மு.க.ஸ்டாலின்

“ஊழலற்ற ஆட்சியை அளிப்பதே லட்சியம்.. ஊழல் அ.தி.மு.க ஆட்சியை அகற்ற தயாராவீர்” - மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

கொள்கையை இழந்து எங்கள் லட்சியத்திலிருந்து என்றைக்கும் பின்வாங்க மாட்டோம் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

“ஊழலற்ற ஆட்சியை அளிப்பதே லட்சியம்.. ஊழல் அ.தி.மு.க ஆட்சியை அகற்ற தயாராவீர்” - மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின் இரண்டாம் பாகம்

செய்தியாளர்: இந்த தேர்தலுக்கு என்ன இலக்கு?

கழகத் தலைவர்: 234 தொகுதிகளிலும் வெற்றி பெறவேண்டும் என்ற ஒரே இலக்கோடுதான் இந்த களத்தில் இறங்கியிருக்கிறோம். அதே நேரத்தில் தமிழகம் ஒரு 50 ஆண்டு காலமாக - இந்த 10 வருட ஆட்சியில் பின்னுக்கு போய் இருக்கக் கூடிய ஒரு சூழ்நிலை வந்திருக்கிறது. அதை சரி செய்து சரியான நிலைக்கு கொண்டு வரவேண்டும் என்பதுதான் இலக்கு!

செய்தியாளர்: இதுதான் என்று கூட்டணி உறுதியாகியுள்ளதா? இதுதான் இறுதியான கூட்டணியா?

கழகத் தலைவர்: நிச்சயமாக! உறுதியான ஒன்று, முடிவான ஒன்று. நாடாளுமன்றத் தேர்தலில் என்ன கூட்டணி அமைத்தோமோ; அதே கூட்டணி தொடருகிறது. அதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை.

செய்தியாளர்: மேலும் விரிவடைய வாய்ப்புள்ளதா? மேலும் கட்சிகள் வர வாய்ப்புள்ளதா?

கழகத் தலைவர்: தேர்தல் அறிவிப்பு வந்ததற்கு பிறகு வருவதற்கான வாய்ப்பு உள்ளது. இப்போது இருக்கிற சூழ்நிலையை பொறுத்தவரையில் எங்கள் கூட்டணி பெரிய கூட்டணி, மெகா கூட்டணி. அதனால் இடங்களை பகிர்ந்து கொடுப்பது என்பது மிகவும் சிரமமான காரியம்! ஆனாலும் பகிர்ந்து கொடுத்து விடுவோம்! ஏனென்றால் கொள்கையில் ஒன்றாக இருக்கிறோம். ஒரே இலக்கு, ஒரே லட்சியத்தோடு இருப்பதனால் அதிலே சிக்கல் வருவதற்கு வாய்ப்பே இல்லை. மேலும் கட்சிகள் வரும்போது அந்தச் சிக்கல் வருவதற்கு வாய்ப்புள்ளது. அதனால் வேண்டாம் என்று சொல்லவில்லை.

செய்தியாளர்: மனம் இருந்தாலும் இட மில்லை என்கிறீர்களா?

கழகத் தலைவர்: ஆமாம்.

செய்தியாளர்: ஒரு சிலர் மத்தியில் இந்த தேர்தலில் தி.மு.க. தனித்தே வெற்றி பெறமுடியும் என்ற பார்வை உள்ளதே?

கழகத் தலைவர்: அது மக்களிடம் உள்ளது. கட்சித் தோழர்களிடமும் இருக்கிறது. இருந்தாலும் அதை நான் ஊக்கப்படுத்த தயாராக இல்லை.

செய்தியாளர்: ஏன்?

கழகத் தலைவர்: ஏனென்றால் நாடாளுமன்றத் தேர்தலில் இருந்து ஒரு கூட்டணி அமைத்து எல்லா விஷயங்களிலும் மக்களுக்கு இழைக்கப்படுகிற கொடுமைகள் அக்கிரமங்கள், மத்திய அரசு, மாநில அரசு செய்கிற அக்கிரமங்கள். மாநில உரிமைகள் போய் கொண்டிருக்கிற அந்தப் பிரச்சினைகள் விவசாயப் பிரச்சினைகள், மாணவர்கள் பிரச்சினைகள் - இப்படி பல பிரச்சினைகளுக்கு மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகள் ஒருங்கிணைந்து போராட்டங்கள். ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதங்கள், தொடர்ந்து நடத்திக் கொண்டு வருகிறோம். உள்ளாட்சித் தேர்தலிலும் இந்தக் கூட்டணிதான் தொடர்ந்தது. அதனால் இந்தக் கூட்டணி தொடரவேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. இது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

செய்தியாளர்: காங்கிரசுடன்?

கழகத் தலைவர்: நிச்சயமாக. அதிலே எதுவும் சந்தேகமில்லை.

செய்தியாளர்: காங்கிரஸ் கட்சி குறித்து சில மாறுபாடுகள், யூகங்கள் வருகிறதே?

கழகத் தலைவர்: வரும். எல்லா கட்சிக்கும் தன் கட்சிதான் பெரிய கட்சி, தன் கட்சிதான் ஆட்சியை பிடிக்கவேண்டும், அதிக இடங்களை பிடிக்கவேண்டும் என்பது இயற்கை தான். ஆனால் கூட்டணி என்று வரும் போது அதெல்லாம் சரியாகிவிடும். ஒன்றும் பிரச்சினையில்லை.

செய்தியாளர்: ராகுல் காந்தி பிரச்சாரம் செய்கிறார். அவர் தனியாக பிரச்சாரம் செய்கிறார். உங்களை முன்னிலைப்படுத்த மாட்டேன் என்கிறார்கள் என்பது போன்ற விமர்சனங்கள் வருகிறதே?

கழகத் தலைவர்: ராகுல் காந்தி பிரச்சாரம் செய்தால் அது தி.மு.க.விற்கு இலாபம் தானே.

செய்தியாளர்: ஆனால் அவர் காங்கிரசை முன்னிலைப்படுத்துகிறார். மத்திய அரசை தாக்கி எதிர்க்கிறார். தி.மு.க. தலைமையை பிரச்சாரங்களில் நிறைய சொல்வதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளதே?

கழகத் தலைவர்: இல்லையே, அவர் பிரச்சாரத்திலே கடைசியில் சொல்லி உள்ளாரே!

செய்தியாளர்: ஆமாம். எங்கள் பேட்டியில் சொல்லியிருக்கிறார். ஸ்டாலின் எங்கள் கூட்டணி முதலமைச்சர் என்று உறுதியாக சொல்லுகிறார். ஆனால் பிரச்சாரத் தில் முன்னிலைப்படுத்தி சொல்லவில்லையே?

கழகத் தலைவர்: அவர் சூழலுக்கு தகுந்த மாதிரி சொல்லியிருக்கலாமே தவிர, வேண்டுமென்றே தவிர்ப்பதாக தெரியவில்லை. நான் அப்படி நினைக்கவில்லை.

செய்தியாளர்: காங்கிரசுக்கு நிறைய இடங்கள் கொடுத்துக் கொண்டிருக் கிறோம் என்ற கருத்து கட்சி நிர்வாகிகள் மத்தியில் உள்ளதா?

கழகத் தலைவர்: எல்லோருக்கும் இருக்கும். அவர்களை பொறுத்தவரையில் அதிகமாகதான் கேட்பார்கள். நாம் அதிகம் கொடுக்கிறோம் என்ற வருத்தம் எங்களுக்கும் இருக்கும். அதெல்லாம் கூட்டணி தர்மத்தில் பார்க்கக் கூடாது. ஒன்றிரண்டு கூடத்தான் வரும். ஒன்றிரண்டு குறையதான் செய்யும். குறையும் போது குறைத்து கொடுத்துவிட்டார்கள் என்று வருத்தப்படக்கூடாது. அதே மாதிரி அதிகமாக கொடுக்கும் போது அதிகம் கொடுத்துவிட்டோம் என்று எண்ண வேண்டிய அவசியமில்லை.

செய்தியாளர்: சரிப்படுத்துகிற பணி உங்கள் பணி?

கழகத் தலைவர்: ஆமாம்.

“ஊழலற்ற ஆட்சியை அளிப்பதே லட்சியம்.. ஊழல் அ.தி.மு.க ஆட்சியை அகற்ற தயாராவீர்” - மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

செய்தியாளர்: தே.மு.தி.க. உங்கள் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளதா?

கழகத் தலைவர்: இதுவரைக்கும் இல்லை.

செய்தியாளர்: அவர்களை, ஒரு நேச கட்சியாக பார்க்கிறீர்களா? எதிர்க்கக் கூடிய கட்சியாக பார்க்கிறீர்களா?

கழகத் தலைவர்: விஜயகாந்த் அவர்கள் கட்சி ஆரம்பித்த உடனே நல்ல ஒரு எதிர்க்கட்சியாக வந்து அமரக்கூடிய அளவிற்கு ஒரு பெரிய வெற்றியை பெற்றார். அதற்கு பிறகு உடல்நலம் பாதிக்கப் பட்டிருக்கிறார். இன்றைக்கு முடியவில்லை என்ற ஒரு சூழ்நிலை இருந்து கொண்டு இருக்கிறது. அவர் ஒரு மனித நேயமிக்க தலைவராக இருக்கக்கூடியவர். அவரால் எந்தப் பிரச்சினையும் இருக்கிற மாதிரி எனக்குத் தெரியவில்லை.

செய்தியாளர்: அவர்கள் தி.மு.க. கூட்டணியையும் பரிசீலிக்க தயார் என்று பேட்டிகளில் சொல்லிக் கொண்டிருக்கிறார்களே? அதனால் அது மலர வாய்ப்புள்ளதா?

கழகத் தலைவர்: இதுவரைக்கும் இல்லை, தேர்தல் அறிவிப்பு வந்ததற்கு பிறகு எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.

செய்தியாளர்: கமலஹாசன் உங்களுக்கு நேசத்திற்குரிய சக்தியா?

கழகத் தலைவர்: அவர் நல்ல நண்பர். அவர் ஒரு நல்ல நடிகர். அவ்வளவுதான் சொல்ல முடியும்.

செய்தியாளர்: அரசியலில் தோழமைக்கு வாய்ப்புள்ளதா?

கழகத் தலைவர்: நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன். தி.மு.க. கூட்டணி மெகா கூட்டணியாக உள்ளது. அவர்களுக்கு இடங்களை ஒதுக்குவதில் எவ்வளவு சிரமம் உள்ளது என்பது உங்களுக்குத் தெரியும். இதற்கிடையில் ஒவ்வொரு கட்சியாக வந்து சேர விரும்பினால் என்னென்ன சிக்கல்கள் வரும் என்பது உங்களுக்குத் தெரியும். எங்களுக்கும் புரியும். அதனால் இப்போதைக்கு அந்த மாதிரி இல்லை. தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் எப்படி மாற்றங்கள் வரும் என்று பார்ப்போம்.

செய்தியாளர்: நீங்கள் ஆட்சிக்கு வந்தால் எப்படிப்பட்ட முதல்வராக இருக்கவேண்டும் என்று நீங்கள் ஒரு லட்சியம் வைத்திருக்கிறீர்களா?

கழகத் தலைவர்: ஊழலற்ற ஒரு ஆட்சியை கொடுக்க வேண்டும். வேலை இல்லாமல் அலைந்து கொண்டிருக்கிற பட்டதாரி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கவேண்டும். எங்குப் பார்த்தாலும் கரெப்ஷன், கலெக்ஷன், கமிஷன்தான் உள்ளது. அதை முதலில் தடுக்கவேண்டும். மற்றதெல்லாம் எங்களுடைய தேர்தல் அறிக்கையில் சொல்லப்படும்.

செய்தியாளர்: ஊழலை ஒழிப்பேன். நடவடிக்கை எடுப்பேன் என்று எந்த எதிர்க்கட்சியாக இருந்தாலும் தேர்தல் சமயத்தில் சொல்வார்கள்? பின்னாடி அதை நடைமுறைப் படுத்துவதில்லையே? என்ன திட்டம் வைத்துள்ளீர்கள்?

கழகத் தலைவர்: 1996-லே ஆட்சிக்கு வந்தபோது தனி நீதிமன்றங்கள் அமைத்து அதன் மூலமாக நடவடிக்கை எடுத்தோம். அதேமாதிரி இப்போது தனி நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு இப்போது இருக்கக்கூடிய அமைச்சர்கள் மீது இப்போது இருக்கின்ற ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் மீது இருக்கக்கூடிய ஊழல் புகார் மீது அந்த நீதிமன்றங்கள் மூலமாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

செய்தியாளர்: இப்போதே எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் மீது நடவடிக்கை எடுக்க அமைப்புகள் இருக்கிறதே?

கழகத் தலைவர்: அடுத்த வருடம் அவர்கள் எம்.எல்.ஏ.வாக இருக்க போவதில்லையே, அதனால் இந்தக் கேள்வி வரப்போவதில்லை.

செய்தியாளர்: இதை பின்பற்றுவதற்கு தனி நீதிமன்றம் அமைப்பீர்களா?

கழகத் தலைவர்: ஆமாம்.

செய்தியாளர்: நீங்கள் ஆட்சிக்கு வந்தால் மத்திய அரசோடு என்ன உறவு மேற்கொள்வீர்கள்? சுமூகமாக இருக்குமா? அல்லது எதிர்ப்பாக இருக்குமா?

கழகத் தலைவர்: அண்ணா அவர்களுடைய கொள்கை - மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி. அதைதான் பின்பற்றினார் அண்ணா முதலமைச்சராக ஆனவுடன்! அதற்கு பிறகு கலைஞர் அவர்கள். உரிமைக்கு குரல் கொடுப்போம் உறவுக்கு கை கொடுப்போம். அதே பாலிசியை நான் பாலோ பண்ணி உறவுக்கு கை கொடுத்து நிச்சயமாக ஆட்சி நடத்துவோம்.

செய்தியாளர்: மத்திய அரசோடு நட்புறவு வைத்து கொள்வீர்களா?

கழகத் தலைவர்: மத்திய அரசோடு நட்பு வைத்துதான் மாநில அரசை நடத்தியாக வேண்டும். அதே நேரத்தில் எங்களுடைய உரிமைகளை விட்டுக் கொடுக்கமாட்டோம். இப்போது இருக்கிற ஆட்சி எல்லாவற்றையும் விட்டுக் கொடுத்துள்ளதே - அவர்களிடம் சரண்டராகி இருக்கிறார்களே - அந்த மாதிரியெல்லாம் ஒரு காலமும் இருக்கமாட்டோம்.

செய்தியாளர்: அரசியலில் எதிரெதிர் நிலையில் உள்ளீர்கள், நீங்களும் பா.ஜ.க.வும். அது மத்திய - மாநில உறவுகளில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

கழகத் தலைவர்: கொள்கை வேறு. ஆட்சிக்கு வந்த பிறகு ஆட்சியை பயன்படுத்தி செய்யக்கூடியத் திட்டங்கள், சாதனைகள்தான். ஆனால் அதற்காக கொள்கையை இழந்து எங்கள் லட்சியத்திலிருந்து என்றைக்கும் பின்வாங்க மாட்டோம்.

செய்தியாளர்: பிரதமரோடு நட்புறவில் இருப்பீர்களா? ஆட்சி ரீதியாக?

கழகத் தலைவர்: இப்போதும் நட்புறவோடு தான் இருக்கிறேன். அவரோடு போனில் பேசுகிறேன். அவரும் பேசுகிறார். ஏதாவது பிரச்சினை என்றால் நான் போன் செய்து பேசுகிறேன். உதாரணத்திற்கு சீனாவுடன் போர் வந்த போது. அப்போது அவர் முதன் முதலில் என்னிடம்தான் போன் செய்து பேசினார். அதற்கு பிறகுதான் முதலமைச்சரிடம் பேசியிருக்கிறார்.

செய்தியாளர்: கட்சியை கடந்து உங்கள் மீது ஒரு அன்பு உள்ளதோ அவருக்கு?

கழகத் தலைவர்: அவர் எனக்கு போன் செய்தால் முதலில் அம்மா எப்படி உள்ளார்கள் என்றுதான் கேட்பார். என்னுடைய அம்மாவைப் பற்றி கேட்பார். அந்த அளவிற்கு நட்பு உள்ளது.

செய்தியாளர்: பா.ஜ.க.வுடன் உறவுக்கு எதிர்காலத்தில் வாய்ப்பு உள்ளதா?

கழகத் தலைவர்: இல்லை.

செய்தியாளர்: இந்தத் தேர்தலில் தி.மு.க. மீது பிரதான எதிரிகள் முன் வைக்கக்கூடிய விமர்சனம் வாரிசு அரசியல், குடும்ப கட்சி என்று..?

கழகத் தலைவர்: இது இப்போது அல்ல. ரொம்ப காலமாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நான் அரசியலுக்கு வந்த நேரத்தில் கூட இதைத்தான் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இப்போது என்ன சொல்கிறார்கள் என்று உங்களுக்கே தெரியும். அண்ணா அவர்கள் தி.மு.க.வை குடும்ப பாச உணர்வோடுதான் இந்தக் கட்சியை வளர்த்து வைத்திருக்கிறார். அதனால் எல்லோரும் வாரிசை உருவாக்கிட முடியாது. அது தானாக உருவாகிவரும்போது யாரும் தடுக்க முடியாது.

செய்தியாளர்: சீட் கொடுப்பதில் கூட 30, 40 சதவிகிதம் வாரிசுக்கே போய் விடுகிறது என்கிறார்களே?

கழகத் தலைவர்: இல்லையே, நேரடியாக எம்.எல்.ஏ.வாக உட்கார் என்று, நேரடியாக போய் எம்.பி.யாக உட்கார் என்று உட்கார வைத்துவிடமுடியாது. மக்களிடம் போய் ஆதரவை வாங்கி கொண்டு மக்களிடம் ஓட்டு வாங்கி கொண்டு அவர்கள் சக்தியை காண்பித்து ஜெயித்து வருகிறார்கள். எனவே அது எடுபடாது.

செய்தியாளர்: முதலில் வந்து வாய்ப்பு கிடைக்கிறது.

கழகத் தலைவர்: வெற்றி பெறுவதற்கு யாருக்கு வாய்ப்பு உள்ளதோ, அவர்களுக்கு முதலில் அளிக்கப்படுகிறது.

செய்தியாளர்: இன்னொரு விமர்சனம் - திரு.உதயநிதிக்கு கிடைக்கக்கூடிய முன்னுரிமை?

கழகத் தலைவர்: அவர் இப்போது அல்ல. தலைவர் அவர்கள் துறைமுகம் தொகுதியில் நிற்கும் போது, சேப்பாக்கத்தில் நிற்கும்போது நேரடியாக சென்று தேர்தல் பணியாற்றியவர். அதேபோல நான் ஆயிரம் விளக்கு தொகுதியில் நின்றபோது எனக்காக தேர்தல் பணியாற்றினார். படிப்படியாக அவர் வந்து கொண்டிருக்கிறார். அதற்கு பிறகுதான் இப்போது இளைஞர் அணிச் செயலாளராக பதவியேற்று இளைஞர் அணியை நல்ல நிலைக்கு வளர்த்து கொண்டு வருகிறார். இப்போது “விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்” எனும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். தொடர்ந்து கூட்டங்களுக்கு போய் கொண்டிருக்கிறார். அவர் கலை உலகத்தில் இருப்பதனால் மக்களை கவரக்கூடிய அளவிற்கு கூட்டம் சேருகிறது. அதை பயன்படுத்தி பிரச்சாரத்தை செய்து கொண்டு வருகிறார்.

செய்தியாளர்: உங்கள் குடும்பத்திலிருந்து வரமாட்டார்கள் என்று சொன்னார்கள். பின்னர் வந்தார்கள் என்ற விமர்சனம் வருகிறதே?

கழகத் தலைவர்: திணிக்கமாட்டோம் என்றுதான் சொன்னோம். இயல்பாக வரும் போது தடுக்க முடியாதே? தலைவர் அவர்களே என்னை அரசியலுக்கு வா என்று இழுத்து கொண்டு வந்து நிறுத்தவில்லை. தலைவரே பல நேரங்களில் தடுத்தார். நான் அதையும் மீறிதான் வந்துள்ளேன். அதனால் வருவதை தடுக்க முடியாது.

செய்தியாளர்: உங்களுக்கான எதிர்ப்பு, அவரிடமிருந்துதான் அதிகமாக வந்ததா?

கழகத் தலைவர்: அதிகமாக அவரிடமிருந்துதான் வந்தது.

செய்தியாளர்: இன்னொரு பிரதான விமர்சனம்; தி.மு.க. இந்துக்களுக்கு எதிரான கட்சி. இந்து மதத்திற்கு எதிரான கட்சி?

கழகத் தலைவர்: 1971லிருந்து இதைதான் சொல்லி கொண்டிருக்கிறார்கள். ஆனால் மக்கள் அதை எப்படி எடுத்துக் கொண்டார்கள் என்று உங்களுக்குத் தெரியும். அதை நிச்சயமாக மக்கள் ஏற்றுக் கொள்ள போவதில்லை. சும்மா தேர்தல் பிரச்சாரத்திற்காக செய்யக்கூடிய திட்டம். மற்றது எல்லாம் எதுவும் கிடையாது. ஒவ்வொரு தேர்தல் வரும்போதெல்லாம் இதுவும் வரும். மற்ற நேரத்தில் வராது. தேர்தல் வரும்போது இது நிச்சயமாக வரும். ஆனால் தேர்தல் முடிவு என்னாகும் என்று உங்களுக்குத் தெரியும். நாடாளுமன்றத் தேர்தலின் போது கூட ஒரு நிகழ்ச்சியில் வீரமணி பேசினார் என்று ஒரு விஷயத்தை எழுப்பினார்கள். அதை வைத்து எல்லாம் போய் விட்டது என்று கூறினார்கள். ஆனால் தி.மு.க. 38 இடங்களில் வெற்றி பெற்றது. அதே மாதிரிதான் இப்போதும் கிளப்பியிருக் கிறார்கள்.

இன்னும் சொல்லப்போனால் அண்ணாவினுடைய கொள்கை “ஒன்றே குலம், ஒருவனே தேவன்” அதுதான். அந்தக் கொள்கையை நான் கடைபிடித்துக் கொண்டு வருகிறேன். கடவுள் மீது எங்களுக்கு எந்த விதமான கோபமும் கிடையாது. வெறுப்பும் கிடையாது. சொல்லப்போனால் தலைவர் கலைஞர் அவர்கள், ‘பராசக்தி’ திரைப்படத்தில் என்ன வசனம் எழுதினார் என்றால் “கோவில்கள் கூடாது என்பதல்ல. கோவில்கள் கொடியவர்களின் கூடாரமாக ஆகிவிடக்கூடாது என்பதற்காகதான்” என்று எழுதியிருப்பார். சிவாஜி பேசிய வசனம் இது. அதுதான் எங்கள் கொள்கை. ஓடாத திருவாரூர் தேரை ஓட வைத்தவர் கலைஞர் தான். எல்லா கோவில்களிலும் குடமுழக்கு விழா நடத்தியதும் கலைஞர் ஆட்சியில்தான். கோவில் குருக்களிலிருந்து பூசாரிகள் வரை அவர்களுக்கு, எல்லா சலுகைகளையும் தி.மு.க. ஆட்சியில்தான் கொடுத்திருக்கிறோம். அதனால் தி.மு.க. இந்துக்களுக்கு எதிரான கட்சியல்ல அவர்களுக்கு, எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல தி.மு.க. - எல்லோரையும் அரவணைத்து கொண்டு செல்வதுதான் தி.மு.க. - அதனால்தான் இந்தக் கூட்டணிக்கு மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி என்று பெயர் வைத்துள்ளோம்.

செய்தியாளர்: 2017லிருந்து இன்றைக்கு வரை முதலமைச்சர் பழனிசாமி, ஒரு சேலஞ்சராக மாறி உள்ளாரே? அரசியலில் ஏற்றம் பெற்றிருக்கிறார் என்று பார்க்கிறீர்களா?

கழகத் தலைவர்: அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதலமைச்சர் ஆகவில்லை. மக்கள் முன்னால் இவர்தான் முதலமைச்சர் வேட்பாளர் என்று சொல்லி நிறுத்தவில்லை. இப்போதுதான் மக்களிடம் முதலமைச்சர் வேட்பாளர் என்று நிறுத்தியிருக்கிறார்கள். பார்ப்போம், இந்தத் தேர்தலில் எடப்பாடி தொகுதியிலேயே அவர் ஜெயிக்கமுடியாத சூழ்நிலைக்கு வந்திருக்கிறார். நிச்சயமாக சொல்கிறேன். அமைச்சர்கள் மட்டுமல்ல, அவரே அவர் தொகுதியில் ஜெயிக்க முடியாத ஒரு சூழ்நிலை உருவாக்கியிருக்கிறது.என்னை பொறுத்தவரையில் நான் சொல்கிறேன். அவர் வெற்றி பெற்றால் நீங்கள் சொல்வதை ஓரளவிற்கு ஏற்றுக்கொள்வேன்.

செய்தியாளர்: அன்றைக்கு அவர் ஆரம்பித்ததிலிருந்து ஏற்றம் கூடியிருக்கிறது அல்லவா?

கழகத் தலைவர்: ஆட்சி இருக்கிறது, அதிகாரம் இருக்கிறது. அதனால் உங்களுடைய மீடியாக்கள் சாதகமாக இருக்கிறது. உண்மையைதான் சொல்கிறேன். நடந்து கொண்டு இருப்பதைச் சொல்கிறேன்.

செய்தியாளர்: திருமதி சசிகலா வருகை, அ.தி.மு.க.வில் - தமிழ்நாட்டு அரசியலில் தாக்கம் ஏற்படுத்துமா?

கழகத் தலைவர்: தி.மு.க.விற்கு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த வாய்ப்பில்லை. வாய்ப்பே கிடையாது. அ.தி.மு.க.வில் தாக்கம் இருக்கலாம். உதாரணமாக கிட்டதட்ட ரூ. 80 கோடி மதிப்பில் கட்டப்பட்ட ஜெயலலிதாவினுடைய நினைவிடம் - அதில் ஏதோ ரிப்பேர் இருக்கிறது என்று சொல்லி இப்போது மூடி வைத்துள்ளார்கள்.

செய்தியாளர்: அருங்காட்சியகம் அமைக்கவேண்டும் என்று மூடி வைத்துள்ளார்கள்?

கழகத் தலைவர்: 80 கோடி ரூபாய். ஏன் அது கட்டப்படவில்லை. இதில் எத்தனை கோடி கொள்ளை அடிக்க போகிறார்களோ, தெரியவில்லை.

செய்தியாளர்: எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் வருகை தாக்கத்திலிருந்து நிலை நிறுத்தி கொண்டார் என்று நினைக்கிறீர்களா?

கழகத் தலைவர்: அவர் நிலைநிறுத்தி கொண்டுள்ளார் என்றால் நினைவிடத்தை மூடியிருக்கக்கூடாது. இன்றைக்குக் கூட கூட்டம் கூட்டியிருக்கிறார்கள்.

செய்தியாளர்: செல்வி ஜெயலலிதா மரண விவகாரத்தைக் கூட அதிகமாக வலியுறுத்துவது தி.மு.க.தானே?

கழகத் தலைவர்: இறந்தவர், ஒரு சாதாரண ரோட்டில் போகிற குப்பனோ, சுப்பனோ அல்ல. இந்த நாட்டினுடைய முதலமைச்சர். என்னதான் எங்களுக்கு எதிர்க்கட்சியாக கொள்கை ரீதியாக ஒரு எதிரியாக இருந்தாலும் கூட எங்களுக்கும் சேர்த்து அவர்தான் முதலமைச்சர். 1.1 சதவிகிதம் ஓட்டு அதிகம் வாங்கினார். அதனால் அவர் முதலமைச்சர். நாங்கள் 1.1 சதவிகிதம் குறைவாக வாங்கியிருந்தோம். அதனால் நாங்கள் எதிர்க்கட்சி. இருந்தாலும் எங்களுக்கும் அவர்தான் முதலமைச்சர். எங்களுக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டிற்கே முதலமைச்சர். அவருடைய மரணத்திலே மர்மம் இருக்கிறது என்று நாங்கள் சொல்லவில்லை. சொன்னது, இன்றைக்கு இருக்கக் கூடிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். அதற்கு பிறகு அவரை சமாதானப்படுத்த ஒரு விசாரணைக் கமிஷன் போட்டு ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில்தான் விசாரணை கமிஷன் அமைத்தார்கள். அதுவரைக்கும் 10 முறை நீட்டிப்பு கொடுத்துவிட்டார்கள்.

அந்த அம்மையார் இறந்து 4 வருடம் ஆகி விட்டது. கமிஷன் அமைத்து மூன்றே முக்கால் வருடம் ஆகிவிட்டது. அதுவரைக்கும் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எந்த உண்மை வெளிவந்திருக்கிறது. எதுவும் வரவில்லை. அதற்கு பிறகு கிட்டதட்ட 8 முறை அல்லது 9 முறை ஓ.பி.எஸ். ஆஜராகும்படி சொல்லி நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்கள். இதுவரைக்கும் ஒரு முறை கூட அவர் போகவில்லை. அதை சொன்னது நாங்கள் அல்ல. அவர்கள். நீங்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்கிறீர்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உண்மையை கண்டுபிடித்து, இந்த நாட்டு மக்களுக்கு உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வரவேண்டியது எங்களது கடமை!

செய்தியாளர்: அது உங்களுடைய முன்னுரிமையாக இருக்குமா? வேறு ஒரு கமிஷன் அமைப்பீர்களா? அல்லது இதையே வைத்திருப்பீர்களா?

கழகத் தலைவர்: வேறு ஒரு கமிஷன் அமைப்போம். ஆறுமுகசாமி கமிஷன் என்பது ஒரு கண்துடைப்பு கமிஷன் தானே. உண்மையான கமிஷன் என்றால் இந்நேரம் உண்மையை கண்டுபிடித்து சொல்லியிருக்குமே! வழக்கை இழுத்துக் கொண்டே போக வேண்டும் என்பதற்காக போடப்பட்ட கமிஷன் தான் அது. ஆகவே உண்மையான கமிஷனைப் போட்டு விசாரித்து உரிய நடவடிக்கை நிச்சயமாக, உறுதியாக எடுக்கப்படும்.

செய்தியாளர்: எதிர்க்கட்சியாக ஜெயலலிதா மீது விமர்சனம் இருக்கும். ஜெயலலிதாவிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம் எது?

கழகத் தலைவர்: அவர் ஒரு பெண்ணாக இருந்தாலும் தைரியமாக தப்போ, சரியோ முரட்டுத்தனமாக ஒரு முடிவு எடுப்பதிலும், சரியான முடிவு எடுப்பார்கள். பா.ஜ.க.வால் தான் தோற்றேன் என்று பட்டவர்த்தனமாக சொன்னார்கள். கடைசி வரைக்கும் உயிரே போனாலும் பா.ஜ.க.வோடு சேர மாட்டேன். என்று போல்டாக சொன்னார்கள். அது மாதிரி யாராலும் சொல்ல முடியாது. உள்ளபடியே அது பாராட்டக் கூடிய ஒன்றுதான்.

செய்தியாளர்: அவரோடு சந்திப்பு நிகழ்ந்தது உண்டா?

கழகத் தலைவர்: நான் ஒரு முறை - சுனாமி ஏற்பட்ட போது அதற்கு நிதியாக, தலைவர் அவர்கள் தான் கதை வசனம் எழுதிய படத்தின் மூலம் வந்த ரூ. 25 லட்சத்தை அதை அப்படியே கொடுத்து விட்டு வா என்று சொன்னார்! அப்போது அந்த அம்மையாரிடம் நேரம் வாங்கிக் கொண்டு கோட்டையில் போய் நேரடியாக சந்தித்தேன். என்னை உட்கார வைத்து காபி கொடுத்து, “அப்பா எப்படி இருக்காங்க” என்றெல்லாம் விசாரித்தார்கள்.

செய்தியாளர்: கலைஞருக்கு ஜெயலலிதா மீது நன்மதிப்பு உண்டா?

கழகத் தலைவர்: தலைவர் படத்திலே ‘எங்கள் தங்கம்’ என்ற படத்திலே நடித்திருக்கிறார். அதனால் அவர் எதிரியெல்லாம் கிடையாது. அரசியல் ரீதியாக எதிரியாக இருக்கலாமே தவிர நட்பு ரீதியாக எப்போதும் உண்டு.

செய்தியாளர்: எதிரெதிர் துருவமாக அவர்கள் இருந்தார்கள். இப்போது இருக்கிற முதலமைச்சருக்கும் உங்களுக்கும் நல்லுறவு உண்டா?

கழகத் தலைவர்: முதலமைச்சர் என்ற முறையில் அவருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை நான் கொடுத்து கொண்டுதான் இருக்கிறேன். அவரும் மரியாதை கொடுக்கிறார் என்று நினைக்கிறேன். அவருடைய தாயார் மறைந்த போது கூட போனில் பேசி ஆறுதல் கூறினேன். அதற்கு பிறகு அவர் சென்னைக்கு அவர் வீட்டிற்கு வந்த பிறகு அவர் வீட்டிற்கு சென்று துக்கம் விசாரித்து விட்டு அவருடைய அம்மா படத்திற்கு மாலை வைத்து மரியாதை செய்து விட்டுதான் வந்தேன்.

அதே மாதிரி தலைவருடைய நினைவிடத்திற்கு அனுமதி கொடுக்கவில்லை என்ற கோபம் எனக்கு. இன்றைக்கு அது உறுத்திக்கொண்டு இருக்கிறது. நான் நேராக சென்று சந்தித்து கேட்டும் கொடுக்காதது இன்றைக்கும் என் மனதில் மட்டுமல்ல, கட்சிக்காரர்கள் அத்தனை பேரின் மனதிலும் உறுத்திக் கொண்டிருக்கிறது. அதற்கு பிறகு சட்டமன்றத்தில் கலைஞருக்கு இரங்கல் தீர்மானம் போட்டு பெரிய மரியாதை செய்தார்கள். அதாவது அதை மறைக்க வேண்டும் என்பதற்காக செய்தார்கள். இருந்தாலும் அதற்காக அவரது அறைக்கு நானே நேரடியாக சென்று சந்தித்து தலைவருக்கு மரியாதை செய்திருக்கிறீர்கள். அதற்கு நன்றி என்று சொல்லி விட்டு வந்தேன். அதனால் அந்தத் தொடர்பு இருந்து கொண்டுதான் இருக்கும்.

செய்தியாளர்: சர்ச்சைக்குரிய விவகாரமாக ‘நீட்’ இருக்கிறது. நீங்கள் ஆட்சிக்கு வந்தால் அதை தடுக்க என்ன நடவடிக்கை எடுப்பீர்கள்? எடுக்க முடியாத அளவிற்கு சட்ட சிக்கல் இருப்பதாக கூறப்படுகிறதே?

கழகத் தலைவர்: கலைஞர் இருந்தவரை ‘நீட்’ இருந்ததில்லை. இன்னும் சொல்லப் போனால் ஜெயலலிதா இருந்தவரையில் ‘நீட்’ அனுமதிக்கவில்லை. ஆனால் இந்த ஆட்சியில் மத்திய அரசுக்கு பயந்து கொண்டு வேறு வழியில்லாமல் கண்மூடிதனமாக சரண்டர் ஆகி கிடக்கிறார்கள். அதனால் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு சட்ட ரீதியாக நிச்சயமாக நடவடிக்கை எடுத்து அதற்கு விலக்கு வாங்குவோம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

செய்தியாளர்: தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ‘நீட்’ இருக்காதா?

கழகத் தலைவர்: இருக்காது.

“ஊழலற்ற ஆட்சியை அளிப்பதே லட்சியம்.. ஊழல் அ.தி.மு.க ஆட்சியை அகற்ற தயாராவீர்” - மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

செய்தியாளர்: 7 பேர் விடுதலையில் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. தி.மு.க. என்ன செய்யும்?

கழகத் தலைவர்: அமைச்சரவையில் தீர்மானம் போட்டு 2 வருடம் ஆகி விட்டது. அதை நாங்கள் ஆதரித்து அறிக்கை விட்டு கொண்டிருக்கிறோம். அதை எதிர்த்து அறிக்கை விடவில்லை. இப்போது 25ம் தேதி கவர்னர் அதை திருப்பி அனுப்பியிருக்கிறார்! ஜனாதிபதிக்கு திருப்பி அனுப்பியிருக்கிறார். 29ம் தேதி முதலமைச்சர் போய் பார்த்துவிட்டு வருகிறார். அதற்கு பிறகு சட்டமன்றத்தில் என்ன பேசுகிறார். விரைவிலே விடுதலை செய்யப்படுவார்கள். கவர்னர் நல்ல முடிவெடுப்பார் என்று சொல்கிறார். ஆக ஒரு நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் இதுதான்.

செய்தியாளர்: நீங்கள் ஒரு நீண்ட அரசியல் பயணம் மேற்கொண்டவர். உங்கள் அரசியல் வாழ்க்கையிலேயே ரொம்ப சவாலான காலகட்டம் எது?

கழகத் தலைவர்: 1976, ஜனவரி மாசம் 31ந் தேதி அன்றைக்குத்தான். நான் மிசாவில் கைதானேன். எமர்ஜென்சியில் கைது செய்யப்பட்டு சிறையில் கொண்டு போய் தள்ளினார்கள். ஒரு வருஷம் இருந்தேன். அதிலே மறக்க முடியாதது என்ன என்று கேட்பீர்களானால் அங்கு வந்து என்னை அடித்து என்னை கொடுமைப்படுத்தினார்கள். சிறையில் அங்கேயிருக்கிற ஆயுள் கைதிகளை வைத்து காவலர்கள் அடித்து துன்புறுத்தினர். அதில்தான் சிட்டிபாபு அவர்கள் என்னை காப்பாற்ற வந்து எனக்கு விழ வேண்டிய அடிகளையெல்லாம் அவர் வாங்கிக் கொண்டு அதனால் அவருக்கு பலமான காயம் ஏற்பட்டு, அதனால் அவர் உயிரே இழக்க வேண்டிய சூழ்நிலை வந்தது. அப்போது தலைவர் அவர்கள் குடும்பத்தோடு என்னை பார்க்க வந்தார்கள். என் கையில் அடிபட்டு காயம் இருந்தது.

இப்போது தழும்பு இருக்கிறது பாருங்கள். மிசா தழும்பு இருக்கிறது என்று சொல்வேன்.(கையில் உள்ள தழும்பை செய்தியாளருக்கு காட்டுகிறார்) இப்போதும் நான் ஜெயிலுக்கு போகும் போது அங்க அடையாளம் கேட்பார்கள். இதை காட்டுவேன். இதை ‘மிசா தழும்பு’ என்பேன். அவர்களுக்கு ஒன்றும் புரியாது. மச்சம் என்று சொல்வோம். இதை நான் ‘மிசா தழும்பு’ என்று சொல்வேன். இதற்கென்று ஒரு வரலாறு இருக்கிறது. நான் எப்போதும் அரை கை சட்டைதான் போடுவேன்! ஆனால் ஜெயிலுக்கு முழு கை சட்டைதான் போட வேண்டும் என்று சொல்லி, யாரோ ஒருவருடைய சட்டையை எடுத்து கட்டாயப்படுத்தி எனக்கு கொடுத்து தலைவர் பார்க்க வந்த போது பார்க்க அனுமதித்தார்கள். ஆனால் அதை தலைவர் கண்டுபிடித்து விட்டார். சரியாக கண்டுபிடித்து விட்டார். என்ன முழு கை சட்டை போட்டிருக்கிறாய் என்று கேட்டார். தான் பயந்து கொண்டு அதை மறைக்கவில்லை. அவர் அதை பார்த்து வருத்தப்படக்கூடாது என்பதற்காக நான் அதை மறைத்தேன். ஆனால் கண்டுபிடித்து விட்டார் அவர். அதெல்லாம் மறக்க முடியாத சம்பவங்கள்.

செய்தியாளர்: சில அரசியல் தலைவர்கள் குறித்து திருமதி.சோனியாகாந்தி?

கழகத் தலைவர்: பிரதமர் பதவி தன்னை நாடி வந்தபோது அதை வேண்டாம் என மறுத்த ஒரு தியாகத் தலைவி! இன்றைக்கு ஜனநாயகத்தினுடைய ஒரு முகமாக மதச்சார்பற்ற இந்தியாவிலே ஜனநாயகத்தில் இருக்கக்கூடிய ஒரு முகமாக பார்க்கப்படக்கூடியவர்.

செய்தியாளர்: ரஜினிகாந்த்?

கழகத் தலைவர்: தலைவர் கலைஞர் அவர்களுக்கு மிகவும் பிடித்த நண்பர். மிக அன்பாக என்னிடத்தில் பேசக் கூடியவர். நானும் அவரிடத்தில் அடிக்கடி பேசிக் கொள்வது உண்டு.

செய்தியாளர்: கமலஹாசன்?

கழகத் தலைவர்: மக்கள் நீதி மய்யத்தினுடைய தலைவர். நல்ல நடிகர்.

செய்தியாளர்: பிரதமர் நரேந்திர மோடி?

கழகத் தலைவர்: அருமையான பேச்சாளர். எழுச்சி வரத்தக்க அளவிற்கு பேசக்கூடிய ஆற்றலை பெற்றவர்.

செய்தியாளர்: விஜயகாந்த்?

கழகத் தலைவர்: மனிதநேய மிக்கவர்.

செய்தியாளர்: டாக்டர் இராமதாஸ்?

கழகத் தலைவர்: ஒரு சிறந்த போராளி.

செய்தியாளர்: ஜெயலலிதா?

கழகத் தலைவர்: தைரியசாலி.

செய்தியாளர்: சசிகலா?

கழகத் தலைவர்: பழனிச்சாமிக்கு சிம்ம சொப்பனம்.

செய்தியாளர்: ராகுல்காந்தி?

கழகத் தலைவர்: வளர்ந்து கொண்டு வரக்கூடிய இந்தியாவினுடைய ஒரு மாபெரும் தலைவர்.

செய்தியாளர்: மு.க.அழகிரி?

கழகத் தலைவர்: என்னுடைய அண்ணன்.

செய்தியாளர்: தந்தி டி.வி. வாயிலாக தமிழ்நாட்டு மக்களுக்கு நீங்கள் சொல்ல விரும்பக்கூடிய செய்தி என்ன?

கழகத் தலைவர்: இன்னும் 3 மாதத்தில் சட்டமன்றத்தின் பொதுத் தேர்தலை சந்திக்க போகிறோம். இன்றைக்கு நடந்து கொண்டிருக்கிற கரப்சன், கமிஷன், கலெக்சன் இந்த ஆட்சிக்கு பழனிசாமியினுடைய ஊழல் ஆட்சிக்கு முடிவு கட்டுவதற்கு தமிழ்நாட்டு மக்களாகிய நீங்கள் தயாராக இருக்க வேண்டும் என்பது தான் என்னுடைய பணிவான வேண்டுகோள்!

இவ்வாறு கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories