மு.க.ஸ்டாலின்

“கூட்டத்தொடரை புறக்கணித்து மக்கள் மன்றத்தில் அதிமுக ஊழலை பட்டியலிடுகிறேன்” - தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்

சட்டமன்ற கூட்டத்தொடரை புறக்கணித்து மக்கள் மன்றத்தில் அ.தி.மு.க அரசின் ஊழலை பட்டியலிடப் போவதாக தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

“கூட்டத்தொடரை புறக்கணித்து மக்கள் மன்றத்தில் அதிமுக ஊழலை பட்டியலிடுகிறேன்” - தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

2021ம் ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது. அப்போது, மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் பாராட்டு தெரிவித்தார்.

இதனைக் கண்டித்தும், எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் மு.க.ஸ்டாலினுக்கு பேச அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்தும் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்புச்செய்தனர்.

வெளிநடப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், “மத்திய பட்ஜெட் என்பது தமிழக மக்களுக்கு கொடுக்கப்பட்ட "மாய லாலிபாப்". மதுரையில் 6 ஆண்டுகளாகியும் எய்ம்ஸ் அமைக்க இதுவரை ஒரு செங்கல் கூட எடுத்து வைக்கப்படவில்லை.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்டவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், விலைவாசியை குறைக்க எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இல்லை. மத்திய பட்ஜெட் மக்களுக்கான பட்ஜெட் இல்லை; கார்ப்பரேட்களுக்கான பட்ஜெட்.

கவர்னர் பேசியதில் எங்களுக்கு பிடித்த உண்மையானது என்னவென்றால் “இந்த அரசோட கடைசி பட்ஜெட்”. இதை தி.மு.க உளமாற வரவேற்கிறது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 22ம் தேதி 97 பக்க முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்ட அ.தி.மு.க அமைச்சரவை மீதான ஊழல் குறித்து ஆதாரங்களோடு ஆளுநரிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் 2 ஆண்டுகளாகியும் முடிவு எடுக்காமல் ஆளுநர் இழுத்தடித்து வருகிறார்.

ஆளுநரின் இந்த செயலைக் கண்டித்தும், அ.தி.மு.க ஆட்சியில் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகளுக்கு பேச வாய்ப்பு மறுக்கப்படும் என்பதால் சட்டமன்ற கூட்டத்தொடர் முழுவதையும் தி.மு.க புறக்கணிக்கிறது. இருப்பினும் மக்கள் மன்றத்தில் சென்று அ.தி.மு.க அரசின் பத்தாண்டுகால ஊழலை சொல்ல இருக்கிறோம்.” என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories