மு.க.ஸ்டாலின்

"பழனிசாமிக்கு இரட்டை நாக்கு அல்ல 20 நாக்குகள்" - அதிமுகவின் பச்சோந்தித்தனங்களை பட்டியலிட்ட மு.க.ஸ்டாலின்!

“தமிழினத்தை, மீண்டும் கல்வியில்லாத, வேலைவாய்ப்பில்லாத சமூகமாக மாற்றுவதற்கான சதியை முறியடிப்பதற்கான ஜனநாயகப் போர்தான் வரும் சட்டமன்றத் தேர்தல்” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் சூளுரைத்துள்ளார்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

“கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் உறுதியேற்றிருப்பது போல், அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெற்று, அதை தலைவர் கலைஞரின் நினைவிடத்தில் காணிக்கையாக்குவோம்” என வேலூர் ‘தமிழகம் மீட்போம்’ கூட்டத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் சூளுரைத்துள்ளார்.

இன்று (07-11-2020) திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், வேலூர் மாவட்டக் கழகங்களின் சார்பில் நடைபெற்ற 'தமிழகம் மீட்போம்' - 2021 சட்டமன்றத் தேர்தல் சிறப்புப் பொதுக் கூட்டத்தில் காணொலி வாயிலாகத் தலைமையேற்றுச் சிறப்புரையாற்றினார்.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:

இந்தியாவின் முதலாவது சுதந்திரப் போராட்டம் 1857-இல் நடந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் சொல்வார்கள். அதற்கு 50 ஆண்டுகளுக்கு முன்பே சுதந்திரத்தின் அனலும் கனலும் தெறித்த ஊர் தான் இந்த வேலூர். 1806-ஆம் ஆண்டு ஜூலை 10-ஆம் நாள் வேலூர் கோட்டையில் நடத்திய புரட்சியின் தொடக்கம் தான் இந்தியர்கள் அடிமைகளாக வாழத் தயாராக இல்லை என்பதை பிரிட்டிஷ் ஆட்சிக்கு உணர்த்திய கிளர்ச்சி.

அத்தகைய எழுச்சிக்குரிய கூட்டமாக இதனை ஏற்பாடு செய்திருக்கக் கூடிய வேலூர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் ஆர்.காந்தி, மத்திய மாவட்டக் கழகச் செயலாளர் ஏ.பி.நந்தகுமார், மேற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளர் டி.தேவராஜி ஆகிய மூவரையும் பாராட்டுகிறேன்.

திராவிட முன்னேற்றக் கழகம் என்ற உலைக் களத்தில் எல்லா வாட்களும் கூர்மையானவை என்பதைப் போல காந்தி ஆனாலும், நந்தகுமார் ஆனாலும், தேவராஜி ஆனாலும் போட்டிப் போட்டுக் கழகம் வளர்க்கும் செயல்வீரர்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாணி இருந்தாலும், நோக்கம் என்பது கழக வெற்றி என்பதில் உறுதியாக நின்று செயல்படக் கூடியவர்கள் அவர்கள் மூவரும். அவர்களுக்கும், அவர்களுக்குத் துணை நின்று செயல்படும் கழக நிர்வாகிகள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தக் கூட்டத்தில் கழகப் பொதுச்செயலாளர் அண்ணன் துரைமுருகன் அவர்கள் கலந்துகொண்டு முன்னிலைப் பொறுப்பேற்று சிறப்பித்தமைக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும், இனமானப் பேராசிரியர் அவர்களும் அடுத்தடுத்து நம்மை விட்டுப் பிரிந்த நிலையில், கழகத்தை கொண்டு செலுத்தும் பெரும் கடமை எனது தோளில் முழுமையாக விழுந்தது.

அந்த நேரத்தில் எனக்கு வழிகாட்டியாக, ஆலோசகராக, வரலாற்று ஆசிரியராக, நெறிமுறைகளை எடுத்துச் சொல்பவராக, கடந்த கால நிகழ்வுகளை நினைவூட்டுபவராக இருக்கிறவர் அண்ணன் துரைமுருகன் அவர்கள்.

இன்னும் சொன்னால், எனது வளர்ச்சியில் உண்மையான அக்கறை கொண்டவராக, என் மீது மிக அதிக அன்பும் பாசம் கொண்டவராக இருக்கும் அண்ணன் துரைமுருகன் அவர்கள், நான் தலைவர் பொறுப்புக்கு வந்த நேரத்தில் கழகத்தின் பொதுச்செயலாளராக அவர் என் அருகில் இருப்பது என்னுடைய பெரும்பேறு என்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

என்னைச் சிறுவயது இளைஞனாக பார்த்தவன் என்று அவர் அடிக்கடி சொல்வார். உண்மைதான். அவர் என்னை இளைஞராக பார்த்தவர், இன்று தலைவராகப் பார்க்கிறார். ஆனால் அண்ணன் துரைமுருகன் அவர்களே, நான் உங்களை முத்தமிழறிஞர் கலைஞரின் இடத்தில், இனமானப் பேராசிரியர் இடத்தில் வைத்துப் பார்க்கிறேன். தலைவர் என்றால் தனிப்பட்ட ஸ்டாலின் அல்ல! தலைவர் கலைஞர் அவர்கள் சொல்வதைப் போல தலைமைத் தொண்டன். அவ்வளவுதான்!

அண்ணன் துரைமுருகன் அவர்கள் என்னைத் தலைவர் என்று அழைக்கும் போது, உள்ளபடியே நான் உணர்ச்சி மயமாகிறேன். அத்தகைய அண்ணன் துரைமுருகன் அவர்களுக்கு நான் எனது நன்றி கலந்த வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோல், நம்முடைய ஜெகத்ரட்சகன் அவர்கள். நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாடல்களைத் தலைகீழாகப் பாடக்கூடிய ஆற்றலைப் பெற்றவர். அவரை தலைவர் கலைஞர் அவர்கள் அழைக்கிறபோது, ‘ஜெகத்ரட்சகன்’ என்று அழைத்துப் பார்த்ததே இல்லை. “ஆழ்வார்… ஆழ்வார்…” என்றுதான் அன்போடு அழைப்பார். இப்போது நான் அவரை ‘திராவிட ஆழ்வார்’ என்று அழைக்கிறேன்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாம் மாபெரும் வெற்றியைப் பெற்றோம். வேலூருக்கு மட்டும் தனியாக தேர்தல் நடந்தது. வேலூரிலும் வென்றால் தான் நமது வெற்றி முழுமை அடையும் என்று நான் சொன்னேன். அதேபோல் வேலூரிலும் கதிர் ஆனந்தின் வெற்றியை உறுதி செய்து கொடுத்த கழகத் தொண்டர்களைப் பாராட்டுகிறேன்.

அந்த வெற்றியை நம்மிடம் இருந்து பறிக்க மத்திய - மாநில ஆளும்கட்சிகள் எவ்வளவோ துடித்தது. ஆனால் இறுதியில் தி.மு.க.வே வெற்றியைப் பெற்றது. அத்தகைய முழுமையான வெற்றியை வருகின்ற சட்டமன்றத் தேர்தல் களத்திலும் முழுமையான வெற்றியை நாம் பெற்றாக வேண்டும்.

ஒரு நிமிடம் கூட ஆட்சியில் நீடிக்க அருகதை இல்லாத அரசு தான் எடப்பாடி பழனிசாமி அரசு. பழனிசாமி முதலமைச்சராக இருக்க வேண்டும், அவருக்கு அந்தத் தகுதி இருக்கிறது என்று நினைத்து நாட்டு மக்கள் அவருக்கு வாக்களிக்கவில்லை.

ஜெயலலிதா மரணம் அடைந்ததால் - சசிகலா சிறைக்குப் போனதால் - பன்னீர்செல்வம் தனியாகப் போனதால் - முதலமைச்சர் ஆனவர் தான் எடப்பாடி பழனிசாமி. ஏறி வந்த ஏணியை எட்டி மிதித்துத் தள்ளுவதைப் போல சசிகலாவையே தூக்கி எறிந்த பழனிச்சாமிக்கு, தமிழ்நாட்டு மக்கள் மீது பற்றோ, பாசமோ இருக்கும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?

காபி கப்பை தூக்கிப் போடுவதைப் போல மக்களைத் தூக்கி எறியக்கூடியவர் தான் எடப்பாடி பழனிசாமி. அதனை அவரது ஒவ்வொரு நடவடிக்கைகள் மூலமாகவும் உணரலாம்!

தமிழ்நாட்டில் எந்தத் தரப்பு மக்களாவது மகிழ்ச்சியாக இருக்கிறார்களா? இல்லை! தமிழ்நாட்டின் எந்த உரிமைக்காவது பழனிசாமி குரல் கொடுத்துள்ளாரா? கிடையாது. தமிழ்நாட்டுக்கு எந்தச் சலுகையாவது வாங்கித் தந்தாரா? அதுவும் இல்லை. தமிழகத்துக்கு எந்த புதிய திட்டமாவது கொண்டு வந்தாரா? கிடையாது. தமிழக ஆட்சி அதிகாரத்தை வைத்து தானும் செய்யவில்லை. மத்தியில் உள்ள ஆட்சியின் துணையை வைத்து அவர்களையும் செய்ய வைக்கவில்லை. இதைத் தான் பார்க்கிறோம்.

ஆனால் மத்திய அரசாங்கம் தமிழகத்துக்குச் செய்த துரோகத்தை என்னால் வரிசையாகப் பட்டியலிட முடியும். இவை அனைத்தையும் கை கட்டி, வாய் பொத்தி வேடிக்கை பார்க்கும் ஆட்சி தான் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி. அதனால் தான் இந்த ஆட்சி ஒரு நிமிடம் கூட கோட்டையில் இருக்கக் கூடாத ஆட்சி என்று சொன்னேன்.

தமிழுக்கும் தமிழர்களுக்கும் தமிழ்நாட்டுக்கும் துரோகம் செய்துவிட்டு, தமிழ்நாட்டை ஆள நினைப்பதைப் போல துரோகச் சிந்தனை வேறு எதுவும் இருக்க முடியாது.

தமிழர்கள் தங்கள் எதிரியைக் கூட மன்னிப்பார்கள். ஆனால் துரோகிகளை மன்னிக்க மாட்டார்கள். அத்தகைய துரோகக் கூட்டத்தின் கையில் கோட்டை சிக்கி இருக்கிறது.

பா.ஜ.க. அரசு எதைச் செய்தாலும் ஆதரிக்க வேண்டும் என்பது மட்டும் தான் அ.தி.மு.க.வின் கொள்கையா?

சிறுபான்மைச் சமூகத்தினருக்கு செய்துள்ள துரோகத்தை மட்டும் சொல்கிறேன். காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் தீர்மானமா? அ.தி.மு.க. ஆதரிக்கிறது. குடியுரிமைச் சட்டமா? அ.தி.மு.க. ஆதரிக்கிறது. முத்தலாக் சட்டமா? அ.தி.மு.க. ஆதரிக்கிறது. இதை விட அண்ணாவுக்கு செய்யும் துரோகம் இருக்க முடியுமா? சிறுபான்மை சமூகத்தினருக்கு இதை விட வேறு துரோகம் செய்ய முடியுமா?

''காஷ்மீர்க்கான சிறப்புரிமையை ரத்து செய்வதை எதற்காக ஆதரித்தீர்கள்?'' என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைக் கேட்கிறார்கள். ‘இதுதான் அம்மையார் ஜெயலலிதாவின் கொள்கை, அவரது கனவு இது' என்று சொல்லி இருக்கிறார் பழனிசாமி.

ஜெயலலிதாவின் எல்லாக் கனவுகளையும் நிறைவேற்றி விட்டீர்களா? நிறைவேற்றத் தயாரா?

1999-ஆம் ஆண்டு சென்னை கடற்கரையில் நடந்த கூட்டத்தில் பேசிய அம்மையார் ஜெயலலிதா அவர்கள், 'என் வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு பாரதீய ஜனதாவுடன் கூட்டணி வைத்தது தான். அதற்காக பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். இனி பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கவே மாட்டேன்' என்று சொன்னார். இது பழனிசாமிக்குத் தெரியுமா?

