மு.க.ஸ்டாலின்

“பழுதடைந்த அரசு இயந்திரம்; அமைச்சர்கள் முதல் முதலமைச்சர் வரை வடிகட்டிய ஊழல்”: மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு!

அமைச்சர்கள் முதல் முதலமைச்சர் வரை வடிகட்டிய ஊழல்! வரலாறு காணாத ஊழல்! அனைத்திற்கும் ஆளுநர் பார்வையாளராக மட்டுமே இருப்பது, தமிழகத்தின் கெட்ட வாய்ப்பாகப் போய்விட்டது.

“பழுதடைந்த அரசு இயந்திரம்; அமைச்சர்கள் முதல் முதலமைச்சர் வரை வடிகட்டிய ஊழல்”: மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஆளுநர் உரை - சட்டமன்றக் கூட்டத்தொடர் முழுவதும் புறக்கணிப்பதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதன் விவரம் பின்வருமாறு:-

“முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அ.தி.மு.க. அமைச்சர்களின் மீது ஆதாரங்களுடன், 22.12.2020 அன்று, நேரில் கொடுக்கப்பட்ட 97 பக்க ஊழல் புகார்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல்; 30 ஆண்டுகளாகச் சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் உச்ச நீதிமன்றமே உத்தரவிட்டும் இதுவரை விடுதலை செய்யாமல், அமைச்சரவைத் தீர்மானத்தைக் கிடப்பில் போட்டிருக்கும் தமிழக ஆளுநரின் செயலைக் கண்டித்து, மக்கள் விரோத அ.தி.மு.க. அரசின் ஆளுநர் உரையை திராவிட முன்னேற்றக் கழகம் புறக்கணிக்கிறது.

பத்தாண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் அனைத்துத் துறைகளிலும் படுதோல்வியைச் சந்தித்துள்ளதுடன், மாநிலத்தின் வளர்ச்சியை 50 ஆண்டுகாலம் பின்னோக்கி இழுத்துச் சென்றுவிட்டது. நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர் மாநாடுகள் இரண்டும் வெற்று விளம்பரக் கொண்டாட்டமாக மாறிவிட்டது. புதிய முதலீடுகளும் இல்லை - புதிய தொழிற்சாலைகளும் இல்லை - புதிய வேலை வாய்ப்புகளும் இல்லை! அமைச்சர்கள் முதல் முதலமைச்சர் வரை வடிகட்டிய ஊழல்! வரலாறு காணாத ஊழல்! அனைத்திற்கும் ஆளுநர் பார்வையாளராக மட்டுமே இருப்பது, தமிழகத்தின் கெட்ட வாய்ப்பாகப் போய்விட்டது.

அ.தி.மு.க. அமைச்சரவையில் ஊழலின் மூலம் சேர்த்து வைத்திருக்கும் சொத்துக்களின் மதிப்பும், கொள்ளையடித்த பணமும், தமிழகத்திற்கே தனி பட்ஜெட் ஒன்றைத் தயாரிக்கும் அளவிற்கு மலை போல் குவிந்து - சுதந்திர இந்தியாவில் இப்படியொரு ஊழல் ஆட்சி இதுவரை எந்த மாநிலத்திலும் இல்லை - ஏன், 1991 - 1996 அ.தி.மு.க. ஆட்சியின் ஊழல்களையே விஞ்சி நிற்கிறது முதலமைச்சர் பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியின் தற்போதைய ஊழல்கள்.

டெண்டர்களில் ஊழல், புதிய நியமனங்களில் ஊழல், நிர்வாக மாறுதல்கள் மற்றும் பதவி உயர்வுகளில் ஊழல், சீருடைப் பணியாளர் தேர்வாணைய மற்றும் அரசுப் பணியாளர் தேர்வாணைய நியமனத்தில் ஊழல் என அனைத்து தேர்வாணையங்களின் நம்பகத்தன்மை, வேலை தேடும் இளைஞர்கள் மத்தியில் வெகுவாக அ.தி.மு.க. ஆட்சியில் சீரழிக்கப்பட்டு விட்டது.

