மு.க.ஸ்டாலின்

“தி.மு.கவின் ‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்தை பார்த்து அரசு செயல்படவேண்டிய நேரமிது” - மு.க.ஸ்டாலின்!

எப்படிப்பட்ட உதவிகளை, எந்த மாதிரியான திட்டமிடுதலோடு அரசாங்கம் செய்ய வேண்டும் என்பதை “ஒன்றிணைவோம் வா” செயல் திட்டத்தின் மூலமாக நாங்கள் காட்டி இருக்கிறோம் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“தி.மு.கவின்  ‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்தை பார்த்து அரசு செயல்படவேண்டிய நேரமிது” - மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

“எங்களிடம் வரும் கோரிக்கைகளை அரசாங்கத்தின் கவனத்துக்குக் கொண்டு சேர்த்து, அரசை மக்களின் கோரிக்கைகளுக்குச் செவிமடுத்துச் செயல்பட வைப்போம்” எனக் குறிப்பிட்டு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில்,

“அரசு செயல்பட வேண்டிய நேரமிது!

மக்கள் எங்களிடம் வைத்த 15 லட்சம் கோரிக்கைகளுக்காக நாங்கள் தொடர்ந்து பணியாற்றிவரும் இவ்வேளையில், 1 லட்சம் பிரதான கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு அனுப்பியுள்ளோம். இவை www.ondrinaivomvaa.in-இல் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றை நிவர்த்தி செய்யவேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. மக்களின் இந்த கோரிக்கைகளுக்கு முதலமைச்சர் அவர்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்!

கொரோனா என்ற கொடிய வைரஸ் தொற்றின் காரணமாக, இன்றைக்கு நாடே முடங்கிக் கிடக்கிறது. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கு, எங்களால் முடிந்த உதவியைச் செய்ய வேண்டும் என்ற நல்ல நோக்கத்திற்காகத்தான் 'ஒன்றிணைவோம் வா' என்ற திட்டத்தைத் தொடங்கினேன்.

அன்றாட தினக்கூலிகள், அமைப்புசாராப் பணியாளர்கள், ஏழைகள், விவசாயத் தொழிலாளர்களுக்கு, மேலும், தேவைப்படும் மக்களுக்கு உணவும் மருந்துப் பொருளும் வாங்கிக் கொடுக்கலாம் என்ற எண்ணத்தோடு ஏப்ரல் 20-ம் தேதி இந்தத் திட்டத்தை தொடங்கினோம்.

இதற்காக 90730 90730 என்ற மக்கள் உதவி எண்ணை அறிவித்தோம். அறிவிப்பு செய்த மறுநாளே மளமளவென்று அழைப்புகள் வரத் தொடங்கின. இதுவரையில் எங்களுக்கு 15 லட்சம் அழைப்புகள் மக்களிடம் இருந்து வந்திருக்கின்றன. இதற்காகவே தனியாக ஒரு அலுவலகத்தையே அமைக்க வேண்டியதாக இருந்தது.

மக்களோடு தொலைபேசியில் பேசுவது, அவர்கள் கேட்கும் உதவிகளைக் குறித்து வைத்துக் கொள்வது, இதை அவர்கள் இருக்கும் பகுதியின் தி.மு.க. நிர்வாகிகளுக்குச் சொல்வது, இன்னார் வந்து உங்களுக்கு உதவி செய்வார்கள் என்று மக்களுக்குத் தகவல் சொல்வது, உதவி கிடைத்துவிட்டதா என்று கேட்பது, அவர்களின் எதிர்பார்ப்பு பூர்த்தி ஆகிவிட்டதா என்று ‘ஆய்வு’ செய்வதென்று மிகப்பெரிய சங்கிலித் தொடர் போல் இயங்கினோம்.

இதற்காகவே ஏராளமான நண்பர்கள் என்னுடைய அலுவலகத்தில் இருந்து செயல்பட்டார்கள்! இப்படி இயங்கியதால்தான் 15 லட்சம் அழைப்புகளையும் சரிபார்த்து, தேவையானவர்களுக்கு எங்களால் உதவி செய்ய முடிந்தது.

“தி.மு.கவின்  ‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்தை பார்த்து அரசு செயல்படவேண்டிய நேரமிது” - மு.க.ஸ்டாலின்!

இதேமாதிரி இன்னொரு சேவையையும் செய்தோம். அதுதான் - உணவு அளித்தல்! வீடு இல்லாதவர்கள், சமையல் செய்து சாப்பிடக் கூட வழியில்லாதவர்களுக்கு உணவுகளைத் தயாரித்துக் கொடுப்பது. இன்றைக்கு வரையில் 16 லட்சம் பேருக்கு உணவுகள் வழங்கி இருக்கிறோம். இதற்காக உணவுக்கூடங்கள் ஏற்பாடு செய்து சமையல் தயார் செய்து, தொண்டு நிறுவனங்களிடம் கொடுத்தோம். அவர்கள் அனைவருக்கும் கொடுத்தார்கள்.

தினமும் தி.மு.க. நிர்வாகிகளிடம் பேசினேன். இந்தப் பொருட்களைக் கொண்டு போய் கொடுத்த தன்னார்வலர்களிடம் பேசினேன். பயனடைந்த மக்களிடமும் பேசினேன். எல்லோரது முகத்திலும் மகிழ்ச்சியைப் பார்த்தேன்! நாங்கள் விரும்பியது கிடைத்துவிட்டது என்று அவர்கள் சொல்லும்போது எனக்கு மனநிறைவாக இருந்தது.

கொரோனா காலத்திலும் சளைக்காமல், இரவு பகல் பாராமல், வேகாத வெயிலில் அலைந்தார்கள் தி.மு.கழக நிர்வாகிகள். அவர்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை. நீங்கள் அனைவரும் இருக்கும் திசை நோக்கி நான் வணங்குகிறேன்!

ஏனென்றால், தங்களைப் பற்றிக் கவலைப்படாமல், மக்களைப் பற்றி மட்டுமே கவலைப்படுகிறவர்கள்தான் தி.மு.க. தொண்டர்கள். தலைவர் கலைஞர் அவர்கள் சொன்னது போல், 'எல்லாப் பதவியையும், பதவியாக நினைக்காமல் பொறுப்பாக நினைப்பவர்கள் தி.மு.க. நிர்வாகிகள்’.

“தி.மு.கவின்  ‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்தை பார்த்து அரசு செயல்படவேண்டிய நேரமிது” - மு.க.ஸ்டாலின்!

மிகுந்த நெருக்கடியான நேரத்தில் எங்களால் முடிந்த உதவிகளை இந்த இருபது நாட்களாகச் செய்துகொண்டு வந்தோம். நமக்கு வரும் கோரிக்கைகளை வைத்துப் பார்க்கும்போது அரசாங்கம் செயல்படவே இல்லை என்பது தெரிகிறது. அரசாங்கமும் அரசு பதவியில் உள்ளவர்களும் மக்களுக்கான கடமையைச் செய்யும் பொறுப்பில் இருந்து தவறக் கூடாது. நான் முன்பே சொன்னதுபோல், நாம் அரசாங்கம் கிடையாது.

பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்துக்குத் தேவையான உதவிகளை முடிந்தவரை நாங்கள் செய்திருக்கிறோம். எப்படிப்பட்ட உதவிகளை, எந்த மாதிரியான திட்டமிடுதலோடு அரசாங்கம் செய்ய வேண்டும் என்பதை நாங்கள் காட்டி இருக்கிறோம். இதன் தொடர்ச்சியாக எங்களிடம் வரும் கோரிக்கைகளை இணையத்தின் மூலமாக அரசாங்கத்தின் கவனத்துக்குக் கொண்டு சேர்க்கப் போகிறோம். அதாவது, அரசாங்கத்தை மக்களின் கோரிக்கைகளுக்குச் செவிமடுத்துச் செயல்பட வைக்கப்போகிறோம்.

நானே முதலமைச்சர் அலுவலகத்துக்கு அந்த மனுக்களை அனுப்பப் போகிறேன். அவர் அதனைக் கண்டு கொள்ளவில்லை என்றால், தி.மு.க.,வின் ஐந்து பேர் கொண்ட குழு அமைத்து தலைமைச் செயலாளருக்கு இந்தக் கோரிக்கை மனுக்களை அனுப்பி வைக்கப் போகிறோம்.

இதேபோல் மாவட்ட ஆட்சியர்களுக்கும் துறை சார்ந்த அதிகாரிகளுக்கும் திராவிட முன்னேற்றக் கழக மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனுப்பி வைப்பார்கள். மக்களின் கோரிக்கைகளை, வேண்டுகோள்களை, தேவைகளை அரசாங்கத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்று அரசாங்கத்தைச் செயல்பட வைப்போம் என்று உறுதி அளிக்கிறேன். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களின் நலனே எங்கள் தலையாய கடமையாகக் கொண்டு இருக்கிறோம்.

ஒன்றிணைவோம் வா! ” எனக் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories