மு.க.ஸ்டாலின்

“முன்பு சசிகலாவின் அடிமை.. இப்போது மோடியின் அடிமை” - NDTV நேர்காணலில் அதிமுக மீது மு.க.ஸ்டாலின் தாக்கு!

மக்களே முன் வந்து மனுக்களை கொடுக்கிறார்கள். மிகுந்த நம்பிக்கையோடு இருக்கிறார்கள். அதனால் இந்தத் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு.

“முன்பு சசிகலாவின் அடிமை.. இப்போது மோடியின் அடிமை” - NDTV நேர்காணலில் அதிமுக மீது மு.க.ஸ்டாலின் தாக்கு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

“ஊழல் கறை படிந்த கரங்களுடன் கைகோர்த்துள்ள பிரதமர் மோடி தமிழக மக்களுக்கு எவ்வளவு திட்டங்களை அறிவித்தாலும் தமிழ்நாட்டு மக்கள் தெளிவாக இருப்பதால் ஏமாறமாட்டார்கள். தி.மு.கழக கூட்டணிக்கு வாக்களிப்பதில் உறுதியாக இருக்கிறார்கள்’’ என்று `என்.டி.டி.வி. ஆங்கில செய்தி தொலைக்காட்சி’க்கு அளித்த சிறப்பு நேர்காணலில் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

‘என்.டி.டி.வி. ஆங்கில செய்தித் தொலைக்காட்சி’ யில் நேற்று முன்தினம் (17.2.2021) தலைவர் மு.க.ஸ்டாலின் அதன் செய்தியாளருக்கு சிறப்பு நேர்காணல் அளித்தார்.

"தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரும் வெற்றி பெற்ற நிலையில் நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்காக அயராது சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்.

தம்முடைய கடுமையான நேரத்திற்கிடையேயும் ‘என்.டி.டி.வி. ஆங்கில செய்தித் தொலைக்காட்சி’க்கு சில மணித்துணிகள் ஒதுக்கி பேட்டியளிக்க முன்வந்தமைக்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்" என குறிப்பிட்டு என்.டி.டி.வி. செய்தியாளர் தமது பேட்டியை துவக்கினார்.

“முன்பு சசிகலாவின் அடிமை.. இப்போது மோடியின் அடிமை” - NDTV நேர்காணலில் அதிமுக மீது மு.க.ஸ்டாலின் தாக்கு!

மக்களே முன்வந்து எங்களிடம் மனு கொடுக்கிறார்கள்!

செய்தியாளர்:- நீங்கள் ஆட்சி அமைத்தால் 100 நாட்களில் குறைகளுக்குத் தீர்வு காணப்படும் என்று சொல்லி தனித்துவமான முறையில் மனுக்களைப் பெற்று வருகிறீர்கள். இதற்கு எப்படிப்பட்ட வரவேற்பு கிடைக்கிறது? இதை அதீத நம்பிக்கை என்று எடுத்துக்கொள்வதா அல்லது தவிப்பு என்று எடுத்துக்கொள்வதா?

தலைவர் மு.க.ஸ்டாலின்:- ஏற்கெனவே நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு தமிழகம் முழுவதும் 12,500க்கும் மேற்பட்ட இடங்களில் ஊராட்சி சபைக் கூட்டங்களை நடத்தியுள்ளோம். அதன் பலனாக நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளில் வெற்றியைப் பார்த்தோம். அதே மாதிரிதான் இப்போது நடந்துகிட்டு இருக்கிறது. ஆட்சிக்கு வந்ததும் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வு; அதாவது இதற்கு பல கோடி ரூபாய் செலவு செய்து பெரிய திட்டங்கள் போட்டு, தொழிற்சாலைகள் கொண்டு வருதல் போன்ற, அந்த மாதிரி பிரச்சினைகள் இல்லை.

இதன் நோக்கமே குடிநீர், விளக்கு, சாலை, அதே மாதிரி பேருந்து, ஸ்கூல், மருத்துவமனை, பட்டா பிரச்சினை, நூறு நாள்வேலை திட்டம், ஓய்வூதியம் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதுதான். இந்த மாதிரி அடிப்படைப் பிரச்சினைகளுக்கு பத்துவருடங்களாக தீர்வு கிடைக்காத நிலையில்தான் இருக்கு. அ.தி.மு.க. ஆட்சியில் கிராம சபைக் கூட்டமே நடக்கவில்லை. நான்கு முறையும் நடக்கவில்லை. அரசு மரபுப்படி நான்கு முறை நடத்திட வேண்டும். காந்தி ஜெயந்தி, சுதந்திர நாள், குடியரசு நாள், மே நாள். அவர்கள் நடத்தவில்லை. அதனால்தான் நாங்கள் இதனை மக்கள் முன்பு எடுத்துச் சென்றோம். இது மக்களிடையே பெரிய எழுச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மக்களே முன் வந்து மனுக்களை கொடுக்கிறார்கள். மிகுந்த நம்பிக்கையோடு இருக்கிறார்கள். அதனால் இந்தத் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு.

முன்பு சசிகலாவின் அடிமை! இப்போது மோடியின் அடிமை!

செய்தியாளர்:- வருகின்ற தேர்தல் முழுக்கவும் மு.க.ஸ்டாலின் மற்றும் பழனிசாமி இடையேயான போட்டியாகத்தான் இருக்குமா? ஒரு போட்டியாளராக, நான்கு ஆண்டுகளுக்கு முந்தைய பழனிசாமியையும் தற்போதைய பழனிசாமியையும் பற்றிய உங்கள் மதிப்பீடு என்ன?

தலைவர் மு.க.ஸ்டாலின்:- நான் என்னுடைய போட்டியாளராக பழனிசாமியை நினைக்கவே இல்லை! எனக்குத் தகுதியான போட்டியில்லை என்பதால்தான், முதலமைச்சர் பழனிசாமி, தன்னை முன்னிறுத்திக் கொள்ள- விளம்பரப்படுத்திக் கொள்ள 1000 கோடி ரூபாய் அரசு பணத்தை விளம்பரங்கள் மூலம் செலவு செய்து வருகிறார். அவருடைய நிலவரம் பற்றி உங்களுக்குத் தெரியும். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கூவத்தூரில் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்ட போது பழனிசாமி, திருமதி.சசிகலாவின் அடிமையாக இருந்தார். அவர் சிறைக்குச் சென்ற பிறகு டி.டி.வி.தினகரனின் அடிமையாக இருந்தார். இப்போது பிரதமர் நரேந்திர மோடியிடம், பா.ஜ.கவிடம் அடிமையாக இருக்கிறார். பழனிசாமியிடம் வேறு எந்த மாற்றமும் இல்லை!

செய்தியாளர்:- முதலமைச்சர் பழனிசாமி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்தான் என்னைத் தேர்ந்தெடுத்தார்கள் என்று சொல்கிறார். சசிகலாவோ, தினகரனோ என்னைத் தேர்ந்தெடுக்கவில்லை என்று சொல்கிறாரே?

தலைவர் மு.க.ஸ்டாலின்:- அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஜெயலலிதாவைத்தான் தேர்ந்தெடுத்தார்கள். முதலமைச்சராக ஜெயலலிதா வர வேண்டும் என்று மக்கள் தேர்ந்தெடுத்தார்கள். ஆனால் அதற்குப் பிறகு சசிகலாதான் முதலமைச்சராக ஆக வேண்டியது. ஆனால் சசிகலா சிறைக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலை வந்து விட்டதால், தனக்கு ஒரு அடிமையாக ஒருவர் இருக்க வேண்டும் என்பதால்தான் இவரைத் தேர்ந்தெடுத்தார். அதனையே அவர் பெருமையா பேசிக்கிட்டு இருக்கிறார் அவ்வளவுதான்.

செய்தியாளர்:- நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு சிறையிலிருந்து சசிகலா வெளியே வந்து இருக்கிறார். இது மக்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துமா?

தலைவர் மு.க.ஸ்டாலின்:- எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது. வேண்டும் என்றால் ஓ.பன்னீர்செல்வத்துக்கு, பழனிசாமிக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஏற்படுத்தாமல் இருக்கலாம். அது வேறு! ஜெயலலிதா இருந்தபோது கடந்த சட்டமன்றத் தேர்தலில் எங்களுக்கும் அவங்களுக்கும் உள்ள வாக்கு வித்தியாசம் அப்போதே 1.1 சதவிகிதம்தான்!

செய்தியாளர்:- அ.தி.மு.கவும், அ.ம.மு.கவும் இணைந்தால் தி.மு.கவிற்கு பாதிப்பு ஏற்படுமா?

தலைவர் மு.க.ஸ்டாலின்:- அதைப்பற்றி நாங்கள் நினைக்கவே இல்லை. மக்களை ஏமாற்ற மோடி இங்கே வருகிறார்!

“முன்பு சசிகலாவின் அடிமை.. இப்போது மோடியின் அடிமை” - NDTV நேர்காணலில் அதிமுக மீது மு.க.ஸ்டாலின் தாக்கு!

செய்தியாளர்:- தமிழ்நாட்டில் பா.ஜ.க காலூன்ற கடுமையாக முயன்று வருகிறது. பிரதமர் சென்னைக்கு வருகிறார். தமிழ்நாட்டில் பல திட்டப் பணிகளுக்கான ரூ.60,000 கோடியை மத்திய அரசு பட்ஜெட்டில் ஒதுக்கி உள்ளது. சென்னைக்கு மட்டும் ரூ.5000 கோடி ஒதுக்கி உள்ளது. இது அ.தி.மு.க. கூட்டணிக்கு உதவி புரியுமா?

தலைவர் மு.க.ஸ்டாலின்:- அதாவது தேர்தல் நேரத்தில் கையாளுகின்ற யுக்திதான் இது. அதே மாதிரிதான் சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமரே வந்து எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். இதுவரை ஒரு செங்கல் கூட அங்கே எடுத்து வைக்கவில்லை. அதே மாதிரிதான் இப்போது மக்களை ஏமாற்றுவதற்காக இங்கே வருகிறார். இன்னும் வருவார். பல திட்டங்களை அறிவிக்கப் போகிறார். ஆனால் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். அதனால் இவையெல்லாம் தமிழகத்தில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

செய்தியாளர்:- கொரோனாவை அரசு நல்ல முறையில் கையாண்டுள்ளது. பழனிசாமிக்கு எதிராகப் பெரிய அளவில் இதில் கோபம் இல்லை. தொடக்கத்தில் சிறிது தடுமாறினாலும் ஒப்பீட்டளவில் நன்றாகவே செயல்பட்டுள்ளார். இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

தலைவர் மு.க.ஸ்டாலின்:- கொரோனாவே தமிழ்நாட்டிற்குள் வரவே வராது. எங்கள் அம்மா ஆட்சியில் ஒருவர் கூட பலியாக மாட்டார்கள். அப்படியே வந்தாலும் நாங்கள் தடுத்திடுவோம், அப்படின்னு சொன்னார்கள். ஆனால் 7 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளார்கள் என்பதற்கு கணக்கு இருக்கிறது. அதனையும் இந்த ஆட்சி மறைத்து இருக்கின்றது. இந்த அரசாங்கம் ‘கோவிட்’ தொற்றுநோயையும் பயன்படுத்தி அதிலும் கொள்ளை அடித்த ஆட்சிதான் இந்த ஆட்சி. இதனால் கலெக்ஷன், கரப்ஷன், கமிஷன்தான் அவர்களின் கொள்கையாக இருந்துக்கிட்டு இருக்கு. அதனையும் நாங்கள் மக்களிடத்தில் முன் வைப்போம்.

அடுத்து மத்திய அரசுக்கு அடிமையா, அடிபணிந்து அவர்கள் சொல்வதையெல்லாம் கேட்டுக்கிட்டு, தமிழ்நாட்டின் உரிமைகளை எல்லாம் விட்டுக் கொடுக்கின்ற சூழ்நிலையில்தான் இந்த ஆட்சி நடந்துக்கிட்டு இருக்கு. அதே மாதிரி தமிழுக்கு வரும் ஆபத்தை கண்டு கொள்வதில்லை. இந்திக்கு, சமஸ்கிருதத்துக்கு முக்கியத்துவம் அளிப்பதில் அதே மாதிரி மத்திய அரசு சொல்வதை எல்லாம் இவங்க கேட்டுக்கிட்டு இருக்காங்க. குறிப்பா `நீட்’ பிரச்சினை, அதேமாதிரி விவசாயப் பிரச்சினை, இதில் எல்லாம் மத்திய அரசுக்கு இந்த அரசு ஜால்ரா போட்டுக்கிட்டு இருக்கு. இதையெல்லாம் நாங்கள் மக்கள் மத்தியில் முன் வைப்போம். அதனால் நீங்கள் நினைக்கின்ற மாதிரி இல்லை. இந்த ஆட்சி மீது மக்களுக்கு துளி அளவு கூட நம்பிக்கை இல்லை.

banner

Related Stories

Related Stories