மு.க.ஸ்டாலின்

10 ஆண்டுகளாக மனித உரிமைக்கு ஊறு விளைத்துவிட்டு தேர்வுக்கூட்டம் நடத்துவதா? - மு.க.ஸ்டாலின் புறக்கணிப்பு!

மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் பதவியை நிரப்பாமல் அமைதி காத்து விட்டு, தற்போது ஆட்சி முடிவுக்கு வரப்போகும் நேரத்தில் பதவியை நிரப்புவதற்காக தேர்வுக் குழுக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.

10 ஆண்டுகளாக மனித உரிமைக்கு ஊறு விளைத்துவிட்டு தேர்வுக்கூட்டம் நடத்துவதா? - மு.க.ஸ்டாலின் புறக்கணிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் பரிந்துரைகளை மதிக்காமலும், கடந்த ஓராண்டுகாலமாக அதன் தலைவர் பதவி காலியாக இருந்ததை நிரப்பாமலும், பத்தாண்டு காலமாக முடிந்தவரை மனித உரிமைகளுக்கு ஊறு விளைவித்துவிட்டு, இன்று (26.12.2020) அ.தி.மு.க அரசால் கூட்டப்படும் தேர்வுக்குழுக் கூட்டத்தை, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் புறக்கணித்துள்ளார். இதுகுறித்து அரசு முதன்மைச் செயலாளரிடம் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.

கடிதத்தின் விவரம் வருமாறு:-

“தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் நிரப்பப்படாமல் உள்ள தலைவர் பதவிக்குத் தகுதி வாய்ந்தவரை நியமிக்கும் பொருட்டு, தலைமைச் செயலகத்தில் வருகின்ற 26.12.2020 அன்று முதலமைச்சர் தலைமையில் தேர்வுக் குழுக் கூட்டம் நடைபெறுவதாகவும், அக்கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டுள்ளீர்கள்.

மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தைத் திறம்படச் செயல்படுத்தி, தமிழகத்தில் மனித உரிமை மீறல்களை தடுக்கும் உயர்வான நோக்குடன் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் 1997 ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் தோற்றுவிக்கப்பட்டது. மனித உரிமைகள் மீறப்படும் நிகழ்வுகளில் நீதி வழங்கும் அமைப்பாக இந்த ஆணையம் செயல்பட்டு வந்தது. மனித உரிமை ஆணையத்தின் பரிந்துரை, அரசைக் கட்டுப்படுத்துமா என்ற கேள்விக்குள் எல்லாம் செல்லாமல், மனித உரிமைகள் ஆணையத்தின் பரிந்துரைகளுக்குத் திராவிட முன்னேற்றக் கழக அரசு உரிய மதிப்பளித்து, மாநிலத்தில் மனித உரிமை மீறல்கள் எங்கும் நடைபெற்றுவிடாமல் தடுப்பதில் ஆர்வமாகச் செயல்பட்டது.

10 ஆண்டுகளாக மனித உரிமைக்கு ஊறு விளைத்துவிட்டு தேர்வுக்கூட்டம் நடத்துவதா? - மு.க.ஸ்டாலின் புறக்கணிப்பு!

ஆனால் “மனித உரிமைகள்” என்ற உள்ளார்ந்த அடிப்படைக் கொள்கை உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், அதிமுக ஆட்சிக்கு அதன் மீது தேவைப்படும் அளவுக்கு நம்பிக்கையில்லை என்பதை, கடந்த பத்தாண்டு கால ஆட்சியின் அணுகுமுறை வெளிப்படுத்தியிருக்கிறது. மனித உரிமைகள் கண்மூடித்தனமாக மீறப்பட்டுள்ளன. பரமக்குடி துப்பாக்கிச் சூடு, ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு, சாத்தான் குளம் காவல் நிலைய மரணம், டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியா தற்கொலை, பாலியல் தொந்தரவுக்குப்படுத்தப்பட்ட பெண் எஸ்.பி, பொள்ளாச்சி இளம்பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, சேலம் எட்டு வழிச்சாலையை எதிர்த்துப் போராடிய விவசாயிகள் மீது பலப் பிரயோகம், கதிராமங்கலம் விவசாயிகளுக்கு ஆதரவாகப் போராடிய பேராசிரியர் ஜெயராமன் மீது தேசியப் பாதுகாப்புச் சட்ட நடவடிக்கை, டாஸ்மாக்கை மூட அமைதியாகப் போராடிய தாய்மார்கள் மீது சரமாரித் தாக்குதல், சுற்றுப்புறச்சூழலுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த சேலம் மாணவி வளர்மதி மீது குண்டர் சட்டம் என்று, வரிசையாக மனித உரிமைகள் அதிமுக ஆட்சியில் பறிபோயிருக்கின்றன.

ஒவ்வொரு மனித உரிமை மீறல் சம்பவத்தின் போதும் அதிமுக அரசு- குறிப்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அரசு, அதை ஆதரித்துப் பேசி வந்திருக்கிறது. இந்த ஆட்சியில் மாநில மனித உரிமைகள் ஆணையம் அளித்த பரிந்துரைகளுக்கு, எந்தவித மதிப்பும் அளிக்கப்படவில்லை என்ற நிலை இன்றுவரை தொடருகிறது. மாநில மனித உரிமைகள் ஆணையத் தலைவர் பதவி ஓராண்டு காலத்திற்கு முன்பே காலியாகி விட்டது. அடுக்கடுக்காக மனித உரிமைகள் மீறப்பட்ட போதும், ஆணையத்தின் தலைவர் பதவியை நிரப்பாமல் அமைதி காத்து விட்டு, தற்போது ஆட்சி முடிவுக்கு வரப்போகும் கடைசிக் கட்டத்தில், மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் பதவியை நிரப்புவதற்காக தேர்வுக் குழுக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.

1948-ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமைகள் பிரகடனம் மற்றும், 1993 - ஆம் ஆண்டு மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றில் பொறிக்கப்பட்டுள்ள உன்னத நோக்கங்களை முன்னெடுத்துச் செல்ல எந்த முயற்சியும் செய்யாமல்; பத்தாண்டுகால ஆட்சியிலும்- ஓராண்டுகாலம் தலைவர் பதவியை நிரப்பாமல் இருந்த காலத்திலும், முடிந்த அளவு ஊறு விளைவித்து விட்டு, இப்போது திடீரென்று கூட்டப்படும் இந்த தேர்வுக்குழு கூட்டத்தினால் எவ்வித முன்னேற்றமும் ஏற்பட்டுவிடாது; அதில் பங்கேற்பதால் எந்த பயனும் உண்டாகாது. ஆகவே, அதிமுக ஆட்சியின் மனித உரிமை மீறல்களைக் கண்டித்து, இன்று (26.12.2020) நடைபெறும் மாநில மனித உரிமைகள் ஆணையத் தலைவரைத் தேர்வு செய்யும் தேர்வுக் குழுக் கூட்டத்தினை புறக்கணிக்கிறேன் என்று தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

banner

Related Stories

Related Stories