மு.க.ஸ்டாலின்

“உலகிலேயே கட்டமைப்புள்ள ஒரே கட்சி திராவிட முன்னேற்றக் கழகம்தான்” - தலைவர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

என்.டி.டி.வி ஆங்கில தொலைக்காட்சிக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அளித்துள்ள நேர்காணலின் இரண்டாம் பாகத்தின் தொகுப்பு!

“உலகிலேயே கட்டமைப்புள்ள ஒரே கட்சி திராவிட முன்னேற்றக் கழகம்தான்” - தலைவர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அரசியலில் யாரையும் திணிக்க முடியாது!

செய்தியாளர்:- உங்களது மகன் உதயநிதி ஸ்டாலின் அவர்களை சுட்டிக்காட்டி பழனிசாமி அவர்கள், தி.மு.க. குடும்பக் கட்சி என்று அழைக்கிறார். இதற்கு உங்கள் பதில் என்ன? பன்னீர்செல்வம் மற்றும் பழனிசாமி போன்ற சாதாரண கட்சிக்காரர்கள் கூட கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு வர முடியும். முதலமைச்சராக முடியும் என்கிறார்கள்?

தலைவர் மு.க.ஸ்டாலின்:- அரசியலில் யாரையும் திணிக்க முடியாது. அவங்களா வந்தால்தான் அரசியலில் முன்னுக்கு வர முடியும். அவர் கட்சியினருக்கு புதியவர் இல்லை. அவர் நீண்ட ஆண்டு காலமாக அரசியலில், ஆயிரம் விளக்கில் தேர்தலில் நிற்கும் போதும் சரி, தலைவர் கலைஞர் அவர்கள், துறைமுகத்தில், சேப்பாக்கத்தில் தேர்தலில் நிற்கும் போதும் சரி, அங்கெல்லாம் சென்று தேர்தல் வேலை பார்த்து இருக்கிறார். அதே மாதிரி என்னுடைய தொகுதியில் தேர்தல் வேலைபார்த்து இருக்கிறார். இப்படிதான் படிப்படியாக வந்து இப்போது இளைஞர் அணியில் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்று இருக்கிறார். தலைவரா ஒன்றும் உட்கார வைத்து விடவில்லை.

நான் அரசியலில் நுழையும் போது கூட இதையே தான் சொல்லிக்கிட்டு இருந்தாங்க. நாங்கள் எல்லாம் அரசியலில் நுழையவில்லை. அரசியலில் பிறந்து இருக்கிறோம். நாங்கள் எல்லாம் அரசியலில் பிறந்து அப்படியே ஐக்கியமாகி வந்திருக்கிறோம். அரசியலில் யாரையும் திணிக்க முடியாது. தி.மு.கவைப் பொறுத்தவரை அரசியலில் யாரையும் திணிக்க முடியாது. அதுதான் உண்மை.

செய்தியாளர்:- ஆட்சியின் தலைமைப் பொறுப்புக்கு அவர் வரக்கூடும் என்று கருதுகிறீர்களா?

தலைவர் மு.க.ஸ்டாலின்:- அதை எப்படி இப்போது சொல்ல முடியும்! அது திறமையைப் பொறுத்து இருக்கு.

செய்தியாளர்:- இம்முறை, நிறைய இளம், முதல் தலைமுறை வாக்காளர்கள் இருக்கிறார்கள். வேலை வாய்ப்பு, வேலை வாய்ப்பின்மை ஆகியவை முக்கிய சவால்கள். இதற்கு என்ன புதிய பயனுள்ள திட்டங்களை வைத்துள்ளீர்கள்? தி.மு.க. கல்வித்தரத்தை உயர்த்துவதிலோ, வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதிலோ, குடும்ப வருமானத்தை உயர்த்துவதிலோ போதிய கவனம் செலுத்துவதில்லை என்னும் விமர்சனத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்? இதற்கு உங்களிடம் என்ன திட்டங்கள் உள்ளன?

தலைவர் மு.க.ஸ்டாலின்:- நிச்சயமாக, கல்வித் தரத்தை உயர்த்துவதற்கு, வேலைவாய்ப்பை பெருக்குவதற்கு, தொழிற்சாலைகளை பெருக்குவதற்கு அதற்கான திட்டங்களை எல்லாம் நாங்கள் வகுத்து வைத்து இருக்கிறோம். அவைகள் எல்லாம் நிச்சயமாக தேர்தல் அறிக்கையில் முறையாக நாங்கள் வெளியிடுவோம்.

செய்தியாளர்:- நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறியுள்ள கமலஹாசனுக்கும் செல்லும் இடங்களில் எல்லாம் கூட்டம் கூடுகிறது. அவரது கட்சியுடன் தி.மு.க. கூட்டணி வைத்துக்கொள்ள முயற்சிக் கிறதா?

தலைவர் மு.க.ஸ்டாலின்:- இதற்கெல்லாம் நான் ஏற்கெனவே பதில் சொல்லி இருக்கிறேன். அது மாதிரி எதுவும் முயற்சி செய்யவில்லை. அவரும் அது மாதிரி முயற்சி செய்யவில்லை. அதைப்பற்றி கேள்விகூட எழவில்லை. அவரைப் பொறுத்தவரை நல்ல நண்பர், நல்ல நடிகர். இப்போது ஒரு கட்சிக்குத் தலைவராக இருந்து வருகிறார் அவ்வளவுதான்.

உலகத்திலேயே கட்டமைப்புள்ள ஒரே கட்சி தி.மு.கழகம்!

செய்தியாளர்:- தி.மு.க. நல்ல கட்டமைப்பில் உள்ளது. ஆனால் பிரசாந்த் கிஷோருடன் இணைந்துள்ளீர்கள். அது எப்படி பயனளித்திருக்கிறது? புதிதாக நீங்கள் கற்றுக்கொண்ட அல்லது தெரிந்துகொண்ட விஷயங்கள் என்ன?

தலைவர் மு.க.ஸ்டாலின்:- இந்தியாவில் உள்ள, உலகத்திலேயே கட்டமைப்புள்ள ஒரு கட்சி எதுன்னு கேட்டால், அது தி.மு.கழகம்தான். முறையாக தேர்தல் நடத்தி, கிளைக் கழகம், வட்டம், நகரக் கழகமாகட்டும், பகுதிக் கழகமாகட்டும், மாவட்டக் கழகமாகட்டும், தலைமைக் கழகமாகட்டும் எல்லாமே முறைப்படி தேர்தல் நடத்தி தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்தான். இதுவரை எந்தக் கட்சியும் இப்படி முழுமையாக நடத்தியதாக எனக்குத் தெரிந்து எதுவுமில்லை. தி.மு.க.தான் நடத்தி இருக்கு, இதனை எப்போதுமே சொல்வார்கள்.

இதே பிரசாந்த் கிஷோர் கூட எங்களிடம் வந்து சொன்னது. எனக்கு எந்த வேலையும் கிடையாது. உங்கள் கட்சியில் அவ்வளவு கட்டமைப்பு உள்ளது என்று கூறினார். எத்தனையோ மாநிலங்களில் நான் வேலை செய்து இருக்கிறேன். இவ்வளவு அருமையாக ஒரு கட்டமைப்பு இங்குதான் இருக்கு என்று சொன்னார். அவரை நாங்கள் எதற்காக தேர்ந்தெடுத்து இருக்கிறோம் என்றால் இப்போது இருக்கின்ற விஞ்ஞான வளர்ச்சியைப் பொறுத்தவரைக்கும் சிலவற்றை நாமும் தெரிந்துகொள்ள வேண்டி இருக்கு. அதனை நமக்குக் கீழே இருப்பவர்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டி இருக்கு. அதனால் அதனைப் பயன்படுத்திக்கிட்டு இப்போது இருக்கின்ற ஐ.டி. துறையால் நாட்டின் முன்னேற்றம் வளர்ந்துகிட்டே போய்க்கிட்டு இருக்கு நாங்கள் அதற்காகத்தான் அவரை பயன்படுத்துகிறோமே தவிர, கொள்கைக்காகவோ, இலட்சியத்திற்காகவோ நாங்கள் பயன்படுத்தவில்லை.

banner

Related Stories

Related Stories