மு.க.ஸ்டாலின்

தூத்துக்குடி மாவட்டத்துக்கு அ.தி.மு.க செய்தது என்ன? - தேர்தல் பரப்புரை கூட்டத்தில் விளாசிய மு.க.ஸ்டாலின்!

"2019ஆம் நாடாளுமன்றத் தேர்தலில் முழுமையான வெற்றியை அளித்தது போல் 2021 சட்டமன்றத் தேர்தலிலும் தமிழக மக்கள் தி.மு.க. கூட்டணிக்கு முழுமையான வெற்றியை அளித்திட வேண்டும்” - தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரை.

தூத்துக்குடி மாவட்டத்துக்கு அ.தி.மு.க செய்தது என்ன? - தேர்தல் பரப்புரை கூட்டத்தில் விளாசிய மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

“மீனவர்கள் - பிற்படுத்தப்பட்டோர் - மிகவும் பிற்படுத்தப்பட்டோர் - பட்டியலின மக்கள் - சிறுபான்மையினர் என அனைவருக்கும் துரோக முதலமைச்சராக பழனிசாமி ஆகிவிட்டார்” என தூத்துக்குடியில் நடைபெற்ற ‘தமிழகம் மீட்போம்’ பரப்புரைக் கூட்டத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

இன்று (5-11-2020) திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், தூத்துக்குடி மாவட்டக் கழகங்களின் சார்பில் நடைபெற்ற 'தமிழகம் மீட்போம்' - 2021 சட்டமன்றத் தேர்தல் சிறப்புப் பொதுக் கூட்டத்தில் காணொலி வாயிலாகத் தலைமையேற்றுச் சிறப்புரையாற்றினார்.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:

தூத்துக்குடியில் தென் மண்டல மாநாட்டைப் போல இந்தக் கூட்டத்தைச் சிறப்போடு நடத்திக் கொண்டிருக்கக் கூடிய கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகிய இருவரையும் பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன். தலைமைக் கழகத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அனிதா ராதாகிருஷ்ணனைப் பற்றி நான் சொல்ல வேண்டியது இல்லை. ஐந்து முறை சட்டமன்றத்துக்கு வென்று வந்தவர். அனைத்துத் தரப்பினரது நம்பிக்கையையும் பெற்றவர் என்பதற்கு இதுவே சான்று. கடந்த உள்ளாட்சித் தேர்தலில் முழு வெற்றியை தனது மாவட்டத்தில் பெற்றுத்தந்த ஆற்றலாளர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்கள்!

தி.மு.க.வின் மாவட்டச் செயலாளர்களில் இருக்கும் பெண் சிங்கம் கீதாஜீவன். அண்ணன் தூத்துக்குடி பெரியசாமியைப் போலவே செயல்பட்டு வருகிறார். அண்ணன் இல்லை என்று கவலை அடைய முடியாத அளவுக்கு அவரது இடத்தை நிரப்பி வருகிறார்!

தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர், அருமைத் தங்கை கனிமொழி அவர்களும் இந்தப் பொதுக்கூட்டத்தின் வெற்றிக்கு அயராது பாடுபட்டுள்ளார். அவருக்கும் என்னுடைய வாழ்த்துகளை - பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். டெல்லியில் நமக்கும், கழகத்துக்கும், கலைஞருக்கும் பேரும் புகழும் கிடைக்கும் வகையில் செயல்பட்டு வரும் அவரது பணிகளை நினைத்து கழகத் தலைவர் என்ற முறையிலும் அண்ணன் என்ற முறையிலும் பூரித்துப் போகிறேன்.

இன்றைய தினம் கழகத்தின் மூத்த முன்னோடிகளுக்கு இங்கே பொற்கிழி வழங்கப்பட்டுள்ளது. பெற்றுக் கொண்ட முன்னோடிகளையும் தியாகிகளையும் பாராட்டுகிறேன். வழங்கிய மாவட்டக் கழகத்தையும் பாராட்டுகிறேன். தொண்டர்களாக இருந்தாலும், செயல்வீரர்களாக இருந்தாலும், அவர்கள் வாழும் காலத்திலேயே மதிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் இந்த பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

1949-ஆம் ஆண்டு கழகத்தை அண்ணா அவர்கள் தொடங்கினார்கள். கழகம் தொடங்கியதில் இருந்து நித்தமும் போராட்டக் களம் தான். அதில் மிக முக்கியமானது 1953-ஆம் ஆண்டு போடப்பட்ட தூத்துக்குடி சதி வழக்கு ஆகும். ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக கே.வி.கே.சாமி, எம்.ரெத்தினம், எம்.எஸ்.சிவசாமி, எஸ்.நடராஜன், ஆர்.எஸ்.தங்கப்பழம் உள்ளிட்ட 68 பேர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தில் இருக்கிற பெரும்பாலான செக்‌ஷனைப் போட்டு உள்ளே தள்ளிவிட்டார்கள்.

15 நாட்களுக்குப் பிறகு பிச்சுமணி, தங்கசாமி, பாளை முத்துராஜா நாடார், செல்லையா நாடார், சுப்பிரமணிய நாடார், ராமலிங்க நாடார், ஞானாயுத நாடார், மாணிக்கம், ஆதிநாராயணன், பொன்னுசாமி, அருணாசாமி, வேலு என 15 பேரை மட்டும் நீதிபதி விடுதலை செய்தார்.

சமூகத்தின் பெயரைக் குறிப்பிடுகிறேன் என்று யாரும் தவறாக நினைக்கக் கூடாது. அந்தக் காலத்தில் ஆவணங்களில் இப்படித்தான் அவர்கள் அழைக்கப்பட்டார்கள்.

ஆறு மாதம் கழித்து 30 பேரை நீதிபதி விடுவித்தார். மற்றவர்கள் மீது 13 செக்‌ஷனில் வழக்குப் பதியப்பட்டு தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டது. அன்றைய தினம் நெல்லை மாவட்ட அடிஷனல் நீதிபதியாக இருந்த ராதாகிருஷ்ணன் இந்த வழக்கை விசாரித்தார். இறுதித் தீர்ப்பில் காசிநாடார், அருணாசல நாடார் ஆகியோருக்கு இரண்டு ஆண்டு சிறைத் தண்டனையும், எஸ்.நடராஜன், கே.ஆதிமுத்து, டி.தங்கசாமி, பொன்னுசாமி, எம்.சீனிவாசன், ஜே.ராஜாமணி ஆகியோருக்கு ஓராண்டு சிறைத்தண்டனையும், தங்கப்பழம், சிவசாமி, வி.எம்.நடராசன், கணபதி ஆகியோருக்கு ஆறுமாத சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டது.

உயர்நீதிமன்றம் வரைக்கும் போய்தான் இவர்கள் தண்டனை குறைக்கப்பட்டது. அறிஞர் அண்ணா அவர்களின் அசராத சட்டப் போராட்டம் தான் தூத்துக்குடித் தோழர்களை விடுவித்தது.

நம்முடைய கழகத்தில் உள்ள அனைத்துத் தொண்டர்களுக்கும் ரத்தத்தை உறைய வைத்த மரணம், கே.வி.கே.சாமியின் படுகொலைச் சம்பவம்.

இன்றைக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வளாகம் ஆனது பெருந்தலைவர் காமராசர் அவர்களின் தாயார் சிவகாமி அவர்களது பெயராலும் - அதனுள் அமைந்துள்ள கட்டடம் கே.வி.கே.சாமி அவர்கள் பெயராலும் அமைந்துள்ளது என்றால் அப்பெயர்களைச் சூட்டியவர் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள்.

தீரர்களின் தியாகத்தைப் போற்றுவதில் கழகம் தவறாது என்பதற்கு உதாரணம் கே வி.கே. சாமி பெயர் வைக்கப்பட்டதும், தியாகத்தைப் போற்றுவதில் கட்சி வேறுபாடுகளைப் பார்க்க மாட்டோம் என்பதற்கு உதாரணம் அன்னை சிவகாமி பெயரைச் சூட்டிய பெருமைக்குரிய செயல்பாடு.

தூத்துக்குடி மாவட்ட மண் என்பது சாதாரண மண் அல்ல. வீரம் விளைந்த மண்!

தூத்துக்குடி மாவட்டத்துக்கு அ.தி.மு.க செய்தது என்ன? - தேர்தல் பரப்புரை கூட்டத்தில் விளாசிய மு.க.ஸ்டாலின்!

நாடு காக்க, நாட்டின் விடுதலைக்காக உயிரையே தியாகம் செய்த வீரபாண்டிய கட்டபொம்மனின் மண்! தனது பேச்சால் எழுத்தால் தியாகத்தால் சுதந்திர எழுச்சியை ஊட்டிய வ.உ.சிதம்பரனாரின் மண்! தனது எழுத்தால், பாட்டால் சுதந்திர உணர்ச்சியைத் தட்டி எழுப்பிய பாரதியாரின் மண்!

தென் தமிழகத்தில் எழுந்த எழுச்சி ஒட்டுமொத்த நாட்டையும் தட்டி எழுப்பக் காரணமாக அமைந்தது. அந்தத் தியாகத்தின் திருவுருவங்களைப் போற்றிய கழகம்தான் நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம்!

* வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு இன்று கோட்டை அமைந்திருக்கிறது என்றால் அதனை அமைத்தவர் முதல்வர் கலைஞர்.

* கட்டபொம்மன் பிறந்தநாளை ஆண்டு தோறும் அரசு விழாவாகக் கொண்டாட உத்தரவிட்டவர் முதல்வர் கலைஞர்.

* அரசுப் பதிவேட்டில் பாஞ்சாலங்குறிச்சி என்ற பெயரைப் பொறித்தவர் முதல்வர் கலைஞர்.

* கட்டபொம்மன் வாரிசுகளுக்கு வழங்கப்பட்டு வந்த பென்ஷன் 1952-ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது. அதனை 1969-ஆம் ஆண்டு திரும்ப வழங்கியவர் முதலமைச்சர் கலைஞர்.

* வ.உ.சி என்றால் -

வ - வழக்கறிஞர்

உ - உரிமைக்காகப் போராடிய, வாதாடிய வழக்கறிஞர்

சி- உரிமைக்காக வாதாடிச் சிறை சென்ற வழக்கறிஞர்

- என்று விளக்கம் அளித்தவர் நம்முடைய தலைவர் கலைஞர்.

* கழக ஆட்சியில் 1968-ஆம் ஆண்டு இரண்டாம் உலகத் தமிழ்மாநாடு நடத்தப்பட்டபோது தலைநகர் சென்னையில் வைக்கப்பட்ட பத்துச் சிலைகளில் ஒன்று வ.உ.சிதம்பரனார் சிலை!

* கோவை சிறையில் இருந்தபோது செக்கு இழுக்க வைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டார் வ.உ.சி. அந்த செக்கை நினைவுச்சின்னமாக ஆக்கியவர் முதலமைச்சர் கலைஞர் அவர்கள்.

* 1972-ஆம் ஆண்டு வ.உ.சி.யின் நூற்றாண்டு விழாவை நாடு போற்றும் அளவில் மிகச்சிறப்பாகக் கொண்டாடியவர் முதல்வர் கலைஞர். அதே ஆண்டு தான் இந்திய நாடும் தனது 25-ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடியது. இரண்டையும் இணைத்து தூத்துக்குடியில் வ.உ.சிதம்பரனாருக்கு சிலை அமைத்தவர் முதலமைச்சர் கலைஞர்.

* எட்டையபுரத்தில் பாரதியார் வீட்டை அரசு சார்பில் விலைக்கு வாங்கி அதனை நினைவுச்சின்னம் ஆக்கியவர் முதல்வர் கலைஞர். 12.5.1973 அன்று அன்றைய அமைச்சர் சி.பா.ஆதித்தனார் தலைமையில் நடந்த விழாவில் திறந்து வைத்தவர் முதலமைச்சர் கலைஞர்.

* பாரதியாரின் நண்பர் பரலி சு.நெல்லையப்பர் குடும்பத்துக்கு அரசு நிதி உதவி வழங்கியவர் முதலமைச்சர் கலைஞர்.

இவற்றை எல்லாம் சொல்வதற்குக் காரணம், இந்திய நாட்டின் விடுதலைக்காக உயிரைக் கொடுத்துப் போராடிய உத்தமர்களுக்கும் உரிய மரியாதையை வழங்கிய ஆட்சிதான் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி. அதற்கு இந்த தூத்துக்குடியே சாட்சி!

தூத்துக்குடி மாவட்டத்துக்கு கழக ஆட்சிக் காலங்களில் பல்வேறு பணிகள் செய்யப்பட்டு இருந்தாலும் சில முக்கியமான திட்டங்களை மட்டும் நினைவூட்டக் கடமைப்பட்டுள்ளேன்!

* தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் கட்டப்பட்டது கழக ஆட்சியில்தான்!

* தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட்டது கழக ஆட்சியில் தான்!

* மீனவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தனியாக மீன்வளத்துறையை உருவாக்கியவர் முதலமைச்சர் கலைஞர்!

* மீனவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தவர் முதலமைச்சர் கலைஞர்!

* மீனவர்களுக்கு வீடு கட்டும் திட்டத்தை 1975-ஆம் ஆண்டு தொடங்கி 5 ஆயிரம் வீடுகளுக்கான அடித்தளம் அமைத்தவர் முதலமைச்சர் கலைஞர்!

* கழக ஆட்சியில்தான் தூத்துக்குடியில் கடல்சார் பயிற்சிப்பள்ளி தொடங்கப்பட்டது. இந்தியாவிலேயே மும்பைக்கு அடுத்தபடியாக தூத்துக்குடியில் தான் கடல்சார் பயிற்சிப்பள்ளி அமைக்கப்பட்டது

* கழக ஆட்சியில் நான் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோதுதான் தூத்துக்குடி, மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டது!

* 33 கோடி ரூபாய் மதிப்பில் தூத்துக்குடி மாநகரில் உள்ள பக்கிள் ஓடையானது தடுப்புச் சுவர்களுடன் கடற்கரையில் இருந்து 3 ஆம் மைல் வரை சீரமைக்கப்பட்டு புதிதாக அமைக்கப்பட்டது.

* ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், பத்திரப்பதிவு அலுவலகம் அமைக்கப்பட்டதும் கழக ஆட்சியில் தான்!

* திரேஸ்புரம் மற்றும் வீரபாண்டியன்பட்டினம் கடற்கரைப் பகுதிகளில் தூண்டில் வளைவுகள் கட்டப்பட்டன.

* மாவட்ட மக்களின் மருத்துவத் தேவையைக் கருத்தில் கொண்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனை 17 கோடி ரூபாய் மதிப்பில் 550 படுக்கைகளுடன் தரம் உயர்த்தப்பட்டது.

* கோவில்பட்டி அரசு மருத்துவமனையை அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தியது தி.மு.க. ஆட்சிதான்.

* சீவலப்பேரி கூட்டுக்குடிநீர்த் திட்டம் மூலம் தூத்துக்குடி மாவட்டத்திற்கு உட்பட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் வசதி செய்து கொடுக்கப்பட்டது.

* ஸ்ரீவைகுண்டத்தில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே இருந்த பாலத்தை உயர்மட்ட பாலமாக மாற்றிக் கொடுத்தது தி.மு.க. ஆட்சிதான்.

- இப்படி தூத்துக்குடி மாவட்டத்துக்கு கழக ஆட்சியில் செய்து தரப்பட்ட பணிகளை நான் சொல்லிக் கொண்டே இருப்பேன். அந்தளவு பணிகள் செய்து காட்டி இருக்கிறோம்.

தூத்துக்குடி மாவட்டத்துக்கு அ.தி.மு.க செய்தது என்ன? - தேர்தல் பரப்புரை கூட்டத்தில் விளாசிய மு.க.ஸ்டாலின்!

தூத்துக்குடி மாவட்டத்துக்கு அ.தி.மு.க. ஆட்சியின் சாதனைகள் என்றால் எதைச் சொல்வது?

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அமைதி வழியில் போராடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 13 பேரைக் கொலை செய்ததைச் சொல்வதா?

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் என்ற தந்தையையும் மகனையும் அடித்தே கொன்ற அநியாயத்தைச் சொல்லவா?

சொத்தன்குடியிருப்பு செல்வன் கொலை வழக்கு என்பது ஆளும்கட்சிப் பிரமுகரும் போலீசும் சேர்ந்து செய்த கொலை என்பது வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. நான் அறிக்கை வெளியிட்ட பிறகு அ.தி.மு.க. பிரமுகர் கைது செய்யப்பட்டார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த அராஜகத்தைச் சொல்வதா? எதைச் சொல்வது?

நச்சு ஆலையாக மாறிவிட்ட ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அமைதி வழியில் போராடினார்கள் மக்கள். கடந்த 2018-ஆம் ஆண்டு மே 22-ஆம் தேதி அன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவரைச் சந்தித்து தங்களது கோரிக்கை மனுவைத் தருவதற்காக ஊர்வலமாக வந்த மக்கள் மீது எடப்பாடி பழனிசாமி அரசு திட்டமிட்டு துப்பாக்கிச் சூடு நடத்தியது.

அன்றைய தினம் மாவட்ட ஆட்சித் தலைவர் தனது அலுவலகத்தில் இருந்து மனுவை வாங்கி இருந்தால் பிரச்சினையே இல்லை. அவரை வேண்டுமென்றே வெளியூருக்குப் போக வைத்துவிட்டு, தூத்துக்குடி மக்களைப் பழிவாங்க வேண்டும் என்பதற்காக துப்பாக்கிச் சூடு நடத்தியது அ.தி.மு.க. அரசாங்கம்!

குடும்பம் குடும்பமாக பிள்ளை குட்டிகளுடன் வந்தவர்களைச் சுட்டுப் பொசுக்கினார்கள். மக்களைச் சுடுவதற்காகவே ஊருக்குள் வர வைத்து சுட்டுக் கொன்றார்கள். கலைந்து ஓடியவர்களைச் சுட்டுள்ளார்கள். வீட்டுக்குச் சென்றுவிட்டவர்களை தேடிப் பிடித்துச் சுட்டுள்ளார்கள். விரட்டி விரட்டிச் சென்று சுட்டுள்ளார்கள். சொந்த நாட்டு மக்கள் மீது இப்படி கொலை வெறித்தாக்குதல் நடத்திய அரசாங்கத்தை மக்கள் அரசாங்கம் என்று சொல்ல முடியுமா?

ஒரு கூலிப்படையைப் போல எடப்பாடி பழனிசாமியின் அரசாங்கம் அன்று செயல்பட்டுள்ளது.

தூத்துக்குடி ரஞ்சித்குமார், லூர்தம்மாள்புரம் கிளாஸ்டன், சிலோன் காலனி கந்தையா, ஒட்டப்பிடாரம் தமிழரசன், மாசிலாமணிபுரம் சண்முகம், தூத்துக்குடி ஸ்னோலின், தூத்துக்குடி அந்தோணி செல்வராஜ், தாமோதரன் நகர் மணிராஜ், தூத்துக்குடி கார்த்திக், திரேஸ்புரம் ஜான்சி, தூத்துக்குடி செல்வசேகர், தாளமுத்து நகர் காளியப்பன், உசிலம்பட்டி ஜெயராமன் - உள்ளிட்ட 13 பேரைக் கொலை செய்த கூட்டத்துக்கு நீங்கள் பாடம் கற்பிக்க வேண்டாமா?

இவர்களைக் கொன்று விட்டார்கள் என்று கேள்விப்பட்டதும் உடனடியாக தூத்துக்குடிக்கு வந்தேன். எனது வாழ்க்கையில் இதுவரை நான் பார்த்திராத கலவர பூமியாக அன்றைய தூத்துக்குடி இருந்தது.

இதற்கு யார் காரணம்? முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிதானே காரணம்?

வந்தாரா முதலமைச்சர் எடப்பாடி? ஏன் வரவில்லை? என்ன பயம்? தூத்துக்குடிக்கு வர முடியாமல் பழனிசாமியை எது தடுத்தது?

ஆனால் என்ன சொன்னார் பழனிசாமி? நான் டி.வி.யைப் பார்த்துத்தான் தெரிந்து கொண்டேன், இப்படி துப்பாக்கிச் சூடு நடந்ததே எனக்குத் தெரியாது என்று முதலமைச்சர் சொன்னார். உள்துறையைக் கையில் வைத்துக் கொண்டு, எனக்கு இது தெரியாது என்று சொல்வதற்கு வெட்கமாக இல்லையா?

அவருக்குத் தெரியும். 13 பேர் கொல்லப்பட்டதும் தெரியாது என்று நாடகம் ஆடுகிறார். இந்தத் துப்பாக்கிச்சூடு முதலமைச்சருக்குத் தெரியாமல் நடந்திருக்காது என்பதற்கு இரண்டு உதாரணங்களைச் சொல்கிறேன்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பந்தமாக விசாரணை நடத்த நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு ஆணையம் அமைக்கப்பட்டது. இன்று வரை அதன் அறிக்கை வெளியாகவில்லை. 30 மாதங்களாக அந்த அறிக்கை ஏன் வெளியே வரவில்லை? உண்மையான குற்றவாளிகள் யார் என்று வெளியில் தெரிந்துவிடும் என்பதற்காக ஆணையம் அப்படியே முடங்கிக் கிடக்கிறது. இது ஒன்று!

மக்கள் மத்தியில் ஏற்பட்ட கோபத்தைத் தணிப்பதற்காக ஒரு அறிவிப்பை முதலமைச்சர் செய்தார். படுகொலை செய்யப்பட்டவர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்று சொன்னார். அதையாவது முறையாகக் கொடுத்தார்களா என்றால் இல்லை.

வளர்மதி எம்.இ. படித்துள்ளார். சீதா எம்.எஸ்சி., பி.எட். படித்துள்ளார். பானுப்ரியா பி.காம், எம்.பி.ஏ படித்துள்ளார். அனுஷ்யா பி.ஏ. படித்துள்ளார். இப்படி பட்டம் பெற்றவர்களுக்கும் கிராம உதவியாளர் பணி தரப்பட்டுள்ளது. 5-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கும் கிராம உதவியாளர் பணி தரப்பட்டுள்ளது. இது என்ன அளவுகோல்?

