மு.க.ஸ்டாலின்

“கிசான் திட்டத்தில் ரூ. 110 கோடி ஊழல் : அ.தி.மு.க அரசே முழுமுதற் காரணம்” - மு.க.ஸ்டாலின் விளாசல்!

6 லட்சம் போலிகள் சேர்ந்ததற்கும் - 110 கோடி ரூபாய் விவசாயிகளின் பணம், வேறு தகுதியில்லாதவர்களுக்குப் போனதற்கும் அ.தி.மு.க. அரசுதான் முழு முதற்காரணம்!

“கிசான் திட்டத்தில் ரூ. 110 கோடி  ஊழல் : அ.தி.மு.க அரசே முழுமுதற் காரணம்” - மு.க.ஸ்டாலின் விளாசல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

"விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தில் ரூ. 110 கோடி அளவில் நடைபெற்றுள்ள ஊழலில், விளையாட்டு - வேடிக்கை காட்டி திசை திருப்பாமல், 6 லட்சம் போலிகள் சேருவதற்குக் காரணமான உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்ய - முதலமைச்சர் பழனிசாமி உடனடியாக சி.பி.ஐ. விசாரணைக்குப் பரிந்துரை செய்ய வேண்டும்" என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விவசாயிகளுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கும் 'பிரதம மந்திரி கிசான்' திட்டத்தின் கீழ், தாமாகவே பதிவு செய்து கொள்ளும் முறையால்தான், முறைகேடு நடைபெற்று விட்டது” எனக் கூறி- விவசாயிகளுக்குப் போக வேண்டிய ரூபாய் 110 கோடியை 'போலி நபர்கள்' கொள்ளையடிக்கத் துணை போன தனது ஆட்சியின் முறைகேட்டைத் திசை திருப்பி - மறைக்க முயற்சிக்கும் முதலமைச்சர் பழனிசாமிக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தாமாகவே பதிவு செய்து கொண்டவர்கள் ஒருவரோ - இருவரோ அல்ல; நூறு பேரோ - இருநூறு பேரோ அல்ல; ஆறு லட்சம் போலி நபர்கள்!

கொரோனா பேரிடர் காலத்தில் - விவசாயிகளுக்குச் சேர வேண்டிய நிதியை, இடைமறித்துக் கொள்ளையடித்துள்ளார்கள். இதில் முதலமைச்சரின் சொந்த மாவட்டத்தில் மட்டும், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலி நபர்கள் பணம் பெற்றுள்ளார்கள்!

முறைகேடு வெளிச்சத்திற்கு வந்து பல்லிளித்தவுடன், பத்திரிகையாளர்களைச் சந்தித்த தமிழக அரசின் வேளாண் துறைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி "இது 110 கோடி ரூபாய் ஊழல்" என்றும், “மார்ச் மாதத்தில் 39 லட்சமாக இருந்த பயனாளிகளின் எண்ணிக்கை, திடீரென்று ஆகஸ்ட் மாதத்தில் 45 லட்சமாக உயர்ந்துவிட்டது” என்றும் கூறினார். அவர் கணக்குப்படி போலிகள் 6 லட்சம் பேர்!

“கிசான் திட்டத்தில் ரூ. 110 கோடி  ஊழல் : அ.தி.மு.க அரசே முழுமுதற் காரணம்” - மு.க.ஸ்டாலின் விளாசல்!

நேற்றைய தினம் பேட்டியளித்துள்ள முதலமைச்சர் புதுக் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறார். “தாமாகவே இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம் என்ற மத்திய அரசின் அறிவிப்புதான் இந்த முறைகேட்டிற்குக் காரணம்” என்று கூறியது மட்டுமின்றி, “4 மாதத்தில் 41 லட்சம் பயனாளிகள் 46 லட்சம் பயனாளிகளாக அதிகரித்து விட்டார்கள்.” என்று கூறியிருக்கிறார். முதலமைச்சர் சொல்லும் போலிக் கணக்கு 5 லட்சம் பேர்! இங்கும் மீண்டும் ஒரு பொய்க்கணக்கு! துறைச் செயலாளர் சொன்னதை விட, 1 லட்சம் 'போலி நபர்களை' முதலமைச்சர் பழனிசாமி மறைப்பது ஏன்?

