரசு மனு!

தலைவர் மு.க.ஸ்டாலின்:- அதாவது நான் சொன்னதை அவர்கள் வழிமொழிந்து இருக்காங்க. அதாவது நான் செய்வேன் என்பதை அவர்கள் சொல்லாமல் செய்துகாட்டி இருக்கிறாங்க. நான் ஒரே கேள்வி கேட்கிறேன், இதே விவசாயிகளுக்கு இப்போது கடனை தள்ளுபடி செய்வேன்னு சொல்லி இருக்கிறாங்க. 2006-ல் கலைஞர் தலைமையிலான தி.மு.க. ஆட்சிக்கு வந்த போது, சொன்ன வாக்குறுதி அது. அப்போதே அதை நிறைவேற்றினார்கள். 7 ஆயிரம் கோடி ரூபாயை இப்போது நான் வந்து, பொன்னேரி தொகுதி கிராம சபைக் கூட்டத்தில் இதை நான் சொன்னேன். உடனே, முதலமைச்சர், நாங்கள் செய்ய நினைப்பதையெல்லாம் அவர் அறிவித்துக் கொண்டிருக்கிறார் என்று கோமாளித்தனமாகச் சொன்னார். இப்போது அறிவித்துள்ளார். நான் கேட்கிறேன், ‘நீங்கள் ஆட்சிக்கு வந்து இப்போது 10 ஆண்டுகள் ஆயிற்று. இதே விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்யுங்கள் என்று கோர்ட்டுக்கே சென்று வழக்கு தொடுத்தார்கள்.

சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பு கொடுத்தது. என்ன தீர்ப்பு என்றால், கடனை உடனே ரத்து செய்ய வேண்டும், தள்ளுபடி செய்ய வேண்டும். இது குறித்து 3 மாதங்களில் எங்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று சொன்னது. ஆனால், இந்த அ.தி.மு.க. அரசு அந்தத் தீர்ப்பை எதிர்த்து தடை வாங்கியது. எங்கே என்றால் உச்ச நீதிமன்றத்தில். அப்போதே கடன் தள்ளுபடி கொடுத்திருக்க வேண்டும் அல்லவா?’ இப்போது தேர்தல் வருவதால் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்திருக்கிறார்கள். அதே மாதிரி, ‘100 நாள்களில் பணிகளை முடிப்போம். கோரிக்கை மனுக்களை கொடுங்கள்’ என்று நாங்கள் சொன்னோம், ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற நிகழ்ச்சி மூலம் மனுக்களை பெறுகிறோம்.

உடனே, பழனிச்சாமி என்ன சொல்கிறார் என்றால், ஒரு எண்ணைக் கொடுத்து - 1100 என்ற எண்ணைக் கொடுத்து, அதன் மூலம் தொடர்பு கொண்டு மனுக்களைத் தாருங்கள் என்று சொல்லியிருக்கிறார். இது ஏற்கனவே அம்மையார் ஜெயலலிதா அவர்கள் அறிவித்து தொடங்கிய திட்டம் இது. இதுவரை கடந்த 4 ஆண்டுகளில் ஏன் அந்தத் திட்டத்தை செய்யவில்லை? என்ன காரணம்? ஜெயலலிதா இறந்த பிறகாவது செய்திருக்க வேண்டும். ஏன் செய்ய வில்லை. இப்போது செய்வதற்கு என்ன காரணம்? நான் சொன்ன திட்டம் மக்களைச் சென்றடைந்துள்ளது. மக்களிடம் நல்ல ‘ரெஸ்பான்ஸ்’ இருக்கிறது. மக்கள் அதைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அதை ‘டைவர்ட்’ செய்வதற்காக பழனிச்சாமி செய்கிறார். அது மக்களிடம் நிச்சயம் எடுபடாது.

banner

Related Stories

Related Stories