கொரோனா ஊழல் அ.தி.மு.க. ஆட்சியில் இப்போது நடைபெற்று வரும் கடைசிக்கட்டக் கொள்ளை! முதலமைச்சர், உட்கட்சித் தலைமைப் போராட்டத்தில் தன்னை மட்டும் முன்னிறுத்திக் கொள்ளும் நோக்கில், அரசுப் பணத்தில் கடந்த 3 மாதங்களாக, ஏடுகளிலும் தொலைக்காட்சிகளிலும் தொடர்ந்து செய்யப்படும் ஏமாற்று விளம்பரங்கள்! அ.தி.மு.க. ஆட்சியில் சட்டமன்றத்தின் மாண்பு சிதைக்கப்பட்டுள்ளது. ஆக்கபூர்வமான விவாதங்களுக்கு இடம் இல்லை. உண்மையான தகவல்களை அளிப்பதில்லை. மானியத்திலோ, நிதிநிலை அறிக்கையிலோ அறிவிப்பதை நிறைவேற்றுவதில்லை. அரசின் கொள்கை விளக்கக் குறிப்புகளை - "பொய்யுரைகளாக" மாற்றிய அநியாயம் அ.தி.மு.க. ஆட்சியில் நடைபெற்று - சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட நீட் மசோதாவிற்கு ஒப்புதல் பெற முடியாமல் - 16 மாணவ - மாணவியர் தற்கொலைக்கு வித்திட்டுள்ளது அ.தி.மு.க. ஆட்சி! “நீட்” மசோதா நிராகரிக்கப்பட்ட தகவலைச் சட்டமன்றத்திற்கே மறைத்த ஜனநாயக விரோத ஆட்சி அ.தி.மு.க. ஆட்சி.

பதவியில் ஒட்டிக்கொண்டு, பவிசு காட்ட வேண்டும், பதவியை முறைகேடாகப் பயன்படுத்திப் பணம் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற பச்சை சுயநலத்திற்காக, மாநில உரிமைகளைத் தாராளமாகத் தாரைவார்த்து, ஜி.எஸ்.டி. சட்டத்தை அவசர கதியில் அமல்படுத்தி, 15-ஆவது நிதி ஆணையத்தில் உரிய நிதியைப் பெறாமல் கோட்டை விட்டு - மாநிலத்தின் நிதி உரிமையையும் பறிகொடுத்தது இந்த ஆட்சி.

தலைமைச் செயலகத்தில் ரெய்டு நடந்தாலும், டி.ஜி.பி. வீட்டில் ரெய்டு நடந்தாலும், இந்தி திணிக்கப்பட்டாலும் “எங்களுக்கு என்ன கவலை” என்று ஊழலில் ஊறிப்போன அரசு இது. புதிய மேகதாது அணை கட்டும் திட்டத்தைத் தடுத்து நிறுத்த முடியாமல், அதிகாரம் படைத்த காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியாமல், நதிநீர் உரிமையை விட்டுக் கொடுத்த அரசு.

அ.தி.மு.க.வைச் சேர்ந்தவரே பொள்ளாச்சி பாலியல் குற்றத்தில் ஈடுபட்டது, சென்னை மாநகரில் பெண் ஐ.டி. பொறியாளர்கள் பாலியல் கொடூரத்திற்கு ஆளாகி கொல்லப்பட்டது, கொடநாடு கொலை - கொள்ளைகள், பரமக்குடி துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் பலி, ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலி, சாத்தான்குளம் காவல் நிலையத்தில் வைத்து தந்தையும் மகனும் அடித்துக் கொலை, ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்களை எதிர்த்த மாணவி வளர்மதி, பேராசிரியர் ஜெயராமன் ஆகியோர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது, பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தை மூடி மறைத்தது, தமிழகத்தில் பெருகி விட்ட துப்பாக்கிக் கலாச்சாரம், பெண் எஸ்.பி.க்கே பாலியல் தொந்தரவு, அனைத்துத் தரப்பு மக்களும் அச்சப்படும் அளவிற்கு கூலிப்படைகளின் அட்டகாசம் என அ.தி.மு.க. ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு வரலாறு காணாத வகையில் சீர்குலைந்து விட்டது.

மத்திய பா.ஜ.க. அரசின் அடிவருடியாக இருந்து முதலமைச்சர் பழனிசாமி “முத்தலாக்” சட்டத்தை ஆதரித்தது, குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்தது, மூன்று வேளாண் சட்டங்களை ஆதரித்து வாக்களித்து - இப்போது இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் பா.ஜ.க.விற்கு துணை போவது, அகில இந்திய கோட்டாவிற்கு ஒதுக்கப்படும் மருத்துவக் கல்வி இடங்களில் 50 சதவீத இடஒதுக்கீட்டை பெறாமல் வஞ்சித்தது - அரசு மருத்துவர்களுக்கு உரிய இடஒதுக்கீட்டையும் கொடுக்க மறுத்தது - புதிய கல்விக் கொள்கையை மறைமுகமாக ஆதரிப்பது - தமிழக இளைஞர்களுக்குக் கிடைக்கும் வேலைவாய்ப்பு பறிபோவதை வேடிக்கை பார்ப்பது என அ.தி.மு.க. ஆட்சியால் தமிழகத்திற்கு நேர்ந்திருக்கும் அநீதிகள் ஏராளம்!

விவசாய நிலங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைப்பது - "விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்ய முடியாது" என்று உச்சநீதிமன்றம் வரை சென்று வாதிட்டு - நிவர், மார்கழி மழை உள்ளிட்ட எந்தப் பேரிடர்களிலும் மத்திய அரசின் நிதியையும் வாங்க முடியாமல் - விவசாயிகளுக்கு இழப்பீடும் வழங்காமல் - பயிர்க் காப்பீட்டின் இழப்பீட்டுத் தொகையைக் கூட அலைக்கழித்து - விவசாயிகளின் தீராத் துயரங்களுக்கும், தற்கொலைகளுக்கும் வித்திட்ட ஒரே முதலமைச்சர் பழனிசாமி!

இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படுவதை கூட்டணியாக இருக்கும் மத்திய அரசின் மூலம் தடுத்து நிறுத்த முடியவில்லை. மீனவர்களின் படகுகள் பறிபோவதை வேடிக்கை பார்க்கிறது அ.தி.மு.க. அரசு. தினந்தோறும் விஷம் போல் ஏறும் விலைவாசியைக் குறைக்க முடியவில்லை. விண்ணை முட்டும் பெட்ரோல் - டீசல் விலை உயர்வையோ, சமையல் எரிவாயு விலை உயர்வையோ, நிறுத்தக் கோரி பா.ஜ.க. அரசிடம் முறையிடக்கூட துணிச்சல் இல்லை. புதிய ரயில்வே திட்டங்களையோ, முன்னேற்றத்திற்கான வேறு முக்கிய திட்டங்களையோ கொண்டு வர முடியாமல் - அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையை அடிக்கல் நாட்டியதோடு மறந்துவிட்டு ஒரு கையாலாகாத ஆட்சியை நடத்தி வரும் - கூவத்தூரில் ஊர்ந்து முதலமைச்சரான பழனிசாமியின் பதவிக்காலம் முடிவுக்கு வருவதுதான் தமிழக மக்களின் ஆர்வம் மிகுந்த எதிர்பார்ப்பாக இருக்கிறது.

“பழுதடைந்த அரசு இயந்திரம்; அமைச்சர்கள் முதல் முதலமைச்சர் வரை வடிகட்டிய ஊழல்”: மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு!

கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5000 ரூபாய் நிதியுதவி வழங்க முடியாது எனக் கூறி விட்டு - அம்மையார் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது என விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் முடிவு தெரியாமலே - தெரிந்து கொள்ள அக்கறை காட்டாமலே - 80 கோடி ரூபாயில் அவருக்கு நினைவிடம் அமைப்பது, தன்னை முதலமைச்சர் வேட்பாளர் என்று முன்னிறுத்திக்கொள்ள அரசுப் பணத்தில் 1000 கோடி ரூபாய் விளம்பரம் என, தமிழகத்தை சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் கடனில் மூழ்கடித்து - மிகப்பெரிய நிதி நெருக்கடியை உருவாக்கி வைத்திருக்கிறார் ஊழல் வழக்கில் சி.பி.ஐ. விசாரணையை எந்த நேரத்திலும் சந்திக்க வேண்டிய முதலமைச்சர் பழனிசாமி.

ஒவ்வொரு துறையிலும் அட்வைசர்களை நியமித்து - அவர்களுக்கு எல்லாம் ஒரு தலைமை அட்வைசரைப் போட்டு - துறையில் உள்ள மூத்த அரசு அதிகாரிகளையும் - அரசு ஊழியர்களையும் - ஏன் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளையும் புறக்கணித்து, பல்வேறு துறைகளை ஊழலுக்கு ஒத்துழைக்கும் ஒரே அதிகாரியின் பொறுப்பில் விட்டு, ஓர் அலங்கோலமான நிர்வாகத்தை 4 ஆண்டுகள் அனைத்து மட்டத்திலும் நடத்தி - நியாயமான கோரிக்கைகளை முன்வைத்துப் போராடும் ஆசிரியர்களை - அரசு ஊழியர்களை - செவிலியர்களை - மருத்துவர்களை உதாசீனப்படுத்தி, தனிச்சிறப்பு வாய்ந்த தமிழக அரசு நிர்வாக இயந்திரத்தை பத்தாண்டு காலம் அ.தி.மு.க. அரசு பழுதடைய வைத்து விட்டது மிகுந்த வேதனையளிக்கிறது.

அ.தி.மு.க. ஆட்சியில், தகவல் பெறும் ஆணையம், விழிப்புணர்வு ஆணையம், ஊழல் தடுப்புத் துறை எல்லாம் அ.தி.மு.க. ஆட்சியின் ஊழல்களை மறைக்கும் நிலைக்கு மாறிவிட்ட அவலம் பழனிசாமி ஆட்சியில் நடந்து விட்டது. தமிழக காவல்துறை சீர்திருத்தச் சட்டம் அ.தி.மு.க. ஆட்சியில் குப்பைத் தொட்டியில் போடப்பட்டு - காவலர்களின் நியாயமான கோரிக்கைகளைக் கூட நிறைவேற்றாமல் – ஸ்காட்லாந்து யார்டு போலீசை விட திறமை மிக்க தமிழகக் காவல்துறையை சீரழித்துள்ளது அ.தி.மு.க. ஆட்சி.

“ஊழல் செய்வோருக்கே இந்த ஆட்சி” என்ற வகையில் லோக் ஆயுக்தா - உள்ளாட்சிகளின் ஊழல்களை விசாரிக்கும் ‘ஆம்புட்ஸ்மேன்’ அமைப்பு எல்லாம் முடக்கப்பட்டு - விவசாயிகள், வணிகர்கள், தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், இளைஞர்கள், மீனவர்கள், நெசவாளர்கள், ஏழை - எளிய நடுத்தர மக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களுக்கும் - ஜனநாயக மாண்புகளுக்கும் - அரசியல் சட்டத்திற்கும் இழுக்கை ஏற்படுத்திய அ.தி.மு.க. ஆட்சியின் கடைசி ஆளுநர் உரைக்கான இந்தக் கூட்டத்தொடரை திராவிட முன்னேற்றக் கழகம் புறக்கணிப்பது என முடிவெடுத்திருக்கிறது என்று தெரிவித்துக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories