மு.க.ஸ்டாலின்

“அரசியல் ஆர்வம் என்பது திணிக்கப்பட்டதல்ல; தானாக வந்தது” : தி.மு.க., தலைவர் மு.க.ஸ்டாலின்!

கோபாலபுரத்தில் தி.மு.க., இளைஞரணி உதயம், சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் கூட்டம் உள்ளிட்ட பல்வேறு சுவாரஸ்ய தகவல்களை தந்தி தொலைக்காட்சி நேர்காணலில் பகிர்ந்துள்ளார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்.


“அரசியல் ஆர்வம் என்பது திணிக்கப்பட்டதல்ல; தானாக வந்தது” : தி.மு.க., தலைவர் மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தந்தி தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியின் முதல் பாகம்:

செய்தியாளர்: தி.மு.க. தலைவருக்கு வணக்கம். வாழ்த்துக்கள். இந்தத் தேர்தல் உங்கள் அரசியல் வாழ்வில் மிக முக்கியமான தேர்தல்; முதற்கண் வாழ்த்துக்கள். முதலமைச்சர் வேட்பாளராக இதுதான் உங்களுடைய முதல் தேர்தல். எத்தனையோ தேர்தல் களங்களைப் பார்த்திருக்கிறீர்கள். நீங்கள் களமாடிய முதல் சட்டமன்றத் தேர்தல் நினைவிருக்கிறதா?

கழகத் தலைவர்: 1971-ஆம் ஆண்டு தலைவர் கலைஞர் அவர்கள் சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட தேர்தல்தான், அந்தத் தேர்தல். அப்போது அவர் பிரச்சாரம் செய்துகொண்டு ஜீப்பில் வந்து கொண்டிருந்தார். அதற்கு முன்பாக நாகூர் ஹனிஃபா பாடல் பாடிக் கொண்டு வருவார். கோவை ராமநாதன் பேசிக் கொண்டு வருவார்.

அதற்கு முன்பு செல்லும் வண்டியில் நான், ஆலந்தூர் பாரதி உள்ளிட்ட அந்தப் பகுதி இளைஞர்கள் எல்லாம் ஒரு ஆட்டோவில் மைக் கட்டிக்கொண்டு, “உதயசூரியனுக்கு ஓட்டுப் போடுங்கள்”, “வருகிறார்.. வருகிறார்.. கலைஞர் வருகிறார்..”, “உங்கள் வீட்டுப் பிள்ளை, உங்கள் கலைஞர் உங்களிடத்தில் உதய சூரியனுக்கு ஓட்டுக்கேட்டு வருகிறார்” என்று மைக்கில் அறிவித்துக் கொண்டே செல்வேன். நான் தேர்தல் பிரச்சாரங்களுக்குச் செல்லும்போதெல்லாம் இப்போதும் கூட அந்த நினைவுதான் வந்து கொண்டே இருக்கிறது.


“அரசியல் ஆர்வம் என்பது திணிக்கப்பட்டதல்ல; தானாக வந்தது” : தி.மு.க., தலைவர் மு.க.ஸ்டாலின்!

செய்தியாளர்: ஆயிரம் விளக்கில் ஆரம்பித்து, இப்போது முதலமைச்சர் வேட்பாளராக களம் காண்கிறீர்கள். அரசியல் ஆர்வம் எப்போதில் இருந்து வந்தது?

கழகத் தலைவர்: அதாவது ஆர்வம் என்பது திணிக்கப்பட்டதல்ல; தானாக வந்துவிட்டது. அந்தக் குடும்பத்திலேயே நான் பிறந்து - வளர்ந்து, தலைவரைப் பார்க்க கட்சிக்காரர்கள் வருவது, தலைவர் நிகழ்ச்சிக்கு செல்வது, கோபாலபுரத்தில் அரசியல் வாடையாகத்தான் எப்போதும் இருந்து கொண்டிருக்கும். அதை பார்த்து தானாக வந்தது. யாரும் திணிக்கவில்லை. இன்னும் சொல்ல வேண்டும் என்று சொன்னால் தலைவர் கலைஞர் அவர்கள் எதிர்ப்புதான் தெரிவித்தார்கள். இப்போது வேண்டாம் என்றார்கள். அதையும் மீறி என்னை அறியாமல் நானே வந்து விட்டேன்.

செய்தியாளர்: நீங்கள் அறிவித்துக் கொண்டே செல்வோம் என்று சொன்னது, அது உங்கள் ஆர்வத்தில் களம் கொண்ட தேர்தலா?

கழகத் தலைவர்: ஆமாம். 1962 மாநகராட்சி தேர்தலில், கோபாலபுரத்தில் ஜேசுதாஸ் என்றவர்தான் கவுன்சிலர் வேட்பாளராக நின்றார். அவருக்கு விடியற்காலையில் 5 மணிக்கு எழுந்து மெகாபோன் வைத்துக்கொண்டு சைக்கிளில் டபுள்ஸ் உட்கார்ந்து கொண்டு, மைக்கில் நான் அறிவித்துக் கொண்டு செல்வேன். நண்பர் ஒருவர் சைக்கிளை ஓட்டிக் கொண்டு செல்வார். அப்போது எம்.ஜி.ஆரை பிரச்சாரத்திற்கு அழைத்து வந்திருக்கிறோம்.

தலைவர் கலைஞரை பிரச்சாரத்திற்கு அழைத்து வந்திருக்கிறோம். தொடர்ந்து, கூட்டமெல்லாம் போட்டிருக்கிறோம். இளைஞர் தி.மு.க. என்றுதான் முதன்முதலில் கோபாலபுரத்தில் ஆரம்பித்து, அது படிப்படியாக வளர்ந்து இளைஞர் அணியாக மாறி, அது தி.மு.க.விற்கு பெரிய துணை அமைப்பாக உருவாகி இருக்கிறது என்றால், நான் 1967-இல் தொடங்கிய இளைஞர் தி.மு.க.தான் அது. கோபாலபுரம் தி.மு.க. அது. முடி திருத்தும் நிலையத்தில் நாங்கள் ஆரம்பித்தது. இன்னும் அந்த முடிதிருத்தும் நிலையம் அங்கு இருக்கிறது.


“அரசியல் ஆர்வம் என்பது திணிக்கப்பட்டதல்ல; தானாக வந்தது” : தி.மு.க., தலைவர் மு.க.ஸ்டாலின்!

செய்தியாளர்: கலைஞருடைய மகன் என்பது உங்களுக்கு பெருமிதம், ஒரு பெருமையான அடையாளம். அது எந்த அளவிற்கு பலமோ, அதே அளவிற்கு சவால்கள் நிறைந்ததாக பார்க்கிறீர்களா?

கழகத் தலைவர்: சவால்களை பெரிதாக நினைக்கவில்லை. அதிகமாக பலவீனம் வந்திருக்கிறது. ஏனென்றால் நல்லது செய்யும்போது கூட பார்த்து செய்ய வேண்டும். ஏனென்றால் பொறுப்பு ஜாஸ்தி. கலைஞருடைய மகன், தலைவருடைய மகன் அதனால் திமிராக செய்து விட்டான் என்ற பேச்சு வந்துவிடக்கூடாது. அதனால் எல்லாவற்றையும் ஆழ்ந்து சிந்தித்து, யோசனை செய்து, 10 பேரிடம் கலந்து பேசிதான் செய்தேன்.

செய்தியாளர்: எல்லா செயலையும் ஒப்பிடுவார்கள் அல்லவா, அதை சவாலாக பார்க்கிறீர்களா?

கழகத் தலைவர்: சவாலாகதான் பார்க்கிறேன்.

செய்தியாளர்: அதிலிருந்து வெளியே வர என்ன செய்வீர்கள்?

கழகத் தலைவர்: எல்லா இடங்களிலும் ஒரே வரியில் சொல்லியிருக்கிறேன். எல்லாவற்றிலும் கலைஞருடைய பயிற்சி இருக்கிறது. அந்த தைரியத்தில் சவால்களை எதிர்கொண்டுதான் இருக்கிறேன்.

banner

Related Stories

Related Stories