எங்களது கல்வித்தகுதிக்கு ஏற்ற வேலையைத் தாருங்கள் என்று அவர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். இதுவரை இந்த அரசாங்கம் அது பற்றி பரிசீலனை செய்ததா? வழங்குவதற்கு மனம் இருந்ததா? எதற்காக அப்பாவி மக்களை ஏமாற்றுகிறீர்கள்? அந்தோணி செல்வராஜ் குடும்பத்துக்கும் சண்முகம் குடும்பத்துக்கும் இன்னும் பணி வழங்கப்படவில்லை. கல்வித் தகுதிக்கு ஏற்றவாறு பணிகள் வழங்கக் கோரி பத்து முறைக்கு மேல் மாவட்ட ஆட்சியரிடம் இந்தக் குடும்பத்தினர் கோரிக்கை வைத்தும் இரண்டு ஆண்டுகளாகத் தரவில்லை.13 பேரைக் கொன்று குவித்த அரசு, அவர்களது குடும்பத்தினரை நித்தமும் சித்ரவதை செய்து வருகிறது எடப்பாடி அரசு!

சாத்தான்குளம் கொடூரத்தை நான் உங்களுக்கு விரிவாகச் சொல்லத் தேவையில்லை. ஜெயராஜ், பென்னிக்ஸ் என்ற தந்தை மகனை அடித்தே கொன்றுள்ளது சாத்தான்குளம் போலீஸ். இவர்களது உடலை வாங்க மாட்டோம் என்று கோவில்பட்டியில் பொதுமக்கள் சாலைமறியல் செய்தபோதே நான் அறிக்கை வெளியிட்டேன். இதற்குக் காரணமானவர்கள் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றேன். ஆனால் ஜெயராஜும் பென்னிக்ஸும் உடல்நலக் குறைவு காரணமாகத்தான் மரணம் அடைந்தார்கள் என்று அறிக்கை வெளியிட்டார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

இதை விட அப்பட்டமான பொய் இருக்க முடியாது. அனைத்து ஆவணங்களையும் மறைக்க முயற்சித்தார்கள். தொடர்ச்சியாக அறிக்கை வெளியிட்டு சி.பி.ஐ. விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிடும் அளவுக்கு நெருக்கடியை நான் ஏற்படுத்தினேன். அதனால்தான் இன்று சி.பி.ஐ. விசாரணையில் ஜெயராஜ், பென்னிக்ஸ் வழக்கு உள்ளது.

ஜெயராஜ் முதலில் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். ஏன் அவரை இப்படி அடிக்கிறீர்கள் என்று கேட்ட பென்னிக்ஸ், அரை நிர்வாணமாக ஆக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளார். ரத்த அழுத்தமும், நீரிழிவு நோயும் தனக்கு இருக்கிறது என்று சொன்ன பிறகும் ஜெயராஜை விடாமல் அடித்துள்ளார்கள். பென்னிக்சுக்கு, 'போலீஸ் என்றால் யார் என்று காட்டு' என்று உத்தரவு போட்டு அடித்துள்ளார்கள். இவற்றை வாக்கு மூலங்களாகப் பதிவு செய்துள்ளது சி.பி.ஐ.

இதில் மிக முக்கியமானது சாத்தான்குளம் காவல் நிலைய ஏட்டு ரேவதியின் வாக்குமூலம் ஆகும். ஜெயராஜும் பென்னிக்சும் தாக்கப்பட்டதற்கு நேரடி சாட்சியே இந்த ரேவதி தான். அவர் அனைத்தையும் மறைக்காமல் சொல்லி இருக்கிறார்.

''சாத்தான்குளம் காவல் நிலைய சுவரில் இருந்து சேகரிக்கப்பட்ட ரத்த மாதிரிகள் டி.என்.ஏ. பரிசோதனை செய்யப்பட்டது. அந்த ரத்த மாதிரியும் ஜெயராஜ் - பென்னிக்ஸ் ஆடையில் இருந்த ரத்தக்கறையும் பொருந்தி உள்ளது. பென்னிக்ஸ் பயன்படுத்திய ஆடைகள், காவல் நிலைய சுவர் மற்றும் இதர இடங்களில் சேகரித்த ரத்தக்கறை மாதிரிகள், அவருடைய தாயார் செல்வராணியின் ரத்த மாதிரியுடன் ஒத்துப் போகிறது. இதன் மூலம் இவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டே இறந்துள்ளனர் என்பது உறுதி செய்யப்படுகிறது" என்று தனது சி.பி.ஐ. கூறியுள்ளது. மொத்தம் 18 இடங்களில் இவர்கள் இருவருக்கும் காயம் இருந்ததாக சி.பி.ஐ. கூறியுள்ளது. இதுதான் இந்த எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் லட்சணம். இருவரை அடித்தே கொல்கிறது போலீஸ். அதற்குத் தலையாட்டுகிறது அரசு மருத்துவமனை. உடல்நலக் குறைவால் இறந்தார்கள் என்று மொத்தத்தையும் மறைக்கிறார் முதலமைச்சர். இத்தகைய பழனிசாமி முதலமைச்சராக நீடிக்கலாமா?

இதனால்தான் தூத்துக்குடிக்கே வரத் தயங்குகிறார் முதலமைச்சர் என்றும் செய்திகள் வெளியாகி வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா பணிகள் குறித்து ஆய்வு செய்ய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதி வருவதாக இருந்தது ஆனால் ராமநாதபுரம் மாவட்டம் வரை வருகை தந்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடி மாவட்டம் வரவில்லை. அக்டோபர் 13-ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு தமிழக முதலமைச்சர் வருகை தருவார் எனத் தெரிவிக்கப்பட்டது ஆனால் அவர் தாயார் மரணம் அடைந்ததைத் தொடர்ந்துஅந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. அக்டோபர் 29ஆம் தேதி முதலமைச்சர் தூத்துக்குடி வருவதாகத் தெரிவிக்கப்பட்டது. அதுவும் ரத்து செய்யப்பட்டது.

அடுத்து புதிய தேதி குறித்திருப்பதாகச் சொல்கிறார்கள். ஏன் தூத்துக்குடிக்கு முதல்வரால் வரமுடியவில்லை? என்ன தயக்கம்?

13 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட போது அந்தக் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்ல முதல்வர் வரவில்லை.

நூற்றுக்கணக்கானவர்கள் காயம்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களைச் சந்திக்க வரவில்லை.

சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்லவும் தூத்துக்குடி வரவில்லை.

இப்போதும் மூன்றாவது முறையாக அவரால் வர முடியவில்லை, தள்ளிப் போடுகிறார் என்றால் என்ன காரணம்?

மக்களைப் பார்க்க பயமா?

தமிழ்நாடின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு கோரிக்கைகளுக்காக மக்கள் போராட்டங்களை நடத்தி வந்தார்கள்.

எங்காவது சென்று அவர்களது கோரிக்கை என்ன என்று கேட்டிருப்பாரா?

எட்டுவழிச் சாலைத் திட்டத்தால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று போராடினார்களே தர்மபுரி, சேலம் மக்கள். அவர்களைப் போய்ப் பார்த்தாரா?

ஹைட்ரோகார்பன் திட்டங்களால் நிலத்தையும் நிலத்தின் வளத்தையும் இழக்கும் டெல்டா மாவட்டத்து மக்களைப் பார்த்தாரா?

காவிரி நீருக்காகப் போராடிய தஞ்சை மாவட்டத்து மக்களைப் வந்து பார்த்தாரா?

காவிரிக்காக பிரதமரைப் போய் பார்த்தாரா?

7.5% சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தில், பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்திருக்கும் இவர், அரசியல் ரீதியாக என்ன அழுத்தம் கொடுத்தார்?

என்ன பயம்? மக்களைப் பார்ப்பதில் எதற்காக பயம்? பிரதமரைப் பார்ப்பதில் பயம் எதற்காக? ஆளுநருக்கு அரசியல் ரீதியாக அழுத்தம் கொடுப்பதில் என்ன பயம்?

மடியில் கனம்! அதனால் வழியில் பயம்!

ஊழல்! அது ஒன்றுதான் எடப்பாடி பழனிசாமியின் ஒரே தொழில். அதைத் தவிர வேறு தொழில் தெரியாது. அவரது ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்ட ஊழல்கள், முறைகேடுகள், லஞ்ச லாவண்யங்கள் இவை அனைத்துக்குமான முழுமையான பட்டியலை மத்திய பா.ஜ.க. அரசு எடுத்து வைத்துள்ளது. அதனால்தான் மத்திய அரசு சொல்வதற்கு எல்லாம் தலையாட்டிக் கொண்டு இருக்கிறார் பழனிசாமி.

டெல்லி கேட்கிற கப்பத்தைக் கட்டுகிறார். அதனால் பா.ஜ.க. இவரைப் பாதுகாக்கிறது. பழனிசாமியின் ஊழல்களை பா.ஜ.க. திரட்டி வைத்திருப்பது என்பது அவர்கள் ஏதோ நேர்மையைக் காப்பாற்றுவதற்காக அல்ல. இந்தக் கோப்புகளைக் காட்டி பழனிச்சாமியை மிரட்டுவதற்காகத் திரட்டி வைத்துள்ளார்கள். எனவே தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அனைவருக்கும் துரோகம் செய்கிறார் எடப்பாடி பழனிசாமி.

விவசாயிகளுக்கு துரோகம்! நெசவாளருக்கு துரோகம்! வியாபாரிகளுக்கு துரோகம்!

மீனவர்களுக்கு துரோகம்! பிற்படுத்தப்பட்டோர்க்கு துரோகம்! மிகவும் பிற்படுத்தப்பட்டோர்க்கு துரோகம்! பட்டியலின மக்களுக்கு துரோகம்! சிறுபான்மையினர்க்கு துரோகம்! என்று மொத்தம் துரோக முதலமைச்சராக பழனிசாமி ஆகிவிட்டார்.

இந்தத் துரோகக் கூட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான போர் தான் இந்தத் தேர்தல்!

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழத்தில் உள்ள 39 தொகுதிகளில் 38 தொகுதிகளில் வென்றோம்.

நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் டெல்லியில் எடுத்து வைக்கும் வாதங்களைப் பார்த்திருப்பீர்கள்.

ஜனநாயகத்துக்காக, மனித உரிமைகளைக் காப்பதற்காக, மாநில சுயாட்சிக்காக, தமிழுக்காக, சமூகநீதிக்காக அவர்கள் நித்தமும் போராடி வருகிறார்கள். தமிழகத்துக்காக மட்டுமல்ல, இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்காகவும் நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசி வருகிறார்கள். இது யாரால் சாத்தியமானது என்றால் தமிழ்நாட்டு மக்களால் சாத்தியமானது.

ஒரு சில எம்.பி.க்களை அல்ல, ஒட்டுமொத்த எம்.பி.க்களையும் தி.மு.க. கூட்டணிக்குக் கொடுத்ததால்தான் நம்முடைய தமிழகமே எழுந்து நின்று நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க முடிகிறது.

அதைப் போலத்தான் ஒட்டுமொத்தமான, முழுமையான வெற்றியை திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணிக்கு வழங்க வேண்டும் என்று தூத்துக்குடி பொதுக்கூட்டத்தின் வாயிலாக தமிழக மக்களை நான் கேட்டுக் கொள்கிறேன்.

முழு வெற்றியை அடையும் போதுதான் முழு நன்மையும் மக்கள் பெற முடியும். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தேர்தல் நேரத்தில் ஒரு ஊரின் பெயரைக் குறிப்பிடுவார்கள். அந்த ஊர் தூத்துக்குடி மாவட்டத்தில்தான் இருக்கிறது. அந்த ஊரின் பெயர், எப்போதும் வென்றான் என்பதாகும்.

தனது வாழ்நாளில் போட்டியிட்ட தேர்தலில் எல்லாம் எப்போதும் வென்றவர் தலைவர் கலைஞர் அவர்கள். அத்தகைய எப்போதும் வென்றான்களாக கழக உடன்பிறப்புகள் அனைவரும் மாறவேண்டும். உங்களது கண்ணுக்குத் தெரிய வேண்டியது உதயசூரியன். அது ஒன்றே கழகத் தொண்டர்களில் லட்சியமாக மாறுமானால், கழகத் தொண்டர்கள் அனைவரும் எப்போதும் வென்றான்கள் தான்.

நம்முடைய தலைவர் கலைஞர் எல்லாவற்றிலும் நிறைவாழ்க்கை வாழ்ந்தவர். அவர் அடைந்த உயரத்தை இதுவரை எவரும் தொட்டதும் இல்லை. இனி தொடவும் முடியாது என்று எல்லோருக்கும் தெரியும். எந்தத் துறையை எடுத்தாலும் அவரே நம்பர் ஒன்னாக இருந்தார்.

எந்தக் கூட்டத்திலும் அவரே முதல் மனிதர். அத்தகைய தலைவருக்கு ஒரு குறை இருந்தது. அவர் நம்மை விட்டுப் பிரியும் போது அவர் முதலமைச்சராக இல்லை. தி.மு.க. ஆட்சி மலர்ந்துவிட வேண்டும், அந்த வெற்றியை அவர் பார்த்துவிட வேண்டும் என்று நாம் நினைத்தோம். ஆனால் காலம் வேறு மாதிரியாக நினைத்துவிட்டது.

இயற்கையின் சதியை யாரும் எதுவும் செய்ய முடியாது. ஆனால் கலைஞருக்கு நான் கொடுத்த வாக்குறுதியாக தி.மு.க.வை ஆட்சியில் அமர்த்த வேண்டும். இது ஒரு இலக்கு! தமிழகத்தை மீட்க வேண்டும். இது இரண்டாவது இலக்கு!

கலைஞரின் கனவை நிறைவேற்ற கலைஞரின் உடன்பிறப்புகளாகிய நம்மால் தான் முடியும். பணிமுடிப்போம்! தமிழகம் மீட்போம்!”

இவ்வாறு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

banner

Related Stories

Related Stories