மு.க.ஸ்டாலின்

“பழனிசாமி அல்ல, மோடியே வந்தாலும் தி.மு.க நடத்தும் மக்கள் சபை கூட்டங்களை தடுக்க முடியாது” : மு.க.ஸ்டாலின்

“எடப்பாடி பழனிசாமி அல்ல - மோடியே வந்தாலும் தி.மு.க நடத்தும் மக்கள் கிராம / வார்டுசபை கூட்டங்களை தடுக்க முடியாது” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

“பழனிசாமி அல்ல, மோடியே வந்தாலும் தி.மு.க நடத்தும் மக்கள் சபை கூட்டங்களை தடுக்க முடியாது” : மு.க.ஸ்டாலின்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் நடத்தப்படும் கிராம சபைக் கூட்டத்துக்கு தடை விதிப்பதாக அ.தி.மு.க அரசு நேற்று தெரிவித்திருந்த நிலையில், மரக்காணம் பேரூராட்சியில் இன்று ‘மக்கள் கிராம சபைக் கூட்டம்’ என்ற பெயரில் நடைபெற்ற கூட்டத்தில் ‘அ.தி.மு.கவை நிராகரிப்போம்’ தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது :

“மரக்காணம் பேரூராட்சியில் நடைபெறும் இந்த மக்கள் கிராமசபைக் கூட்டத்திற்கு வருகை தந்திருக்கும் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.

இந்தக் கிராமசபைக் கூட்டத்தை நடத்தக் கூடாது என்று எடப்பாடி பழனிசாமி அரசு தடைபோட்டிருக்கிறது. இதற்குச் சேரும் கூட்டத்தைப் பார்த்து அவர் பயந்து போயிருக்கிறார். இனி ‘மக்கள் கிராமசபை’க் கூட்டமாக இதை நடத்துகிறோம். இதைத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக நடத்துகிறோம்.

தேவையற்ற குழப்பங்களைத் தவிர்ப்பதற்காக மக்கள் கிராமசபைக் கூட்டமாக இதனை நடத்துகிறோம். கடந்த 10 ஆண்டுகாலமாக திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் இல்லை. ஆட்சியில் இருப்பது யார் என்று உங்களுக்கு தெரியும். எடப்பாடி தலைமையில் இருக்க கூடிய அ.தி.மு.க ஆட்சி.

ஆனால் அம்மையார் ஜெயலலிதா ஆட்சியில் இருக்க வேண்டும் என்று மக்கள் முடிவு செய்து தேர்ந்தெடுத்தார்கள். ஆனால் அவர் உடல் நலிவுற்று மறைந்த காரணத்தினால், ஒரு விபத்தின் காரணமாக முதலமைச்சரானார் எடப்பாடி பழனிசாமி. அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதலமைச்சர் ஆனவர் இல்லை.

அவர் எப்படி முதலமைச்சர் ஆனார் என்பது உங்களுக்கு தெரியும். அவர் ஜெயலலிதாவால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் இல்லை; மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல; சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்றாலும் அது ஒரு சந்தேகம்தான். எப்படி முதலமைச்சர் ஆனார் என்றால் ஊர்ந்து சென்று முதலமைச்சர் ஆனார்; எப்படி என்று உங்களுக்கு தெரியும். எப்படி ஊர்ந்து போனார்? என்றால் மண்புழு மாதிரி, சசிகலா காலில் விழுந்து, அவர் முதலமைச்சர் ஆன கதை எல்லாம் நீங்கள் இணையதளத்தில், சமூக வலைதளங்களில் பார்த்திருப்பீர்கள்.

நான் அந்தப் பிரச்சனைக்குள் அதிகம் போக விரும்பவில்லை. இப்பொழுது ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு இந்த ஆட்சி என்னென்ன கொடுமைகளைச் செய்துகொண்டிருக்கிறது? மக்களைப் பற்றிக் கவலைப்படாதவர்களாக ஆட்சியாக இருந்துகொண்டிருக்கிறது.

விரைவிலேயே நாம் தேர்தலைச் சந்திக்கப் போகிறோம். இடையில் இன்னும் நான்கு மாதங்கள்தான் உள்ளன. இந்தத் தேர்தலில் நாமெல்லாம் இந்த ஆட்சிக்கு ஒரு முடிவு கட்டவேண்டும் என்ற எண்ணத்தோடு தான் நீங்கள் எல்லாம் ஒன்று திரண்டு வந்து இருக்கிறீர்கள். எழுச்சியோடு வந்திருக்கிறீர்கள். உணர்ச்சியோடு வந்திருக்கிறீர்கள். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் நம்பிக்கையோடு வந்திருக்கிறீர்கள்.

வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமென்றால் ஆட்சி மாற்றம் வரப்போகிறது, தி.மு.கதான் ஆட்சிக்கு வரப்போகிறது என்பதில் நாங்கள் எதிர்பார்ப்பதை விட - நாங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை விட - நீங்கள்தான் அதிகமாக நம்பிக்கை வைத்துள்ளீர்கள். அந்த நம்பிக்கையை உங்கள் முகத்தில் நான் பார்க்கிறேன். அதுவும் பெண்கள், தாய்மார்கள், சகோதரிகள், உட்கார்ந்திருக்கிற காட்சியை பார்த்து நான் பெருமைப்படுகிறேன். அதுவும் இவ்வளவு கட்டுப்பாடாக உட்கார்ந்திருக்கக் கூடிய காட்சியைப் பார்த்து நான் ஆச்சரியப்படுகிறேன்.

ஆயிரக்கணக்கில் திரண்டு இருக்கிறீர்கள். எவ்வளவு அமைதியாக எவ்வளவு கட்டுப்பாடாக இங்கே உட்கார்ந்து இருக்கிறீர்கள் என்ற காட்சியைப் பார்க்கும் பொழுது, நம்பிக்கையோடு இந்த எடப்பாடி ஆட்சியைத் தூக்கி எறிய வேண்டும், வீட்டுக்கு அனுப்பவேண்டும் என்கிற உணர்வோடு நீங்கள் வந்திருக்கிறீர்கள் என்பதை உணர முடிகிறது.

இந்த மக்கள் கிராமசபைக் கூட்டத்தை தமிழ்நாடு முழுவதும் நடத்த வேண்டுமென்று திராவிட முன்னேற்ற கழகம் முடிவு செய்து நம்முடைய மாவட்டச் செயலாளர்கள், ஒன்றியச் செயலாளர்கள், பேரூர் செயலாளர்கள், நகரச் செயலாளர் அனைவரும் பங்கேற்ற கூட்டத்தில் முடிவெடுத்து அறிவித்தோம்.

“பழனிசாமி அல்ல, மோடியே வந்தாலும் தி.மு.க நடத்தும் மக்கள் சபை கூட்டங்களை தடுக்க முடியாது” : மு.க.ஸ்டாலின்

இந்த மக்கள் கிராமசபைக் கூட்டத்தைத் தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய எல்லா கிராமத்திலும், எல்லா ஊராட்சிகளிலும் நடத்த வேண்டும் என்று முடிவு செய்து ஏறக்குறைய ஒரு 16,500 ஊராட்சிகளில் நடத்த வேண்டும் என்று திட்டமிட்டு இந்தப் பணியை நாங்கள் தொடங்கியிருக்கிறோம். இரண்டு நாளைக்கு முன்பு 23ம் தேதிதான் தொடங்கினோம்.

23-ஆம் தேதி அண்ணா பிறந்த காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் தொகுதியில், குண்ணம் பகுதியில் நான் தொடங்கி வைத்தேன். நான் மட்டுமல்ல நம்முடைய துணை பொதுச்செயலாளர் துரைமுருகன் வேலூர் மாவட்டத்திலும், நம்முடைய பொருளாளர் டி.ஆர்.பாலு அவருக்கான தொகுதியிலும், நம்முடைய துணைப் பொதுச்செயலாளர் பொன்முடி அவர்கள் விழுப்புரம் மாவட்டத்திலும், அந்தியூர் செல்வராஜ் அவர்கள் திருப்பூர் மாவட்டத்திலும் தொடங்கி வைத்தார்கள். அதேபோல் ஐ.பெரியசாமி அவர்கள் திண்டுக்கல் மாவட்டத்திலும் தொடங்கி வைத்தார்கள். இப்படிக் கட்சியில் இருக்கக்கூடிய முன்னோடிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அந்தந்த மாவட்டத்தில் சென்று தொடங்கிவைத்து, அந்தந்த பகுதிகளில் இருக்கக்கூடிய ஒன்றியச் செயலாளர்கள், நகரச் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் அனைவரும் சேர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

நேற்று முன்தினம் குண்ணம் பகுதியில் நான் தொடங்கினேன். இன்றைக்கு மரக்காணத்திற்கு வந்திருக்கிறேன். முதன் முதலில் 23-ஆம் தேதி தொடங்கிய போது, முதல் நாள் மட்டும் 1,166 கூட்டங்கள் நடைபெற்றன. நேற்று அதையும் விட அதிகமாக 1,642 கூட்டங்கள் நடைபெற்றன. இணையம் வழியாக அ.தி.மு.க.வை நிராகரிக்கிறோம் என்று ஒரு தீர்மானம், அதை ஆதரித்து 18 லட்சத்து 70 ஆயிரம் பேர் பதிவு செய்து இருக்கிறார்கள். நேற்றும், இன்றும் மட்டும் 23 ஆயிரம் உறுப்பினர்கள் அலைபேசியில் அழைப்பு விடுத்துச் சேர்ந்திருக்கிறார்கள்.

தொடங்கிய முதல் நாளில் மட்டும் 30 லட்சம் பேர், நேற்று 35 லட்சம் பேர் நேரடியாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கும் 40 லட்சம் பேர் வருவார்கள். இணையத்தின் வழியாக ஒரு கோடியே 80 லட்சம் பேர் கிராம/வார்டு சபைக் கூட்டத்தை கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மொத்தமாக 2 கோடியே 10 லட்சம் பேரைக் கடந்து, இரண்டாவது நாளில் இரண்டு கோடியே 58 லட்சம் பேரை கடந்து வந்திருக்கிறது. இது பத்து நாள் நடக்கப்போகிறது.

இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத நிலையில் உள்ளது அ.தி.மு.க. ஆட்சி. நேற்று இரவு ஒரு 8 மணி அளவில் இதற்குத் தடை போட்டார்கள். நான் 9 மணிக்கு ‘நீங்கள் தடை போட்டாலும் அதையும் மீறி நாங்கள் நடத்துவோம்’ என அறிவித்தேன். கிராமசபை என்ற பெயரில் நடத்தினால் குழப்பம் வரும் என்று நீங்கள் சொல்கிறீர்கள்.

ஆனால் அதற்காக நாங்கள் விட்டுவிட மாட்டோம். மக்கள் கிராமசபை கூட்டம் என்ற தலைப்பில் நடத்துவோம். அதற்கும் தடை போட்டடீர்கள் என்றால் அதையும் தாண்டி நடத்துவோம். அதை நீங்கள் தடுக்க முடியாது. யாராலும் தடுக்க முடியாது. மோடியே வந்தாலும் சரி, இதைத் தடுத்து நிறுத்த முடியாது என்பதை முதலில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்தக் கட்சியை உருவாக்கிய, நம்மை ஆளாக்கிய, வங்கக் கடலோரத்தில் உறங்கிக் கொண்டிருக்கக் கூடிய, நம்முடைய ஒப்பற்ற தலைவர் பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சி மண்ணில் - குண்ணத்தில்தான் முதன் முதலில் நான் தொடங்கினேன். அடுத்து இந்த மரக்காணம்.

மரக்காணத்தை நான் மறக்க முடியாது. ஏனென்றால், அது விழுப்புரம் மாவட்டம். விழுப்புரம் மாவட்டத்திற்கு எனக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. முதன்முதலில் மாநாட்டுக்குத் தலைமை தாங்குகிற வாய்ப்பு இந்த விழுப்புரம் மாவட்டத்தில்தான் எனக்கு கிடைத்தது. அது ஒரு பெருமை எனக்கு உண்டு.

அடுத்து 1975-ல் இந்தியாவில் நெருக்கடி நிலை அமல்படுத்தினார்கள். அப்பொழுது கலைஞர் தலைமையில் இருந்த தி.மு.க. ஆட்சியைக் கலைத்தார்கள். 1976 ஜனவரி மாதம் நம்முடைய ஆட்சி கலைக்கப்பட்டது. கலைக்கப்பட்ட மறுநிமிடமே போலீஸ் வந்தது. அப்பொழுது முதலமைச்சராக இருந்தவர் நம்முடைய தலைவர் கலைஞர்.

ஜனவரி மாதம் 31ஆம் தேதி மாலை 5 மணிவரை முதலமைச்சர் அவர். 6 மணிக்கு அவர் முதலமைச்சர் இல்லை. சற்று நேரத்தில் போலீஸ் வந்தது. வந்தவுடனே தலைவர் நம்மைத்தான் கைது செய்து வந்திருக்கிறார்கள் என்று நினைத்தார். ஏனென்றால் எல்லா தலைவர்களையும் அப்பொழுது கைது செய்துவிட்டார்கள். வாஜ்பாய் கைது, அத்வானி கைது, ஜார்ஜ் பெர்னாண்டஸ் கைது, ஜெயபிரகாஷ் நாராயண் கைது. இவ்வாறு எல்லாத் தலைவர்களும் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்கள்.

அதுபோல, அவசரநிலையை எதிர்த்த காரணத்தால் தன்னைத்தான் கைது செய்ய வந்திருக்கிறார்களோ எனக் கருதிய முதலமைச்சராக இருந்த கலைஞர் அவர்கள் ‘என்னை தான் கைது செய்ய வந்து இருக்கிறீர்களா’ என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு அவர்கள் உங்களைக் கைது செய்ய வரவில்லை உங்கள் மகனைக் கைது செய்ய வந்திருக்கிறோம் என்று சொல்லி இருக்கிறார்கள். அதற்கு தலைவர் அவர்கள் ‘அவன் ஊரில் இல்லை. அவன் மதுராந்தகத்தில் நாடகம் முடித்துவிட்டு திண்டிவனத்தில் நாடகத்தில் பங்கேற்கச் சென்றுள்ளான். வந்த உடனே நான் அனுப்பி வைக்கிறேன்’ என்று சொல்லி அனுப்பி வைத்திருக்கிறார். அப்போது நான் இருந்த மாவட்டம் இந்த விழுப்புரம் மாவட்டம். அந்த விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம் தொகுதியில் இன்றைக்கு இந்த நிகழ்ச்சி நடைபெறுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

அன்று நெருக்கடி நிலையைப் போல, - தற்போது நம்முடைய மாநில உரிமைகளை எல்லாம் பறித்துக் கொண்டு, மாநில சுயாட்சிக்கு உலை வைக்கக்கூடிய ஓர் ஆட்சி மத்தியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் - அதற்கு உடந்தையாக மாநிலத்தில் இருக்கக்கூடிய எடப்பாடி தலைமையில் இருக்கக்கூடிய அ.தி.மு.க ஆட்சி ஆதரவாக இருக்கிறது. அன்று நெருக்கடி நிலையில் இருந்து இந்த நாட்டை – ஜனநாயகத்தைக் காப்பாற்ற கலைஞர் எப்படிக் குரல் கொடுத்தாரோ, அதே போல் இன்றைக்கு தமிழ்நாட்டில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் நெருக்கடியில் இருந்து மக்களைப் பாதுகாக்க ஜனநாயகக்குரல் கொடுக்க நாம் இங்கு கூடியிருக்கிறோம்.

ஐந்து நாட்களுக்கு முன்பு தமிழ்நாட்டினுடைய ஆளுநரை சந்தித்தோம். அப்பொழுது 97 பக்கம் கொண்ட ஒரு ஊழல் புகார் கொடுத்தோம். இந்த ஆட்சியின் மீது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அமைச்சர்களாக இருக்கக்கூடிய தங்கமணி, வேலுமணி, உதயகுமார், காமராஜ், இப்படி எல்லா அமைச்சர்கள் மீதும் புகார் கொடுத்து இருக்கிறோம். ஆதாரத்தோடு முழுவிவரத்தோடு புகார்கள் எல்லாம் கொடுக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி அவருடைய உறவினர்களுக்கு நெடுஞ்சாலைத்துறையில் டெண்டர் விட்ட கதை உங்களுக்கு தெரியும். கிட்டத்தட்ட 5,000 - 6,000 கோடி ரூபாய் வரையில் நெடுஞ்சாலைத்துறை டெண்டர் விட்டு ஊழல் செய்திருக்கிறார்.

நம்முடைய வழக்கறிஞர் பாரதி அவர்கள் நீதிமன்றத்தில் தி.மு.க. சார்பில் வழக்கு போட்டார். அதில் நியாயம் இருக்கிறது, உண்மை இருக்கிறது, இதை நியாயமாக விசாரிக்கவேண்டும், அவர் முதலமைச்சராக இருக்கின்ற காரணத்தினால் சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு போட்டது.

அந்த உத்தரவை அமல்படுத்த கூடாது என்று எடப்பாடி பழனிசாமி அவர்கள் உச்ச நீதிமன்றம் சென்று தடை வாங்கினார்கள். நியாயமாக தன் மீது தவறு இல்லை என்றால் அவர் வழக்கைச் சந்தித்து இருக்க வேண்டும். எப்படி ஆ.ராசா அவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட போது ‘தடை வாங்காமல் அதைச் சந்திக்கிறேன், அதைச் சந்தித்து நான் நிரூபித்து விட்டு விடுதலை ஆகிய வெளியே வருவேன்’ என்று சொன்னபடி 2ஜி வழக்கில் விடுதலையாகி வெளியே வந்தாரோ, அதேபோல் இவர் செய்திருக்க வேண்டும். ஆனால் அவர் அப்படி வந்தால் விசாரணை நடத்துவார்கள், விசாரணை நடத்தினால் உண்மை எல்லாம் வெளியே வந்து விடும், உண்மை எல்லாம் வெளியே வந்தால் நாம் மாட்டிக்கொள்வோம், மாட்டிக்கொண்டால் பதவி பறிபோய் விடும், பதவி போவது மட்டுமின்றி நாம் ஜெயிலுக்கு செல்ல வேண்டும் என்று பயந்ததால், எடப்பாடி பழனிசாமி அந்த வழக்கில் ஸ்டே வாங்கி இருக்கிறார். இன்னும் நான்கு மாதம் தான். நம் ஆட்சி வரப்போகிறது. வந்தவுடனே அந்த ஸ்டே உடைக்கப்படும். அப்பொழுது அவர் தப்பிக்க முடியாது.

இப்படி ஆளும் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் எல்லோர் மீதும் ஊழல் வழக்குகளும், பிரச்சினைகளும் இருக்கின்றன. சொத்து வாங்கி குவித்துள்ளார்கள். மின்சார வாரியத்தில் ஊழல் செய்து இருக்கிறார்கள். கொரோனா காலத்தில் ஏழை எளிய மக்களுக்கு மத்திய அரசு அரிசி கொடுக்கிறது. அந்த அரிசியை வெளிச்சந்தையில் கொண்டு சென்று விற்று அதில் ஊழல் செய்த ஆட்சி இந்த ஆட்சி.

மத்திய அரசு தமிழ்நாட்டு மக்களுக்கு தந்து இருக்கக்கூடிய அரிசியைக் கூட ஒழுங்காக வழங்கவில்லை. அதிலும் ஊழல் செய்திருக்கிறார், அமைச்சர் காமராஜ்.

அதையெல்லாம் ஆதாரங்களோடு நாங்கள் சேகரித்துப் புள்ளி விவரங்களோடு இணைத்து ஆளுநரிடம் கொடுத்திருக்கிறோம். இந்த முறை ஆளுநர் நம்மை தெளிவாகப் புரிந்து கொண்டார். ஏனென்றால், அவருக்கு தெரிகிறது. நான்கு மாதங்களில் ஆட்சிமாற்றம் வரப்போகிறது என்பது அவருக்கும் தெரிந்திருக்கிறது. நமக்கே தெரிந்து இருக்கும்போது அவர்களுக்கு தெரியாதா? அவருக்கும் தெரிந்துவிட்டது. அவரும் நடவடிக்கை எடுப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.

எடுக்கவில்லை எனில், பொறுத்துக் கொள்ளுங்கள். நான்கு மாதங்களில் நாம் நடவடிக்கை எடுப்போம். அதுதான் உண்மை. இதையெல்லாம் இன்றைக்கு எடப்பாடி பழனிசாமி பார்த்து புலம்ப ஆரம்பித்து விட்டார். ‘இன்னும் நான்கு மாதங்கள் தான், ஆட்சி போகப் போகிறது. நம் மீது ஊழல் புகார்களை கொடுத்து விட்டார்கள். ஆளுநர் நிச்சயமாக நடவடிக்கை எடுத்துவிடுவார். கவர்னர் எடுக்காவிட்டாலும் 4 மாதங்களில் வருகின்ற தி.மு.க. ஆட்சி எடுத்துவிடும்’ என்று தெரிந்துவிட்டதால் அந்த ஆத்திரத்தில் ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறார்.

தி.மு.க ஒரு குடும்ப கட்சி என்று ஊர் ஊராக பேசிக்கொண்டிருக்கிறார். ஊழல் கட்சி, ஊழல் கட்சி என்று பேசிக் கொண்டிருக்கிறார். அவர் மீது நாம் ஊழல் புகார் சொல்கிறோம். அவர்கள் நம்மைப் பார்த்து ஊழல் கட்சி என்று சொல்கிறார்கள்.

ஒரு திருடன் என்றைக்குமே தன்னை திருடன் என்று ஒத்துக் கொள்ள மாட்டான். நல்லவனைப் பார்த்து இவன்தான் திருடன் என்று சொல்வான். அதேபோல், எடப்பாடி பழனிசாமி இன்றைக்கு ஒரு ஊழல்வாதியாக இருக்கிற காரணத்தினால் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்று விட்டார். அதனால்தான் தி.மு.க மீது இன்றைக்கு ஊழல், ஊழல் என்று புகார் சொல்கிறார். எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது தலைவர் கலைஞர் மீது சர்க்காரியா கமிஷன் விசாரணை போட்டார்கள். ஏதாவது நிரூபிக்க முடிந்ததா? எம்.ஜி.ஆர் என்ன சொன்னார், இந்த ஊழல் புகாரை நாங்கள் கொடுத்தது உண்மைதான். இதை சொன்னது சேலம் கண்ணன் என்று சொன்னார். எனக்கு தெரியாது என்று சொன்னார். அதனால் அது தள்ளுபடி ஆனது.

நம்முடைய ராஜா மீது போட்ட வழக்குகள், கனிமொழி மீது போட்ட வழக்குகள் எல்லாமே தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன. கலைஞர் டி.வி மீது போட்ட வழக்கு எல்லாமே தள்ளுபடி ஆனது.

இதுவரைக்கும் நம் மீது எத்தனையோ ஊழல் வழக்கு போட்டிருக்கலாம் ஆனால் எதுவுமே நிரூபிக்கப்படவில்லை. ஏனென்றால் அது எல்லாமே அரசியல் நோக்கத்திற்காக போடப்பட்டது.

அம்மையார் ஜெயலலிதா இரண்டு மூன்று முறை பதவியை ஏற்க முடியாமல் போனது. ஏற்றுக்கொண்ட பதவியை ராஜினாமா செய்ய நேர்ந்தது. ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு இறுதியாக பெங்களூரு நீதிமன்றத்தில் தீர்ப்பு என்ன? 4 பேருக்கு தண்டனை கொடுத்தார்கள். ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் என்ற நான்கு பேருக்கு தண்டனை கொடுத்தார்கள். ஜெயலலிதா அவர்கள் இறந்து விட்டார்கள். அதனால் அவர் ஜெயிலுக்கு போக வேண்டிய அவசியமில்லை. அவருக்கு தண்டனை இல்லை. ஆனால் தண்டனை, தண்டனை தான். குற்றம், குற்றம்தான்.

இறந்துபோன தலைவரைப் பற்றி நான் அதிகம் விமர்சிக்க விரும்பவில்லை. ஆனால் நீங்கள் உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும். நான்கு ஆண்டுகள் சிறை. நூறு கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

எந்த ஆட்சியில் இருந்தவர்கள் அதை அனுபவித்தார்கள். இன்றைக்கும் சிலர் ஜெயிலில்தானே இருக்கிறார்கள். தி.மு.க மீது புகார் சொல்கிறார்களே? யாராவது நம்முடைய தலைவர்கள் கைது செய்யப்பட்டு ஊழல் வழக்கில் சிக்கி தண்டனை பெற்றிருக்கிறார்களா? இல்லையே. குடும்ப கட்சி, குடும்ப கட்சி என்று சொல்கிறீர்களே! குடும்பத்தில் இருக்கக்கூடியவர்கள் இந்த இயக்கத்திற்காக பணியாற்றுகிறார்கள். இந்த இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டு கடமையாற்றி கொண்டிருக்கிறார்கள். நான் இன்றைக்கு வந்து உட்கார்ந்து இருக்கிறேன் என்றால் நேரடியாக வந்து உட்கார்ந்து விடவில்லை. 13 வயதில் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு மாணவனாக கையில் கொடியேந்தி - தலைவர் எப்படி 13 வயதில் திருவாரூரில் இந்தியை எதிர்த்து போராட்டத்தை நடத்தினாரோ, மாணவர்களை ஒன்று திரட்டி, “ஓடி வந்த இந்திப் பெண்ணே கேள். நீ தேடி வந்த கோழையுள்ள நாடிதல்லவே” என்று முழங்கி கலைஞர் அவர்கள் பள்ளிப்பருவத்தில் போராடினாரோ – அவருடைய வாரிசாக படிப்படியாக, கட்சி ரீதியாக பணியாற்றி நான் வந்துள்ளேன். அரசியல்ரீதியாக வந்துள்ளேன்.

இதே எடப்பாடி பழனிசாமியின் உறவினர்கள், மாமன், மச்சான், சம்பந்தி எல்லாம் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் போல ஊழல் குடும்பக் கட்சியாகத்தான் இருக்கக்கூடாது. அதுதான் உண்மை. இவ்வாறுதான் எடப்பாடி பழனிசாமி நிலை இருந்து கொண்டிருக்கிறது.

கலெக்ஷன், கரப்ஷன், கமிஷன். இதுதான் இந்த ஆட்சியின் கொள்கையாக இருந்து கொண்டிருக்கிறது. உங்களையெல்லாம் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். விரைவில் தேர்தல் வரப்போகிறது. அதற்கு நீங்கள் எல்லாம் ரொம்ப ஆவலாக - நான் இப்பொழுது உள்ளே வரும்போது கூட சில தாய்மார்கள் அடுத்து நீங்கள் தான் அடுத்து நீங்கள் தான் அடுத்து நாம் தான் அடுத்து நாம் தான் என்று தமிழ்நாட்டில் எங்கு சென்றாலும் எல்லா தாய்மார்களும், இந்த ஆட்சியை எப்போ விரட்ட போறீங்க எப்போ விரட்ட போறீங்க என்று சொல்லக்கூடிய காட்சியை பார்க்கிறோம் – அந்த மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் உங்களையெல்லாம் இங்கே நாம் அழைத்திருக்கிறோம்.

ஆனால் தி.மு.க.வை பொறுத்தவரைக்கும் ஆட்சியில் இருந்தாலும் இல்லை என்றாலும் மக்களை சந்திக்கிற கட்சி. 10 ஆண்டுகள் ஆட்சியில் இல்லை. ஆட்சியில் இல்லாத நேரத்தில் நாம் என்ன ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தோமா? அரசியலிலிருந்து துறவறம் சென்றுவிட்டோமா? நாம் தான் பொறுப்பில் இல்லை, ஆட்சியில் இல்லையே, மக்களைப் பற்றி ஏன் கவலைப்பட வேண்டும் என்று இருந்தோமா? மக்கள் பிரச்சினைகளை கையில் எடுத்தோம். விவசாய பிரச்சினையா, குடிநீர் பிரச்சினையா, சாலை வசதிகளா, மொழி பிரச்சினையா, எல்லா பிரச்சினைகளையும் கையில் எடுத்தோம். அதேபோல் நீட் பிரச்சினை வந்த போதும் அதையும் கையில் எடுத்தோம்.

தொடர்ந்து பத்து வருடமாக இதுபோல மக்கள் பணியைத்தான் செய்து கொண்டிருக்கிறோம். தி.மு.க. தலைமையில் இருக்கக்கூடிய கூட்டணி கட்சிகளைப் பொறுத்தவரைக்கும் இணைந்து ஒற்றுமையாக இருந்து எப்படி நாடாளுமன்ற தேர்தலில் ஒரு கூட்டணி அமைத்து ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது போல் சட்டமன்ற தேர்தலில் அதைவிட ஒரு மிகப்பெரிய வெற்றியை பெற்றிட நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.”

இவ்வாறு கழகத் தலைவர் அவர்கள் உரையாற்றினார்.

“பழனிசாமி அல்ல, மோடியே வந்தாலும் தி.மு.க நடத்தும் மக்கள் சபை கூட்டங்களை தடுக்க முடியாது” : மு.க.ஸ்டாலின்

வார்டுசபைக் கூட்டத்தை நிறைவு செய்து தி.மு.க தலைவர் ஆற்றிய உரை விவரம் வருமாறு:

மக்கள் எல்லோரும் உங்கள் மேல் நம்பிக்கை வைத்து வந்திருக்கிறோம். அதனால்தான் எங்கள் பகுதிகளில் இருக்கிற பிரச்சினைகளை உங்களிடம் சொல்கிறோம் என்று சொல்கிறீர்கள். கொரோனா காலத்தில் சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், பேரூர் செயலாளர்கள், களத்திற்கு சென்று, உதவிகளை கொண்டு சென்று கொடுத்த காட்சிகளை எல்லாம் பத்திரிகைகளிலும், செய்திகளிலும் நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

அப்பொழுது சொன்னேன், 5,000 ரூபாய் ஒவ்வொரு குடும்பத்திற்கும் கொடுக்கவேண்டும் என்று சொன்னேன். நிவாரண நிதியாக உடனே கொடுக்க வேண்டும் என்று சொன்னேன். 1,000 ரூபாய் மட்டுமே கொடுத்தார்கள். இப்பொழுது தேர்தல் வரப்போகிறது. மழை, வெள்ளத்தை காரணமாக வைத்து, பொங்கலை காரணமாக வைத்து 2,500 ரூபாய் கொடுக்க போகிறோம் என்று அறிவித்திருக்கிறார்கள். நான் கொடுக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. நான் அதை தடுக்கவில்லை. அது மக்களுக்குத்தான் செல்கிறது. அது அரசாங்கத்தின் பணம். அது அ.தி.மு.க.வின் பணம் அல்ல, எடப்பாடியின் பணமல்ல, அதை அவர்கள் கொள்ளை அடித்து வைத்திருக்கக்கூடிய பணம் அல்ல, அது அரசாங்கத்தின் பணம். நமது வரிப்பணம்.

அப்பொழுது 1,000 ரூபாய் கொடுத்தார்கள். 2,500 ரூபாய் இப்போது கொடுக்கிறார்கள். 5,000 ரூபாய் கொடுக்க வேண்டும் என்று நான் அறிக்கை விடுத்து இருக்கிறேன்.

அதேபோலதான் கொரோனா காலத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுத வேண்டும் என்று சொன்னார்கள். கொரோனா காலத்தில் அந்த மாணவர்கள் வந்தால், அந்த தொற்று ஏற்பட்டுவிடும். உயிருக்கு ஆபத்து வந்துவிடும். அந்த மாணவர்கள் எல்லாம் வெளியே வரக்கூடாது. தேர்வு எழுதக் கூடாது. தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று நான் கேட்டுக் கொண்டேன். உடனே தேர்வை ஒத்திவைத்தார்கள். அதற்குப் பிறகு அது முடியவில்லை, இன்னும் தொடர்ந்து இருந்து கொண்டுதான் இருக்கிறது. அதற்குப் பிறகு தேர்வு எழுதாமலேயே அவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று நாங்கள் சொன்னோம். உடனே அவர்கள் நாம் சொன்னதை செய்து தேர்ச்சி செய்ய வைத்தார்கள்.

மின்சார வாரிய பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கப் போவதாக காலையில் ஒரு செய்தி வந்தது. மாலையில் நான் ஒரு அறிக்கை விட்டேன். மறுநாள் காலையில் அதை ரத்து செய்தார்கள்.

நேற்று காலையில் குப்பை கொட்டுவதற்கு ஒவ்வொரு வீட்டிற்கும் வரி என்று சொன்னார்கள். இது மிகப்பெரிய கொடுமை. அதையும் கண்டித்து அறிக்கை விட்டேன். அதுவும் ரத்து என்று அறிவித்துவிட்டார்கள்.

நாம் சொல்வது எல்லாம் இன்று நடந்துகொண்டிருக்கிறது. நாம் சொல்லி தான் நடக்கிறது என்பதனால் நான் தான் ஆட்சியில் இருக்கிறோம் என்ற உணர்வு மக்களுக்கு வந்துவிட்டது. அதனால் தான் நீங்களும் அந்த நம்பிக்கையுடன் இங்கு வந்து உட்கார்ந்து பல்வேறு பிரச்சினைகளை சுட்டிக் காட்டி இருக்கிறீர்கள். டெல்லி தலைநகரத்தில் பார்த்தீர்களென்றால், 30-ஆவது நாளாக ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான விவசாயிகள் பல மாநிலங்களிலிருந்து, பஞ்சாபிலிருந்து, ஹர்யானாவிலிருந்து, உத்தரப் பிரதேசத்திலிருந்து வந்து, கொடுமையான குளிரையும் பொருட்படுத்தாமல் 30 நாளாக தொடர்ந்து, அங்கேயே தங்கி, அங்கேயே சமைத்து, அங்கேயே சாப்பிட்டு அங்கே படுத்து, அங்கே உண்ணாவிரதமிருந்து, அங்கேயே போராட்டத்தை நடத்திக் கொண்டு 30 நாளாக குடும்பம் குடும்பமாக விவசாயிகள் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

இதுவரைக்கும் பிரதமராக இருக்கக்கூடிய மோடி அவர்கள், அவர்களை அழைத்து பேசவில்லை. ஏற்கனவே தமிழ்நாட்டிலிருந்து விவசாயிகள் எல்லாம் டெல்லிக்கு சென்று போராடிய கதை எல்லாம் உங்களுக்கு தெரியும். பிச்சை எடுத்து போராடினார்கள், கோவணத்தைக் கட்டிக் கொண்டு போராடினார்கள், கண்ணை கட்டிக்கொண்டு போராடினார்கள், சொல்வதற்கே கூச்சமாக உள்ளது நிர்வாணமாகக் கூட அவர்கள் போராடினார்கள். இந்த கதையெல்லாம் உங்களுக்கு தெரியும்.

அப்பொழுது கூட மத்தியில் இருக்கக்கூடிய அரசு அதைப்பற்றி கவலைப்பட வில்லை. மாநிலத்தில் இருக்கக்கூடிய அ.தி.மு.க அரசும் அதை பற்றி சிந்திக்க கூட இல்லை.

இந்த 3 வேளாண் சட்டங்களை தற்பொழுது பாராளுமன்றத்தில் நிறைவேற்றினார்கள். எல்லா மாநிலங்களும் கடுமையாக எதிர்த்தது.

ஆனால் ஒரே ஒரு மாநிலம், எடப்பாடி தலைமையிலான தமிழ்நாடு மட்டும் அதை ஆதரிக்கிறது. ஆனால் அவர் தன்னை விவசாயி, விவசாயி என்று சொல்கிறார். ஆனால் அவர் விவசாயி இல்லை. விவசாயி என்ற பெயரில் ஒரு நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்.

விவசாயப் பிரச்சினை பொருத்தவரைக்கும், தி.மு.க ஆட்சிக்காலத்தில், கலைஞர் முதலமைச்சராக இருந்த பொழுது இலவச மின்சாரம், அதை நிறைவேற்றி தந்தது கலைஞர் தான் என்பது உங்களுக்கு தெரியும்.

விவசாய பெருங்குடி மக்களுக்காக எம்.ஜி.ஆர். ஆட்சியில் இருந்தபொழுது நாராயணசாமி நாயுடு அவர்கள் தலைமையில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினார்கள். அந்தப் போராட்டம் எதற்காக என்று கேட்டீர்கள் என்றால் இலவச மின்சாரம் கேட்டு அல்ல, மின்சார கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று சொல்லி ஒரு போராட்டம் நடத்தினார்கள். எவ்வளவு குறைக்க வேண்டும்? ஒரு பைசா மட்டுமே குறைக்க வேண்டும் என்று சொல்லி, ஆனால் எம்.ஜி.ஆர் தலைமையில் இருந்த அ.தி.மு.க ஆட்சி அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

1989-இல் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக வந்தார்கள். யாரும் கோரிக்கை வைக்கவில்லை, ஊர்வலம் வரவில்லை, உண்ணாவிரதம் இருக்கவில்லை, போராட்டம் நடத்தவில்லை, மனு கூட கொடுக்கவில்லை. ஆனால் கலைஞர் அதை ஞாபகம் வைத்துக்கொண்டு என்னுடைய தலைமையில் இருக்கக்கூடிய தி.மு.க ஆட்சி காலத்தில் நீங்கள் மின்சார கட்டணமாக ஒரு பைசா கூட தர வேண்டாம் என்று இலவச மின்சாரம் என்று அறிவித்தார்கள்.

அடுத்து கூட்டுறவு வங்கியில் வாங்கிய இருக்கக்கூடிய கடனை முழுவதுமாக தள்ளுபடி செய்வேன் என்று அவர் அறிவித்தார். 7,000 கோடி ரூபாய். நாங்கள் அவர்களிடத்தில் சொன்னோம், 7,000 கோடி ரூபாய் எவ்வாறு தள்ளுபடி செய்ய முடியும்.

அதிலும் அ.தி.மு.க.காரர்கள் அதனை அதிகமாக வாங்கியிருக்கிறார்கள். 10 லட்சம், 20 லட்சம், 25 லட்சம் வரை வாங்கி இருக்கிறார்கள். ஆனால் தி.மு.க.காரர்கள் 1,000, 2,000 வரை தான் வாங்கி இருக்கிறார்கள். அதை ஏன் தள்ளுபடி செய்ய வேண்டும்? என்று நாங்கள் கேட்டோம்.

அப்போது கலைஞர் என்ன சொன்னார் தெரியுமா? நான் அவர்களைத் தி.மு.கவாகவோ, அ.தி.மு.கவாகவோ, காங்கிரஸ் கட்சியாகவோ, கம்யூனிஸ்ட் கட்சியாகவோ பார்க்கவில்லை.

அவர்கள் அத்தனை பேரையும் தமிழ்நாட்டு விவசாய பெருங்குடி மக்களாக பார்க்கிறேன் என்று சொல்லி கடனை தள்ளுபடி செய்தார். 7,000 கோடி ரூபாய் கடனை கோட்டையில் சென்று கூட கையெழுத்துப் போடவில்லை. நேரு ஸ்டேடியத்தில் பதவிப்பிரமாணம் செய்து விட்டு அங்கேயே கையெழுத்து போட்டார்.

விவசாயிகளுக்கு ஏற்ற ஆட்சியாக விவசாயிகளின் தோழனாக, நண்பனாக கலைஞர் ஆட்சி நடத்தினார். ஆனால் இன்றைக்கு விவசாயிகள் பற்றி கவலைப்படாத ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.

இந்தப் பகுதியில் மீனவர் மக்கள் அதிகம்பேர் உள்ளீர்கள். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் இங்கு இருக்கிறீர்கள். ஆனால் அவர்களுடைய கோரிக்கைகளை இந்த ஆட்சி நிறைவேற்றவில்லை. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

சமூக நலக்கூடம் வேண்டும் என்பது இங்கு உள்ள மீனவர்களின் நீண்டநாள் கோரிக்கை. அதையும் அவர்கள் நிறைவேற்றவில்லை. மீனவர் சந்தை குளிர்பதன சேமிப்புக் கிடங்கு போன்றவற்றை கூட அமைத்துக் கொடுக்கவில்லை. மீனவர்களின் மீன்பிடி தொழிலுக்கு டீசல் மானியம் வழங்கவில்லை. அதுவும் மறுக்கப்படுகிறது. மீனவர்கள் நல வாரியம் அமைக்காமல் காலத்தை கடத்திக் கொண்டிருக்கிறார்கள். வசவன்குப்பம் மற்றும் பக்கத்து மீனவ குடியிருப்புகளிக்கு மயான வசதி செய்து கொடுக்கப்படவில்லை.

மீன்வளர்ப்பு இந்த பகுதியின் முக்கிய தொழில் என்பதை திராவிட முன்னேற்றக் கழகம் தெளிவாக உணர்ந்து உள்ளது. அதனால்தான் 2016 சட்டமன்ற தேர்தல் நேரத்தில் மீன் வளர்ப்பு தொழிலுக்கு லைசென்ஸ் வழங்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்தோம்.

ஆனால் அப்பொழுது ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க அரசு தி.மு.க சொன்னதை நாங்கள் நிறைவேற்ற முடியாது என்ற ஓரவஞ்சனையோடு அதனை எல்லாம் அவர்கள் கிடப்பில் போட்டார்கள். இப்பொழுது நான் ஒரு உறுதிமொழி கொடுக்கிறேன். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், மீன்வளர்ப்பு தொழிலுக்கு உரிய லைசன்ஸ் நிச்சயமாக வழங்கப்படும்.

மரக்காணத்தில் மீன்பிடி துறைமுகம் கட்ட 243 கோடி ரூபாய் ஒதுக்கியது அ.தி.மு.க. 2016 இல் இந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது. ஆனால் இதுவரைக்கும் அந்தத் திட்டம் கிடப்பில் உள்ளது. அதனால் இன்றைக்கு மீனவர்களின் பொருளாதார வாழ்வாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பகுதியில் 1000 ஏக்கரில் உப்பளம் உள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் கடந்த 4 வருடமாக 25% உற்பத்தி குறைந்துள்ளது. உற்பத்தியை குறைத்து குஜராத் உப்பை தமிழ்நாட்டில் விற்க அ.தி.மு.க. செயல்பட்டுக்கொண்டு உள்ளது. பா.ஜ.க. அரசுக்கு அந்த அளவுக்கு அடிமையாக இருந்து, தமிழகத்தின் உப்புத் தொழிலை நாசமாக்கி விட்டது.

ஏறக்குறைய பத்து தாலுகாவில் இருக்கக்கூடிய தொழிலாளர்கள் உப்புத் தொழிலை தான் நம்பி இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு 4 வருடமாக எந்த வேலையும் இல்லாமல் பாதிப்படைந்து உள்ளார்கள்.இங்கு உப்பு தொழிற்சாலை தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தி, வலியுறுத்தி அது நிறைவேறாமல் மக்கள் ஏமாந்து உள்ளனர்.

அதுமட்டுமில்லாமல் பருவ காலத்தில் கொடுக்க வேண்டிய மானியமும் மாநில அரசு கொடுக்கவில்லை. உப்புத் தொழிலை நம்பி இருக்கக்கூடிய தொழிலாளர்களின் வாழ்க்கை நலிவடைந்து உள்ளது. நிச்சயமாக நாம் ஆட்சிக்கு வந்த பிறகு இதற்கு ஒரு முடிவு கட்டுவோம் என்பதை இந்த நேரத்தில் எடுத்துச் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

இங்கு வந்து 20,000 மாணவர்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. சொந்த ஊருக்கு பக்கத்திலேயே கல்லூரியில் படிக்க முடியாத நிலை இந்த ஆட்சி காலத்தில் ஏற்பட்டுள்ளது. நிச்சயமாக அந்த சூழ்நிலை மாற்றி அமைக்கப்படும். அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும்.

இங்கு ஒரு பேப்பர் தொழிற்சாலை அமைத்திருந்தால் அவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்திருக்கும் என்பது இந்த மக்களின் கோரிக்கை. அது நடந்திருந்தால் பேப்பர் தொழில் செய்பவர்களின் நலனும் முன்னேறி இருக்கும். அ.தி.மு.க. அரசு இந்தப் பகுதியை சுத்தமாக புறக்கணித்துள்ளது.

மகளிர் சுய உதவி குழு என்பது மகளிருக்காக தொடங்கப்பட்டது. தர்மபுரி மாவட்டத்தில் கலைஞர் அவர்கள் தான் முதன் முதல் இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்தார்கள்.

பெண்கள், தாய்மார்கள், சகோதரிகள் யாருடைய தயவையையும் எதிர்பார்க்காமல் ஒரு தன்னம்பிக்கையோடு வாழ வேண்டும். தலைநிமிர்ந்து வாழ வேண்டும். சுயமரியாதை உணர்வோடு வாழ வேண்டும் என்பதற்காக கலைஞர் அவர்கள் அந்த திட்டத்தை அறிவித்து அதை சிறப்பாக நிறைவேற்றி கொடுத்தார்கள் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும்.

அந்த திட்டத்தின் போது நான் துணை முதலமைச்சராகவும், உள்ளாட்சித்துறை பொறுப்பையும் நான் ஏற்றுக் கொண்டு இருந்தேன். என்னிடத்தில் தான் இந்த பொறுப்பை ஒப்படைக்கப்பட்டிருந்தது. அப்படி ஒப்படைக்கப்பட்டிருந்த நேரத்தில், நான் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் செல்லும்பொழுது நிச்சயமாக சுய உதவி குழுக்களுக்கென்று ஒரு நிகழ்ச்சியை ஏற்படுத்துவதுண்டு. அரசு சார்பில் ஏற்பாடு செய்து அவர்களுக்கு சுழல்நிதி, வங்கி கடன், மானிய தொகை இது எல்லாம் கொடுத்துக்கொண்டு தான் வருவேன்.

சுய உதவிக் குழுக்களை பொருத்தவரைக்கும் எந்த குறைபாடும் இருக்கக் கூடாது என்ற காரணத்தினால் வரிசையாக உட்கார வைத்து அவர்களுக்குரிய கவரில் நம்பரை போட்டு, ஏனென்றால் பெயரை சொல்லி அழைத்தால் சிலசமயம் தவறிவிடும். நம்பர் படி வந்தார்கள் என்றால் சரியாக இருக்கும் வரிசை வரிசையாக ஒவ்வொரு நபராக கூப்பிடுவார்கள். எல்லாரும் வாங்கி செல்வார்கள். 4 மணி நேரம், 5 மணி நேரம் ஆகும். அந்த மேடையில் நின்று கொண்டு நான் கொடுத்திருக்கிறேன். ஒவ்வொரு மாவட்டத்தில் சென்று கொடுத்திருக்கிறேன். பலமுறை கொடுத்திருக்கிறேன்.

நான்கு மணி நேரமாக நின்று கொண்டே கொடுப்பேன். இது எனக்கு ஒரு பெருமை. இது தற்பெருமைக்காக சொல்கிறேன் என்று நினைக்காதீர்கள்.

சில தாய்மார்கள் மேடைக்கு வந்து என்னிடத்தில் கேட்பார்கள். நாங்க எல்லாம் உட்கார்ந்து இருக்கிறோம். நீங்கள் கூப்பிட போதுதான் மேடைக்கு வந்து உங்களிடம் வாங்கி செல்கிறோம். ஆனால் நீங்கள் ஒன்பது மணிக்கு வந்து நின்று கொண்டிருக்கிறாய் 12 மணி ஆகிறது இன்னும் நின்றுகொண்டே கொடுத்துக் கொண்டிருக்கிறீர்களே உங்களுக்கு கால் வலிக்க வில்லையா? என்று கேட்பார்கள். அப்பொழுது அந்த தாய்மார்களை பார்த்து நான் சொல்வேன், எனக்கு கால் வலிக்க வில்லை. ஏன் என்றால் உங்கள் முகத்தில் இதை உங்களிடம் கொடுக்கும்போது மகிழ்ச்சியை பார்க்கிறேன். அந்த மகிழ்ச்சியை பார்க்கும் பொழுது என்னுடைய கால் வழி எல்லாம் தானாகப் பறந்து போய்விட்டது.

இதை எதற்காக சொல்கிறேன் என்றால் இந்தத் திட்டத்தை கலைஞர் அவர்கள் பெண்களுடைய முன்னேற்றத்திற்காக தொடங்கி வைத்தார்கள். அது சிறப்பாக இருந்தது.

இன்றைக்கு பார்த்தீர்களென்றால், மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. வங்கிக்கு கூட செல்ல முடியவில்லை. கலைஞர் ஆட்சிக்காலத்தில் வங்கிக்குச் செல்லும் பொழுது குளிர்பானங்கள் எல்லாம் கொடுத்து உபசரித்து வங்கிக் கடனை கொடுத்தார்கள். ஆனால் இப்பொழுது அலட்சியப்படுத்துகிறார்கள். எங்கேயும் செல்ல முடியவில்லை. இப்படி ஒரு நிலை.

அப்படி ஒரு ஆட்சி தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. எனவே இப்படிப்பட்ட நிலையில் இருக்கக்கூடிய அந்த ஆட்சியை ஒரு முடிவு கட்டுவதற்காக தான் இப்பொழுது நாம் எல்லாம் ஒன்று திரண்டு இருக்கிறோம்.

ஒரு நல்ல வாய்ப்பு, அதுதான் வரக்கூடிய தேர்தல். அந்த தேர்தலில் நீங்கள் எல்லோரும் ஒரு சிறப்பான முடிவை எடுத்து ஒரு மிகப்பெரிய மாற்றத்தை தமிழ்நாட்டில் ஏற்படுத்தித் தருவீர்கள் என்ற நம்பிக்கை என்னிடம் உள்ளது. ஆகவே இந்த அ.தி.மு.கவை நிராகரிப்போம் என்று அந்த கருத்தை எடுத்து வைத்து நாம் இந்த கூட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம்.

அ.தி.மு.கவை நிராகரிப்போம் என்று சொன்னால் தி.மு.க. ஆட்சிக்கு கொண்டு வருவதுதான் என்பது உங்களுக்குத் தெரியும். அ.தி.மு.கவை நிராகரிப்பதற்கு என்ன காரணம் உள்ளது? என்பதை உங்களுக்கு சொல்லப் போகிறேன்.

விவசாயிகளை வஞ்சித்த அ.தி.மு.க.வை நிராகரிப்போம்… வேலையில்லாமல் திண்டாடவிட்ட அ.தி.மு.க.வை நிராகரிப்போம்… சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்க செய்த அ.தி.மு.க.வை நிராகரிப்போம்… கஜானாவை சுரண்டிய அ.தி.மு.க.வை நிராகரிப்போம்… கல்வியையும் சுகாதாரத்தையும் தரமிழக்க செய்த அ.தி.மு.க.வை நிராகரிப்போம்… பெண்களின் உரிமைகளை பறித்த அ.தி.மு.க.வை நிராகரிப்போம்… சமூகநீதியை சிதைத்த அ.தி.மு.க.வை நிராகரிப்போம்… தமிழர்களின் பெருமையை சீரழித்த அ.தி.மு.க.வை நிராகரிப்போம். ஆட்சி செய்ய தகுதியற்ற அ.தி.மு.க.வை நிராகரிப்போம்… தீர்மானத்தை நிறைவேற்றி தரவேண்டும்… தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்படுகிறது”

இவ்வாறு உரையாற்றினார்.

banner

Related Stories

Related Stories