கொரோனாவின் கோரத்தாண்டவம் தமிழகத்தில் தினந்தோறும் அதிகரித்து வருகிறது. இந்த சமயத்தில் ஆளுங்கட்சியாக உள்ள அ.தி.மு.க மக்களின் தேவைகள் எதையும் பூர்த்தி செய்யாமல் வழக்கம்போல வெற்று அறிவிப்புகளையே செய்து வருகிறது.
ஆகவே, ஊரடங்கால் முடங்கியுள்ள ஏழை எளிய மக்கள் இன்னல்களில் இருந்து மீள்வதற்காக தி.மு.க. சார்பில் ‘ஒன்றிணைவோம் வா’ என்ற திட்டத்தின் கீழ், நிவாரணப் பொருட்கள், அத்தியாவசிய தேவைகளான மருந்துகள் என அனைத்தும் நேரடியாகவே வழங்கப்பட்டு வருகிறது.
இவை அனைத்தையும், தினந்தோறும் மாவட்ட நிர்வாகிகளுடன் காணொளிக் காட்சி மூலம் ஆலோசித்து, கேட்டறிந்து, உத்தரவுகள், அறிவுரைகள் என அளித்து வருகிறார் தி.மு.க. தலைவர். இது மட்டுமல்லாமல், இலவச அழைப்பு எண்ணும் அமைக்கப்பட்டு அதன் மூலமும் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும், வீடில்லாதவர்களுக்கு பசிப்பிணியை நீக்கும் வகையில் தமிழகத்தில் 25 இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கு தனி சமையலறை உருவாக்கப்பட்டுள்ளது. அங்கு தயாரிக்கப்படும் உணவுகள் அனைத்தும் நாள்தோறும் ஒரு லட்சம் ஏழை மக்களுக்கு வழங்கப்படுகிறது.
தி.மு.க ஆட்சியில் இல்லை என்பது மட்டுமே குறையாக இருந்தாலும், மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் இயக்கமாக என்னும் இருக்கும் என்பதற்கு இதுவே சாட்சியாக உள்ளது.
ஆனால், உண்மையிலேயே தி.மு.க மக்களுக்கு உதவிகளை செய்கிறதா என்பதை சோதிப்பதற்காக கன்னியாகுமரியில் ராஜாக்கமங்கலத்தைச் சேர்ந்த பா.ஜ.க ஆதரவாளர் ஒருவர் தி.மு.கவின் ஹெல்ப்லைனுக்கு போன் செய்து உதவி கேட்டிருக்கிறார்.
இதனையடுத்து, அத்தியாவசிய பொருட்களுடன் கால் செய்த அந்த நபரின் வீட்டுக்கு சென்றிருக்கிறார்கள் தி.மு.கவினர். ஆனால், இதனை எதிர்பார்த்திராத பா.ஜ.க ஆதரவாளருக்கு அதிர்ச்சியும், ஆச்சரியமுமே கிடைத்தது.
ஏனெனில், எப்போதுமே மிஸ்டுகால் கொடுத்தே பழகிய அவர்களுக்கு ஏழை, எளியோரின் பசிப்பிணியை தீர்க்கும் வழிகள் குறித்தெல்லாம் கவலை இல்லை என்பதற்கு ராஜாக்கமங்கலம் பா.ஜ.க ஆதரவாளரே சாட்சியாவார்.
இக்கட்டான சூழலில் உதவிக்கரம் நீட்டும் தி.மு.கவின் கைகளுக்கு பா.ஜ.கவினரா, அ.தி.மு.கவினரா, பட்டினி கிடக்கும் ஏழை மக்களா என்ற பேதம் பார்க்கும் எண்ணம் கிடையாது என்பதை உணரவேண்டும்.