நாடாளுமன்றத்தில் முத்தலாக் தடை மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது. இதனை ஆதரித்து நாடாளுமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன், தேனி நாடாளுமன்ற உறுப்பினர் பேசி இருக்கிறார். ஆனால் மாநிலங்களவையில் அ.தி.மு.க. உறுப்பினர் நவநீதகிருஷ்ணன் எதிர்த்து பேசி இருக்கிறார். ஒரே நேரத்தில் மாநிலங்களவையில் ஒரு நிலைப்பாட்டையும், மக்களவையில் வேறொரு நிலைப்பாட்டையும் அ.தி.மு.க. எடுத்துள்ளது. இதுதான் அ.தி.மு.க.வின் கொள்கையா?

மத்திய அரசு கொண்டுவரத் திட்டமிட்டிருக்கும் குடியுரிமைச் சட்டமானது இசுலாமியர் உள்ளிட்ட சிறுபான்மையினரையும், ஈழத்தமிழர்களையும் மட்டுமல்ல இங்குள்ள தமிழர்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தப்போகும் சட்டம் ஆகும். அதனால் தான் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்த்தோம். மாபெரும் போராட்டங்களை நடத்தினோம். மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தினோம். கோடிக்கணக்கான கையெழுத்துகளுடன் குடியரசுத் தலைவரையே சந்தித்தோம்.

அந்தக் குடியுரிமைச் சட்டத்தையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆதரித்தார். அந்தச் சட்டத்தால் யாருமே பாதிக்கப்படவில்லையே என்று ஏதோ தீர்க்கதரிசி போல கேட்டார் முதலமைச்சர். அந்தச் சட்டம் அமலுக்கு வந்து கணக்கெடுப்பு எடுக்கப்பட்டால் பலரும் குடியுரிமை இழப்பார்கள். இந்த நடைமுறை கூடத் தெரியாமல் முதலமைச்சர் அப்படி சொன்னார்.

இப்படித்தான் கொரோனாவால் யாரும் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று சொன்னார் முதலமைச்சர். ஆனால் தமிழ்நாட்டில் ஏழு லட்சம் பேர் பாதிக்கப்பட்டார்கள். அதைப் போலத் தான் குடியுரிமை சட்டமும் லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை பறித்திருக்கும். ஆனால், அதனை எடப்பாடி பழனிசாமி எதிர்க்கவில்லை. இப்படி தொடந்து மக்கள் விரோதியாக செயல்பட்டு வருபவர் தான் எடப்பாடி பழனிசாமி.

“பேச நா இரண்டுடையாய் போற்றி போற்றி” என்று பேரறிஞர் அண்ணா எழுதினார்கள். அதைப் போல இரண்டு நாக்குகள் மட்டுமல்ல; இருபது நாக்குகளை வைத்துள்ளது அ.தி.மு.க.

மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு என்பார்கள். ஆனால் புதிய கல்விக் கொள்கையை ஆதரிப்பார்கள்! நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் போடுவார்கள். ஆனால் மத்திய அரசு அந்தச் சட்டத்துக்கு அனுமதி தர மறுத்தால் எதிர்த்து கேள்வி கேட்க மாட்டார்கள். 7.5 சதவிகித மசோதாவை நிறைவேற்றுவார்கள். ஆனால் ஆளுநரை நாங்கள் வற்புறுத்த மாட்டோம் என்பார்கள்.

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேர் விடுதலைக்கான தீர்மானம் போடுவார்கள். ஆளுநர் அதற்கு கையெழுத்து போடாமல் ஆண்டுக்கணக்கில் வைத்திருந்தாலும் வாயைத் திறந்து கேட்க மாட்டார்கள். அண்ணா பல்கலைக்கழகத்தை தமிழக அரசிடம் இருந்து பறித்துச் செல்ல அனுமதிப்பார்கள். ஆனால், அப்படி அனுமதிக்கவில்லை என்று மழுப்புவார்கள்.

இந்த ஆண்டே மருத்துவக் கல்வியில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு தேவை என்று வழக்கு போடுவார்கள். ஆனால் மத்திய அரசின் ஆலோசனைக் கூட்டத்தின் அதனைச் சொல்ல மாட்டார்கள்.

காவிரி ஆணையத்தின் கோரிக்கை வைப்பார்கள். அந்த ஆணையத்தின் அதிகாரம் பறிக்கப்பட்டால் வேடிக்கை பார்ப்பார்கள். இப்படி எடப்பாடி பழனிசாமிக்கு இரட்டை நாக்கு அல்ல, இருபது நாக்குகள்.

இவை அனைத்தும் தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்வதற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. சமூக நல்லிணக்கத்தையும் சட்டம் ஒழுங்கையும் சீர்குலைக்கும் நோக்கத்துடன் மதவாத சக்திகளால் நடத்தப்படும் ஊர்வலத்துக்கு அனுமதி இல்லை என்று உயர்நீதிமன்றத்தில் மாவீரர்களைப் போலக் கர்ஜித்த அ.தி.மு.க. அரசு - அடுத்த நாளே மண்டியிட்டு பச்சைக் கம்பளம் விரித்ததன் மர்மம் என்ன? அனுமதி இல்லை - உண்டு என இரண்டு வேஷத்தையும் ஒரே நேரத்தில் போட்டது பச்சோந்தித் தனம் அல்லவா?

எடுபிடி பழனிசாமி, தமிழகத்தை முழுக்க அடமானம் வைத்துவிட்டார். அப்படி அடமானம் வைக்கப்பட்ட தமிழகம், மீட்கப்பட வேண்டும்!

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், தமிழகத்தின் ஒவ்வொரு தரப்பினருக்கும் பார்த்துப் பார்த்து சலுகைகளைச் செய்தார். சிறுபான்மை இனத்துக்கு மட்டும் தி.மு.க. ஆட்சியில் செய்து தரப்பட்ட திட்டங்கள், சலுகைகள், சாதனைகளைச் சொல்கிறேன்.

* 1989-ஆம் ஆண்டு சிறுபான்மையினர் நல ஆணையத்தை அமைத்தவர் முதலமைச்சர் கலைஞர்!

* 1990-ஆம் ஆண்டு அப்துல் ஜாபர் தலைமையில் சிறுபான்மையினர் நலக்குழுவை அமைத்தவர் முதலமைச்சர் கலைஞர்!

* 1999-ஆம் ஆண்டு தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் அமைத்தவர் முதலமைச்சர் கலைஞர்!

* 2000-ஆம் ஆண்டில் உருது அகாடமி தொடங்கியவர் முதலமைச்சர் கலைஞர்!

* தமிழ்நாடு வக்பு வாரிய நிர்வாகச் செலவுக்காக தமிழக அரசின் சார்பில் நிதி வழங்கியவர் முதலமைச்சர் கலைஞர்!

* ஹஜ் மானியத்தை அதிகப்படுத்தியவர் முதலமைச்சர் கலைஞர்!

* 2002-ஆம் ஆண்டு சமூக சீர்திருத்தத் துறையை தோற்றுவித்தவர் முதலமைச்சர் கலைஞர்!

* நபிகள் நாயகம் பிறந்தநாளை அரசு விடுமுறையாக அறிவித்தவர் முதலமைச்சர் கலைஞர்!

* சிறுபான்மையின மாணவியர் விமானப் பணிப்பெண் பயிற்சி பெற இலவச வசதிகளைச் செய்து கொடுத்தவர் முதலமைச்சர் கலைஞர்!

* பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இசுலாமியர்க்கு 3.5 சதவிகித உள் ஒதுக்கீட்டை 2007-ஆம் ஆண்டு வழங்கியவர் முதலமைச்சர் கலைஞர்!

* 2007-ஆம் ஆண்டு சிறுபான்மையினர் நல இயக்ககம் அமைத்தவர் முதலமைச்சர் கலைஞர்!

* 2010-ஆம் ஆண்டு தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையச் சட்டம் கொண்டுவந்தவர் முதலமைச்சர் கலைஞர்!

- இவை சிறுபான்மை இன மக்களுக்காகச் செய்யப்பட்டவை மட்டும் தான். இப்படி ஒவ்வொரு பிரிவு மக்களுக்கும் திட்டங்களைக் கொண்டு வந்தவர் முதலமைச்சர் கலைஞர்.

ஆனால், அ.தி.மு.க. அரசு, ஒவ்வொரு பிரிவு மக்களுக்கும் இதுபோல் அடுக்கடுக்கான துரோகத்தைச் செய்து வருகிறது. அதைத்தான், “பத்து ஆண்டுகளில் நாங்கள் செய்ததை நெஞ்சு நிமிர்த்தி இன்று சொல்கிறோம். இப்போது இருக்கும் அ.தி.மு.க. அரசு, கடந்த பத்து ஆண்டுகளில் எதையாவது செய்துள்ளார்களா? அதை வரிசைப்படுத்திச் சொல்லும் ஆற்றல், தெம்பு, அருகதை, யோக்கியதை இருக்கிறதா?” என்று நம்முடைய பொதுச்செயலாளர் அவர்கள் இங்குப் பேசும்போது சொன்னார்கள். அதனால் தான் துரோகக் கூட்டத்தை வீழ்த்த தமிழ்நாட்டு மக்கள் துடிக்கிறார்கள்.

எந்தத் திட்டங்களும் இல்லை. அவர்கள் சாதனைகளாகச் சொல்லிக் கொள்வது எதுவும் சாதனை அல்ல. மூன்று லட்சம் கோடி ரூபாய்க்கு முதலீட்டை ஈர்த்துவிட்டதாக பழனிசாமி சொல்கிறார். அது பற்றி வெள்ளை அறிக்கை கொடுங்கள் என்று கேட்டேன். எந்த நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளது, எத்தனை லட்சம் பேருக்கு வேலை கொடுத்துள்ளீர்கள் என்று கேட்டேன். அதைக்கூடக் கொடுக்கவில்லை. அவர்களால் எந்தச் சாதனையைக் காட்ட முடியும்?

இவர்களது சாதனையை ஒவ்வொரு மாவட்ட மக்களும், ஒவ்வொரு தொகுதி மக்களும் பட்டியல் போட்டாலே, இவர்களது வண்டவாளம் வெளிச்சத்துக்கு வந்துவிடும்! உங்கள் மாவட்டத்தையே உதாரணமாகக் காட்டுகிறேன்!

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தொடங்கப்பட்ட பணிகளையாவது ஒழுங்காக முடித்தார்களா என்றால் அதுவும் இல்லை.

* திருப்பத்தூர் பகுதியில் கழக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பாதாளச் சாக்கடை திட்டம் இதுநாள்வரை முடிக்கப்படவில்லை.

* திருப்பத்தூர் நகர் பகுதியில் பைபாஸ் சாலை அமைக்க கழக ஆட்சியில் நிலம் கையகப்படுத்தும் வேலை தொடங்கப்பட்டது. அதை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டார்கள்.

* கடந்த தி.மு.க. ஆட்சியில் சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு ரோப் கார் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடத்தப்பட்டது. 9 ஆண்டு ஆகியும் இன்னும் பணிகள் முடியாமல் உள்ளது.

* அரக்கோணத்தில் தி.மு.க. ஆட்சி தொழில் பூங்கா அமைக்கப்பட்டது. அதனை இருட்டடிப்பு செய்து அங்கு எந்த ஒரு புதிய தொழிற்சாலையும் தொடங்க படாத நிலை உள்ளது.

* அரக்கோணம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நெமிலி மேலபணம் புதூர் பகுதியில் தி.மு.க. ஆட்சி காலத்தில் பெரியார் நினைவு சமத்துவபுரம் கட்டப்பட்டது. திறப்பு விழாவிற்கு முன்பு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் அடுத்து வந்த அ.தி.மு.க. ஆட்சி அங்கு மின்சாரம் கொடுக்காமல் சாலை வசதி உள்பட எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தராமல் அப்பகுதி மக்களை வஞ்சித்து வருகிறது

* அரக்கோணத்தில் கடந்த தி.மு.க. ஆட்சி காலத்தில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்பட்டது. ஒன்பது ஆண்டுகள் ஆகியும் பணிகள் முடிவடையாத நிலையில் ஆமை வேகத்தில் பணி நடைபெற்று வருகிறது.

* காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் திருப்பத்தூரில் நகரத்தில் உள்ள பல பகுதிகளில் இன்னும் கிடைக்கவில்லை!

* வாணியம்பாடி நியூ டவுன் பகுதியில் ரயில்வே மேம்பாலம் கொண்டுவரப்படும் என்று அ.தி.மு.க. ஆட்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் வாக்குறுதி கொடுத்தார். எட்டு ஆண்டுகள் ஆகியும் இன்னும் அந்த பகுதிக்கு ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கப்படவில்லை இரண்டு முறை பூமி பூஜை மட்டும் நடைபெற்றது. இதுநாள் வரை பணிகள் தொடங்கப்படவில்லை

* வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையில் கழக ஆட்சிக்காலத்தில் புதிதாக பேருந்து நிலையம் கட்டப்பட்டது. மாவட்ட ஆட்சித்தலைவர் மூலம் திறப்பு விழாவும் நடைபெற்றது. தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பேருந்து நிலையம் என்ற ஒரே காரணத்திற்காக இதுநாள் வரை அந்தப் பேருந்து நிலையத்தை பயன்படுத்தாமல் அ.தி.மு.க. அரசு காலம் கடத்தி வருகிறது.

* ஆம்பூர் ரெட்டி தோப்பு பகுதியில் உள்ள ரயில்வே மேம்பாலம் அருகில் மழைக்காலங்களில் மழை வெள்ளம் குளம் போல் தேங்கி காட்சியளிக்கிறது. இந்த இடத்தில் ரயில்வே மேம்பாலம் கட்டப்படும் என்று இன்றைய ஆட்சியாளர்கள் சொன்னார்கள். செய்தார்களா? என்றால் இல்லை!

* ஜோலார்பேட்டை ரயில்வே நிலையம் அருகில் பேருந்து நிறுத்தம் வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் பலமுறை அமைச்சர் வீரமணியிடம் கோரிக்கை வைத்தனர். இதுநாள் வரை இதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

* ஜோலார்பேட்டை பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை 30 படுக்கைகள் கொண்ட நகர்புற சுகாதார நிலையம் போல் மாற்றப்படும் என்று அமைச்சர் தெரிவித்து இதுநாள்வரை அந்தப் பணிகள் எதுவும் நடைபெறவில்லை.

* வேலூர் - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ரயில்வே மேம்பாலம் கட்டப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் 110 விதியின் கீழ் அறிவித்தார் அறிவித்த அறிவிப்பு அறிவிப்பாகவே மட்டும் உள்ளது.

* வேலூர் சத்துவாச்சாரி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் தரைப்பாலம், சுரங்க நடைபாதை அமைக்க இரண்டு முறை பூமி பூஜை நடத்தி இருக்கிறார்கள்.

வேலூர் போக்குவரத்து நெரிசலை போக்கும் வகையில் வேலூரில் சுற்று சாலை அமைக்கப்படும் என்று சொன்னார்கள். செய்தார்களா? இதுதான் அ.தி.மு.க. ஆட்சியின் இலட்சணம்!

வேலூர் மாவட்டத்தை மட்டும் இங்கே சுட்டிக் காட்டினேன். இப்படித்தான் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களும் இருக்கிறது.

தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை நாசம் செய்துவிட்டார்கள். தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்டவை என்பதற்காகவே கிடப்பில் போட்டுவிட்டார்கள். புதிய திட்டங்கள் எதையும் கொண்டுவரவில்லை. அவர்கள் கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவும் இல்லை. இதுதான் கடந்த பத்தாண்டு கால அ.தி.மு.க. ஆட்சி.

மொத்தமாகச் சொல்ல வேண்டுமானால், எந்த வழியில் பணம் வருமோ அந்த விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்தி கொள்ளைகளை அடிக்கிறார்கள். இந்தக் கொள்ளைக் கூட்டத்தை கோட்டையை விட்டு விரட்ட வேண்டாமா? இந்தப் பத்தாண்டு காலத்தில் தமிழகம் எல்லா வழியிலும் பின் தங்கிவிட்டது. இதனை மீட்டு மீண்டும் நம் பழம்பெருமையை புதுப்பித்தாக வேண்டும்.

''தமிழருடைய கலை, கலாச்சாரம், நாகரிகம், இலக்கியம், வரலாறு இவை எல்லாம் காப்பாற்றப்பட திராவிட முன்னேற்றக் கழகம் இருந்தாக வேண்டும்" என்றார் பேரறிஞர் அண்ணா அவர்கள்.

தமிழர்களின் கலைக்கு ஆபத்து வந்துவிட்டது. கலாச்சாரத்துக்கு ஆபத்து வந்துவிட்டது. தமிழ் மொழிக்கு ஆபத்து ஏற்பட்டுவிட்டது. எல்லாவற்றிகும் இந்தியைத் திணிக்கிறார்கள். இந்தியைத் திணிப்பதன் மூலமாக தமிழைப் புறக்கணிக்கிறார்கள், அழிக்கப்பார்க்கிறார்கள். அனைவருக்கும் கல்வி என்பதை தடுக்கப் பார்க்கிறார்கள். அனைவருக்கும் வேலை என்பதைத் தடுக்கப் பார்க்கிறார்கள். இன்னும் சொன்னால் இந்தியாவின் பன்முகத் தன்மையை சிதைக்கப் பார்க்கிறார்கள்.

பல்வேறு மதங்கள், பல்வேறு இனங்கள், பல்வேறு மொழிகள் கொண்ட இந்தியாவை ஒற்றை மதம், ஒற்றை இனம், ஒற்றை மொழி கொண்ட நாடாக மாற்றப் பார்க்கிறார்கள். இதனை இப்போது தடுத்தாக வேண்டும். இப்போது தடுக்காவிட்டால் எப்போதும் தடுக்க முடியாது.

மீண்டும் கல்வி இல்லாத, வேலை இல்லாத சமூகமாக தமிழினத்தை மாற்றும் சதியை ஒரு கூட்டம் தொடங்கி இருக்கிறது. அந்தச் சதிக்கு தமிழ்நாட்டு அரசு – இந்த அ.தி.மு.க. ஆட்சி தலையாட்டிக் கொண்டு இருக்கிறது. இது தேர்தல் என்ற ஜனநாயகப் போரால் தடுக்கப்பட வேண்டும். அதற்காகவே சட்டமன்றத் தேர்தல் வருகிறது.

இங்கே பேசிய கழக மாவட்டச் செயலாளர்கள், 2021 சட்டமன்றத் தேர்தலில் இந்த மாவட்டத்தின் அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெற்று, ‘வெற்றியை எனது காலடியில் சமர்ப்பிக்கப் போவதாகச்’ சொன்னார்கள். ஒவ்வொரு மாவட்டச் செயலாளரும் தொடர்ந்து இப்படி உறுதி எடுத்துச் சொல்லி வருகிறார்கள். உங்கள் அனைவருக்கும் நான் என்னுடைய அன்பான வேண்டுகோளாக ஒன்றைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். உங்கள் மாவட்டத்தின் தொகுதிகள் அனைத்திலும் வெற்றி பெற்றுக் கொண்டுவந்து, உங்கள் திருக்கரங்களினாலே எனது கைகளிலே வழங்குங்கள். நாம் அனைவரும் இணைந்து, வாழ்நாள் முழுதும் ஓய்வே இல்லாமல் உழைத்த நமது தலைவர் கலைஞர் அவர்கள் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் நினைவிடத்திற்குச் சென்று, அந்த வெற்றியைக் காணிக்கையாகச் செலுத்திக் களிப்புறுவோம்.

வேலூர் கோட்டையில் துப்பாக்கியாலும் வாட்களாலும் புரட்சி நடந்தது. அது ஒரு காலம். இன்று மக்கள் நடத்த வேண்டியது ஜனநாயகப் புரட்சி. 'நமது பாதை வேட்டு முறையல்ல, ஓட்டு முறை' என்றார் பேரறிஞர் அண்ணா. ஓட்டு முறையால், அ.தி.மு.க. ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம். தமிழகம் இழந்த பெருமையை மீட்போம்!

தமிழகத்தில் ஜனநாயக நெறிமுறைகளில் நம்பிக்கையுள்ள ஆட்சியை அமைப்போம்!

மாநில சுயாட்சிக் கொள்கையில் நம்பிக்கையுள்ள கம்பீர ஆட்சியை தி.மு.க. சார்பில் வழங்குவோம்.

நமது வருங்காலத் தலைமுறைக்கு சிறந்த வாழ்வு அமைய இந்தச் சட்டமன்றத் தேர்தல் போரை பயன்படுத்திக் கொள்வோம். தமிழகம் செழிக்க, தமிழகம் மீட்போம்! நன்றி. வணக்கம்.”

இவ்வாறு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

banner

Related Stories

Related Stories