பி.எம். கிசான் திட்டத்தைச் செயல்படுத்துவதில் ஏதோ அ.தி.மு.க. அரசுக்குப் பொறுப்பே இல்லை என்று, ஊழலை மறைக்க, 'உத்தம வேடம்' போட்டிருக்கிறார் முதலமைச்சர். தலைமைச் செயலாளர் மற்றும் வேளாண்துறைச் செயலாளர் ஆகியோரிடம் உள்ள இத்திட்டத்தின் கோப்புகளை முதலமைச்சர் படித்துப் பார்க்கவில்லை போலிருக்கிறது!

இத்திட்டத்தின் கீழ், “பயனாளிகளை அடையாளம் காணுவது, அவர்களின் விண்ணப்பத்தில் உள்ள தகவல்களை உறுதி செய்வது, அவற்றை பி.எம். கிசான் இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது, அனைத்தும் முழுக்க முழுக்க அ.தி.மு.க. அரசின் வேலை. பதிவேற்றம் செய்யப்பட்ட பயனாளிகளில் 5 சதவீதம் பேரை நேரடியாக - அவர்களின் கிராமங்களுக்குச் சென்று ஆய்வு நடத்தி - அவர்கள் உண்மையான பயனாளிகளா எனக் கண்டுபிடிப்பதும் அரசின் கடமை” என்பதை ஏனோ முதலமைச்சர் பழனிசாமி வசதியாக மறைத்து விட்டு, ஏதும் அறியாத எதார்த்தவாதியைப் போலப் பேட்டி கொடுத்திருக்கிறார்.

இத்திட்டத்தின் மேற்கண்ட பணிகளைக் கண்காணிக்க, கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் வருவாய் நிர்வாகத்துறை ஆணையர் 'மாநில ஒருங்கிணைப்பாளராக' நியமிக்கப்பட்டுள்ளார். மாநில அளவில் வேளாண்துறை இயக்குநர் 'முதன்மை அதிகாரி'-யாக (Nodal Officer) நியமிக்கப்பட்டுள்ளார். இவற்றை எல்லாம் நான் ஏதோ ஆதாரமின்றிக் கூறிடவில்லை. இந்த நியமனம் தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் உள்ள அ.தி.மு.க. அரசின் வேளாண் துறை வெளியிட்ட அரசு ஆணை எண் 45. அந்த ஆணை வெளியிடப்பட்ட தேதி 13.2.2019. அதாவது கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக இந்த அதிகாரிகள் இத்திட்டத்தைக் கண்காணித்து வருகிறார்கள். பிறகு எப்படி 6 லட்சம் போலி பயனாளிகள் இந்த நிதியைப் பெற முடிந்தது?

“கிசான் திட்டத்தில் ரூ. 110 கோடி  ஊழல் : அ.தி.மு.க அரசே முழுமுதற் காரணம்” - மு.க.ஸ்டாலின் விளாசல்!

முதலமைச்சர் சொல்லும் நொண்டிச் சாக்கான “விண்ணப்பங்களை நேரடியாக பி.எம்.கிசான் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய அனுமதித்ததுதான் முறைகேட்டிற்குக் காரணம்” என்பது “பட்டுக்கோட்டைக்கு வழி எது என்று கேட்டால், கொட்டைப் பாக்கின் விலை என்ன என்று சொல்வது” போன்றது ஆகும்!

தாங்களாகவே பயனாளி ஒருவர் விண்ணப்பத்தைப் பதிவேற்றம் செய்தாலும் - அதில் உள்ள தகவல்கள் சரியானவைதானா என்பதை, அ.தி.மு.க. அரசுதான் உறுதிசெய்ய வேண்டும் என்பதை முதலமைச்சர் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் “அந்த விண்ணப்பத்தில் உள்ள தகவல்கள் சரியானவை என்பதைக் கிராம அளவில் உள்ள அதிகாரி சான்றளித்து - கையொப்பம் இட வேண்டும்” என்று அறிவுறுத்தி பி.எம்.கிசான் திட்டத்தின் தலைமைச் செயல் அதிகாரி 26.2.2019 அன்றே கடிதம் எழுதியுள்ளார். அதையும் முதலமைச்சர் படித்துப் பார்க்கவில்லை. தாமாகவே பதிவேற்றம் செய்யப்பட்ட பிறகும் கூட அந்த விண்ணப்பங்களையும் ஆய்வு செய்து - அவற்றை ஒரிஜினல் விண்ணப்பங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியது 'மேற்பார்வை செய்யும் அ.தி.மு.க. அரசின்' கடமை. இதுவும் முதலமைச்சருக்குத் தெரியவில்லை. ஆகவே 6 லட்சம் போலிகள் சேர்ந்ததற்கும் - 110 கோடி ரூபாய் விவசாயிகளின் பணம், வேறு தகுதியில்லாதவர்களுக்குப் போனதற்கும் அ.தி.மு.க. அரசுதான் முழு முதற்காரணம்!

அப்படிப்பட்ட 'போலிகளுக்கு' கண்ணை மூடிக் கொண்டு பணத்தை அளித்த பா.ஜ.க. அரசு இரண்டாவது காரணம்!!

இன்னொரு கேள்வியும் முதலமைச்சரைப் பார்த்துக் கேட்க விரும்புகிறேன். பி.எம். கிசான் திட்டத்திற்கு, முதலில் வருவாய் நிர்வாகத்துறை ஆணையரும், வேளாண்துறையின் அரசு செயலாளரும் 'தலைமைச் செயலக முதன்மை அதிகாரிகளாக' (Secretariat Nodal officers) நியமிக்கப்பட்டார்கள். அதற்கான அரசு ஆணை எண் 42. வெளியிட்ட தேதி 9.2.2019!

ஆனால் திடீரென்று நான்கு நாள் கழித்து, 13.2.2019 அன்று, வேளாண்துறைச் செயலாளர் அந்தப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு - தலைமைச் செயலக ஒருங்கிணைப்புப் பணி கைவிடப்பட்டுள்ளது. இதன்பிறகு, 'மாநில ஒருங்கிணைப்பு அதிகாரி'யாக வருவாய் நிர்வாக ஆணையரும், இத்திட்டத்தின் 'முதன்மை அதிகாரி'-யாக (Nodal Officer) வேளாண் துறை இயக்குநரும் மாற்றி நியமிக்கப்படுகிறார்கள். இந்த மாற்றத்தில் உள்ள மர்மம்தான் என்ன? முதலமைச்சரும், விவசாயத்துறை அமைச்சரும் சேர்ந்து இந்த மாற்றத்தை ஏன் எதற்காகச் செய்தார்கள்? நாடாளுமன்றத் தேர்தலுக்கு இத்திட்டத்தை அறிவித்து - விவசாயிகளை ஏமாற்றிவிட்டு - இன்றைக்கு விவசாயிகள் கடனைக் கூட தள்ளுபடி செய்ய மறுத்து பா.ஜ.க. அரசு வஞ்சிப்பது போல் - வருகின்ற சட்டமன்றத் தேர்தலுக்காக, இப்படி போலிப் பெயர்கள் சேர்க்கப்பட்டு - விவசாயிகளின் 110 கோடி ரூபாய் தாரைவார்க்கப்பட்டதா?

ஆளுங்கட்சியினரின் துணை இல்லாமல், இது அறவே சாத்தியமில்லை!

ஆகவே கீழ்மட்டத்தில் உள்ள ஊழியர்கள், கான்டிராக்ட் ஊழியர்களை டிஸ்மிஸ் செய்து விட்டோம், புரோக்கர்களைக் கைது செய்து விட்டோம் என்றெல்லாம் 'விளையாட்டும்' 'வேடிக்கையும்' காட்டாமல் - திசை திருப்பல் இன்றி - விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய 110 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ள ஊழலில் உண்மைக் குற்றவாளிகளை - 6 லட்சம் போலிகள் சேருவதற்குக் காரணமானவர்களைக் கைது செய்ய - உடனடியாக சி.பி.ஐ. விசாரணைக்குப் பரிந்துரை செய்யுமாறு முதலமைச்சர் பழனிசாமி அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories