மு.க.ஸ்டாலின்

“சமூகநீதியை படுகுழியில் தள்ளிய பா.ஜ.க; EWS இடஒதுக்கீட்டை உடனே ரத்து செய்க” : மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

பொருளாதார இட ஒதுக்கீடு பெற்றவர்களுக்கு இதர பிரிவினரைவிட குறைந்த கட் ஆஃப் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சமூகநீதியை படுகுழியில் தள்ளும் EWS இடஒதுக்கீட்டை உடனடியாக ரத்துசெய்யவேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தல்.

“சமூகநீதியை படுகுழியில் தள்ளிய பா.ஜ.க; EWS இடஒதுக்கீட்டை உடனே ரத்து செய்க” : மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

முன்னேறிய பிரிவினருக்கான பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டை அனைத்துத் துறைகளிலும் கொண்டுவர மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. மருத்துவ இடங்களில் 10% இடஒதுக்கீடு குறித்து இன்னும் தமிழக அரசு முடிவெடுக்காத நிலையில், வங்கித் தேர்வுகளில் பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு சமூக நீதியைக் குழிதோண்டிப் புதைக்கும் என தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. இந்த இடஒதுக்கீடு கொண்டுவரப்பட்டால் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பினர் கல்வி, வேலைவாய்ப்பு பெறுவதில் மிகப்பெரும் பாதிப்புகள் ஏற்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் நாடு முழுவதும் உள்ள 8,653 பணியிடங்களுக்கான முதற்கட்ட தேர்வுகளை லட்சக்கணக்கான இளைஞர்கள் எழுதினர். இதற்கான முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ள நிலையில், இந்த தேர்வுக்கான கட் ஆஃப் மதிப்பெண்கள் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்டேட் வங்கித் தேர்வில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர் 28.5 மதிப்பெண்கள் எடுத்தாலே தேர்ச்சி எனக் குறிப்பிட்டுள்ளதன் மூலம் பா.ஜ.க அரசு சமூகநீதியை படுகுழியில் தள்ளியிருக்கிறது. இந்த EWS இடஒதுக்கீட்டை உடனடியாக ரத்து செய்யவேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டிருப்பதாவது :

“ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் "ஜூனியர் அசோசியேட்" பதவிகளுக்கான முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற நூறு மதிப்பெண்களுக்கு, பிற்படுத்தப்பட்டோர் 61.25, பட்டியலினத்தவர் 61.25, பழங்குடியினத்தவர் 53.75 என "கட் ஆப்" மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில், பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் வருவோர் 28.5 "கட் ஆப்" மதிப்பெண்கள் மட்டும் இருந்தாலே தேர்ச்சி என்பது சமூக நீதியை மத்திய பா.ஜ.க. அரசு எப்படி படுகுழியில் தள்ளியிருக்கிறது என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

சமூக நீதி கட்டமைப்பை தகர்த்து, மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட இளைஞர்களுக்கும், பட்டியலின, மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கும் எட்டாக் கனியாக இருக்கும் வேலை வாய்ப்பை மேலும் பாழாக்கும் இந்த பத்து சதவீத பொருளாதார இட ஒதுக்கீட்டை மத்திய பா.ஜ.க. அரசு தூக்கியெறிய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

banner

Related Stories

Related Stories