மு.க.ஸ்டாலின்

"இதுதான் உங்களது தமிழ்ப்பற்றா?” - மோடி, எடப்பாடி அரசுகளின் முகத்திரையைக் கிழித்தெறியும் மு.க.ஸ்டாலின்!

செம்மொழிப் பட்டியலில் உள்ள தமிழ் உள்ளிட்ட மொழிகளை விட சமஸ்கிருதத்திற்கு மட்டும் 22 மடங்கு அதிகமாக பா.ஜ.க அரசு நிதி ஒதுக்கியிருப்பது அதிர்ச்சி தருவதாகத் தெரிவித்துள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

"இதுதான் உங்களது தமிழ்ப்பற்றா?” - மோடி, எடப்பாடி அரசுகளின் முகத்திரையைக் கிழித்தெறியும் மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

மத்திய பா.ஜ.க அரசு, கடந்த 3 ஆண்டுகளில் சமஸ்கிருத மொழிக்காக 643.84 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்தத் தொகை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஒரிய மொழிகளுக்கு செலவிட்ட தொகையைவிட 29 மடங்கு அதிகம் என தெரியவந்துள்ளது.

இந்நிலையில், பா.ஜ.க அரசின் இந்த துரோகத்திற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு :

“உலக நாடுகள் எங்கும் பயணம் செல்லும் பிரதமர், உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவரையும், உலகத்தையே உறவாகக் கொண்ட கணியன் பூங்குன்றனாரையும், மேற்கோள் காட்டுகிறார். மத்திய நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்யும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வள்ளுவர் குறளைத் தேடித்தேடி மேற்கோள் காட்டுகிறார். இதைச் சொல்லி சிலாகித்துக் கொள்ளும் சிலர், 'பார்த்தீர்களா பா.ஜ.கவின் தமிழ்ப்பற்றை' என்று வாய் ஜாலம் காட்டுகிறார்கள். இந்தப் பற்று வெறும் சொல்லில் தான் இருக்கிறதே தவிர, செயலில் கிஞ்சிற்றும் இல்லை என்பதை நிரூபிக்கிறது ஒரு தகவல்.

இந்தியாவின் செம்மொழிப் பட்டியலில் உள்ள தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளை விட சமஸ்கிருதத்திற்கு மட்டும் 22 மடங்கு அதிகமாக மத்திய அரசு நிதி ஒதுக்கி இருப்பதாக வெளியாகி உள்ள தகவல் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. தமிழ் மொழியையும் தமிழர்களையும் தமிழ்நாட்டையும் மத்திய பா.ஜ.க அரசு எந்த அளவுக்குப் புறக்கணிக்கிறது என்பதை இதன் மூலம் உணரமுடிகிறது.

"இதுதான் உங்களது தமிழ்ப்பற்றா?” - மோடி, எடப்பாடி அரசுகளின் முகத்திரையைக் கிழித்தெறியும் மு.க.ஸ்டாலின்!

நாடாளுமன்றத்தில் சமஸ்கிருத வளர்ச்சி குறித்து பா.ஜ.க உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு மத்திய சுற்றுலா மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சர் பிரஹ்லாத் சிங் படேல் அளித்துள்ள பதிலை படிக்கும் போது அதிர்ச்சியாக இருக்கிறது.

சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்காக டெல்லியில் தேசிய சம்ஸ்கிருத மையம் நிறுவப்பட்டுள்ளதாகவும், இதற்கு, 2019-20-ல் ரூ.231.15 கோடி, 2018-19-ல் ரூ.214.38 கோடி, 2017-18-ல் ரூ.198.31 கோடி என கடந்த 3 ஆண்டுகளில் மொத்தம் ரூ.643.84 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அமைச்சர் பதிலளித்துள்ளார்.

சமஸ்கிருதத்தை வளர்ப்பது தான் அவர்களது நோக்கமும் இலக்குமாக இருக்குமானால் அதனை நாம் குறைசொல்லவில்லை. இந்தியாவில் சமஸ்கிருதம் மட்டும்தான் இருக்கிறதா? பல கோடி மக்கள் பேசும் மொழிகள், அரசியல் சட்டம் அங்கீகரித்த மொழிகள் என எத்தனையோ மொழிகள் இந்தியாவில் இருக்க, புழக்கத்தில் வெகுவாகச் சுருங்கிவிட்ட சமஸ்கிருதத்துக்கு மட்டும் சிம்மாசனம் என்றால், வேறு மொழி பேசுபவர்களை இவர்கள் இந்தியர்களாக ஏன் மனிதர்களாகவே மதிக்கத் தயாராக இல்லையா?

எப்போது பிறந்தது என்று கண்டறிய முடியாத பழமை வாய்ந்ததாம் எம் உயர் தனிச் செம்மொழி, தமிழ் மொழி. அச்செம்மொழி, இந்த மத்திய அரசால் எப்படி நடத்தப்படுகிறது? அதனை வளர்க்க எவ்வளவு தொகை ஒதுக்கி இருக்கிறார்கள்? அந்தக் கணக்கை பார்த்தால், தமிழுக்கும் சமஸ்கிருதத்துக்கும் மலையளவு வேறுபாடு இருப்பதைக் காணலாம்.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்துக்கு 2017-18-ல் ரூ.10.59 கோடி, 2018-19-ல் ரூ.4.65 கோடி, 2019-20-ல் ரூ.7.7 கோடி என கடந்த 3 ஆண்டுகளில் வெறும் ரூ. 22.94 மட்டுமே, ஏனோதானோ ஒதுக்கீடாகச் செய்யப்பட்டிருக்கிறது. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமானது தன்னாட்சி அதிகாரம் பெற்றது. இதன் நிர்வாகக் குழுவின் தலைவராக தமிழக முதலமைச்சர் இருக்கிறார். இப்படி ஒரு பதவி இருக்கிறது என்பது அவருக்குத் தெரியுமா?

"இதுதான் உங்களது தமிழ்ப்பற்றா?” - மோடி, எடப்பாடி அரசுகளின் முகத்திரையைக் கிழித்தெறியும் மு.க.ஸ்டாலின்!

தெரிந்தும் தமிழைத் தாழ்த்தி வருவதைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறாரா? அல்லது 'சமஸ்கிருத வளர்ச்சிக்கான விருதையும் பெறுவதற்கான முயற்சியில் இருக்கிறாரா?' எனத் தெரியவில்லை.

தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதியையோ, ஜி.எஸ்.டி வரி மூலமாக வரவேண்டிய தொகையையோ வாங்குவதற்கு துப்பு இல்லாமல் வெறுமனே விழாக்கொண்டாட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தாய்த் தமிழுக்காக நிதி ஒதுக்கீடு வாங்கித் தருவதில் முனைப்புக் காட்டுவார் என எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் தமிழைவிட முக்கியமான காரியங்கள் அவருக்கு ஏராளமாக இருக்கின்றன.

தமிழை விட சமஸ்கிருதத்துக்கு 22 மடங்கு நிதி ஒதுக்கீடு செய்ததன் மூலம், மத்தியில் தமிழ் மொழிக்கு எதிரான அரசு ஆட்சியில் இருக்கிறது என்பதை உணர்ந்து, மொழி உரிமையைக் காப்பாற்றி, பெற வேண்டிய நியாயமான நிதி ஒதுக்கீட்டைப் பெறுவதற்கான முதுகெலும்பு இல்லாத மாநில அரசாக எடப்பாடி அரசு இருக்கிறது என்பதும் தெளிவாகிறது. செம்மொழியான தமிழின் வளர்ச்சி மத்திய, மாநில அரசுகளால் அடியோடு அலட்சியப் படுத்தப் பட்டிருப்பதை தெளிவாக உணர முடிகிறது.

செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தில், மூத்த ஆய்வறிஞர் ஒருவர் கூட இல்லாதிருப்பதையும், புதிதாக நியமிக்கப்பட வேண்டிய 150 பணியிடங்கள் காலியாகவே இருப்பதையும் இதுதொடர்பாக நாளேடுகளில் வெளியாகி உள்ள செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

"இதுதான் உங்களது தமிழ்ப்பற்றா?” - மோடி, எடப்பாடி அரசுகளின் முகத்திரையைக் கிழித்தெறியும் மு.க.ஸ்டாலின்!

முத்தமிழறிஞர் கலைஞரால் நமது தாய்மொழியாம் தமிழுக்குப் பெற்றுத் தரப்பட்ட செம்மொழித் தகுதியும், அதற்கான பயன்களும் மத்திய, மாநில அரசுகளின் ஓரவஞ்சனையால் சிதைக்கப்பட்டு வருவது தமிழுக்கும், தமிழர்களுக்கும் மட்டும் செய்யும் துரோகம் மட்டுமல்ல, பல கோடிக்கணக்கான உலகத்தமிழர் நெஞ்சில் வேல்பாய்ச்சும் விபரீதம் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

எனவே, செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்திற்கு உரிய நிதியை முழுமையாக ஒதுக்கி, ஆய்வறிஞர்களை நியமித்து, காலிப்பணியிடங்களை நிரப்பி, செம்மொழித் தமிழின் வளர்ச்சி செம்மையாக நடைபெற வழிவகுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.”

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories