மு.க.ஸ்டாலின்

"சமூக ஏற்றத்தாழ்வை வளர்க்கும் நீட் தேர்வை தாமதமின்றி ரத்து செய்ய வேண்டும்"- மு.க.ஸ்டாலின்

நீட் தேர்வை ரத்து செய்ய அழுத்தம் கொடுத்து தி.மு.க தொடர்ந்து போராடும் என மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Venkatesh R S
Updated on

மாணவர்களின் மருத்துவக் கனவைத் தகர்த்து ஏற்றத்தாழ்வை வளர்க்கும் நீட் தேர்வு மேலும் தாமதமின்றி ரத்து செய்யப்படவேண்டும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கை பின்வருமாறு;

”மாணவ-மாணவியருக்கும் அவர்களின் பெற்றோருக்கும் கடும் மன அழுத்தத்தையும், உளைச்சலையும் தரும் மருத்துவப் படிப்பிற்கான நுழைவுத் தேர்வான “நீட்,”சமூக நீதியைச் சிதைக்கும் கொடூர ஆயுதமாக இருக்கிறது என்பதை இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வின் முடிவுகளும் நிரூபிக்கின்றன.

கடந்த ஆண்டைவிட இம்முறை நீட் தேர்வு எழுதிய தமிழக மாணவ-மாணவியரின் தேர்ச்சி விகிதம் கட்டாயத்தின் காரணமாக உயர்ந்திருந்தாலும், அவர்களில் எத்தனை பேருக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்கும் என்கிற கேள்விக்கு திருப்திகரமான பதில் இல்லை. பிற மாநிலங்களைவிட அதிக அளவில் அரசு மருத்துவக் கல்லூரிகளைக் கொண்டது தமிழ்நாடு. கலைஞர் தலைமையிலான தி.மு.க. ஆட்சியில் மாவட்டந்தோறும் மருத்துவக் கல்லூரி என்ற தொலைநோக்குடன் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டது.

அவற்றின் விளைவாக,அரசு மருத்துவக் கல்லூரிகளில் 3ஆயிரத்து 350 இடங்கள் உள்ளன. எனினும், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் இந்த இடங்களைப் பெறுவதில் கிராமப்புற-ஏழை-ஒடுக்கப்பட்ட- விளிம்புநிலை மாணவ மாணவியருக்கு மிகக்கடும் சவால்கள் உருவாகியுள்ளன.

நீட் தேர்ச்சி விகிதம் அதிகரித்திருந்தாலும், அதில் முன்னேறிய வகுப்பைச் சேர்ந்தவர்கள் 7,04,335 என்ற அளவில் உள்ளது. ஆனால், இதர பிற்படுத்தப்பட்டவர்கள் 63,749 மட்டுமே. பட்டியல் இனத்தவர், 20,009 பேர். பழங்குடியினர் 8,455 பேர் என்ற விவரம் வெளியாகியுள்ளது. காலம் காலமாக, அதிகாரத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த ஆதிக்க மனப்பான்மை கொண்ட மேல்தட்டுப் பிரிவினரால், கல்வி மறுக்கப்பட்டு வந்தோருக்கு, சுதந்திர இந்தியாவில் சமூக நீதி அடிப்படையில் அந்த வாய்ப்பு கிடைக்கப்பெற்று ஏறத்தாழ 70 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், மீண்டும் அவர்களை கல்வி ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பின்னுக்குத் தள்ளும் சமநீதி இல்லாத நடவடிக்கையாகவே நீட் தேர்வு முடிவுகள் அமைந்துள்ளன.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 2007ல் தி.மு.கழக ஆட்சியில் மருத்துவம் உள்ளிட்ட தொழிற்படிப்புகளுக்கான பொதுநுழைவுத் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்பட்டு, அதற்கான சட்டம் குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட்டதன் காரணமாக, +2 மார்க் அடிப்படையில் கிராமப்புற-ஏழை-ஒடுக்கப்பட்ட மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து, டாக்டர்களாகினர். தற்போது அந்த சமூக நீதி தகர்க்கப்பட்டுள்ளது. மாநிலக் கல்வி வழியிலான அரசுப் பள்ளிகளில் படித்தோருக்கும் வாய்ப்பு வெகுவாகக் குறைந்துள்ளது.

நீட் தேர்வுக்கு முன்பாக மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளியில் படித்து அரசு மருத்துவக்கல்லூரியில் இடம்பிடித்தோரின் எண்ணிக்கை சராசரியாக 25 என்ற அளவில் இருந்தது. நீட் தேர்வுக்குப் பிறகு அந்த எண்ணிக்கை வெறும் 5க்கும் கீழ் போய்விட்டது. அரசு உதவிபெறும் பள்ளியில் படித்து அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம்பிடித்த மாணவர்களின் எண்ணிக்கை 50க்கு மேல் இருந்த நிலையில், நீட் தேர்வுக்குப் பிறகு 3 என்ற அளவில் குறைந்துவிட்டது. மாநிலக் கல்வித் திட்டத்தின் கீழ் இயங்கும் தனியார் பள்ளிகளில் படித்த மாணவர்கள் நீட் தேர்வுக்கு முன்பாக ஆண்டுதோறும் 2000த்துக்கும் அதிகமான மருத்துவ இடங்களை அரசு மருத்துவக்

கல்லூரிகளில் பெற்று வந்தனர். ஆனால், அந்த எண்ணிக்கையும் நீட் தேர்வுக்குப் பிறகு நூறில் ஒரு பங்காக குறைந்துவிட்டது. ஆனால், மத்திய அரசின் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்கள் நீட் தேர்வுக்கு முன் ஏறத்தாழ ஒற்றை இலக்கத்தில் அரசு மருத்துவக்கல்லூரிகளில் சீட் பெற்றுவந்த நிலையில், நீட் தேர்வுக்குப் பிறகு, 600க்கும் அதிகமான இடங்களைப் பிடித்துள்ளனர். தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் இதே நிலைதான் என்பதை,தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்கள் விரிவாக சுட்டிக்காட்டுகின்றன. ஊடகங்களும் இவற்றை வெளியிட்டுள்ளன.

கிராமப்புற-ஏழை-ஒடுக்கப்பட்ட மாணவர்கள் அதிகம் பயில்வது மாநில அரசு பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அரசு பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும்தான். அவர்களின் மருத்துவக் கனவை நீட் தேர்வு முற்றிலுமாக சிதைத்து ஒழித்துவிட்ட காரணத்தால்தான் அரியலூர் அனிதா, விழுப்புரம் பிரதீபா எனத் தொடங்கிய நீட் பலிகள், இந்த ஆண்டு திருப்பூர் ரிதுஸ்ரீ, பட்டுக்கோட்டை வைஷ்யா, மரக்காணம் மோனிஷா என அதிகரித்துக் கொண்டே போகும்

அவலமும் அபாயமும் மிகுந்த கட்டத்தை அடைந்துள்ளது. வளர்ச்சி பெற்ற மேலை நாடுகளில்கூட இத்தகைய கடுமையான நுழைவுத் தேர்வு முறைகளினால் ஏற்படும் சமூக பாதிப்புகளைக் கணக்கில் கொண்டு அவற்றைக் கைவிட்ட வரலாறு உண்டு. இங்கிலாந்து நாட்டில் தேசிய நுழைவுத் தேர்வின் (National Entrance Test) மூலம் தேர்ச்சி பெற்று,ஆக்ஸ்போர்டு-கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகக் கல்லூரிகளில் சேர்பவர்களில் அரசுப் பள்ளி மாணவர்கள் 100க்கு ஒருவர் என்ற விகிதத்திலும், தனியார் பள்ளி மாணவர்கள் 20க்கு ஒருவர் என்ற அளவிலும் இருந்தன. இதனைத் தொடர்ச்சியாகக் கவனித்த இங்கிலாந்து அரசுத் துறையினர், தேசிய நுழைவுத் தேர்வினால் அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் ஏழ்மையானோருக்கும், பின்தங்கிய பிரிவினருக்கும் ஆக்ஸ்போர்ட்-கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகக் கல்லூரிகளில் இடமளிக்கப்படுவதில்லை, அதற்கான முயற்சிகளையும் மேற்கொள்வதில்லை என்பதை புள்ளிவிவரங்களுடன் அறிந்து, அந்தத் தேர்வை ரத்து செய்ததுடன், சமூக மேம்பாட்டின் அடிப்படையில் இடங்களை வழங்குவதற்கான முறைகளைக் கண்காணிக்கத் தொடங்கினர்.

நம் நாட்டிலும் நகர்ப்புறம் சார்ந்த மேல்தட்டு வகுப்பினரின் பிள்ளைகள் பயிலும் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை மட்டும் கருத்திற்கொண்டு, ஏழ்மையைச் சுமந்துகொண்டு எளிய சூழலில் மாநிலப் பாடத்திட்டத்திலான அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்குத் தேர்வு நடத்துவது என்பது சரியான ஒப்பீட்டு முறையாக இருக்காது.அது சமநிலை அற்றது, சமத்துவம் மற்றும் சமநீதி போன்றவற்றைத் தவிர்த்திடக் கூடியது. நுழைவுத் தேர்வு இன்றி, +2 மார்க் அடிப்படையில் தமிழ்நாடு கடைப்பிடித்த மருத்துவப் படிப்பிற்கான அனுமதி என்பது பரவலான நியாயமான சமவாய்ப்பையும், அதிக நெருக்கடி இல்லாத சூழலையும் மாணவர்களுக்கு உருவாக்கி, அவர்களைத் தரமான திறமையான மருத்துவர்களாக உருவாக்கியது. அதற்கு மாற்றாக, மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வை அதிகப்படுத்தி, எளிய மாணவ-மாணவியரின் மருத்துவக் கனவைச் சிதைத்துக் கொண்டிருக்கிறது நீட் தேர்வு. அத்துடன், மாநிலக் கல்வி முறையையும் சீரழிக்கிறது.

கல்வியை,பொதுப்பட்டியலில் இருந்து மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வரும்போதுதான் இத்தகைய ஏற்றத்தாழ்வுகள் நீங்கும். சொந்த மாநிலத்தில் மாணவர்களின் கல்விக் கனவு நிறைவேறும். முக்கியமாகச் செய்ய வேண்டிய அதை விடுத்து முன்னேறிய பிரிவினருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீட்டை நடைமுறைப் படுத்துவதில் மத்திய அரசு தேவையில்லாத வேகம் காட்டுவது சமூக ஏற்றத் தாழ்வுகளை அதிகமாக்கிவிடும்.

அதனால், நீட் தேர்வை ரத்து செய்வதற்கான சட்டப்பூர்வமான நடவடிக்கையை மேற்கொண்டு, நீட் தேர்வே இல்லாத நிலையை உருவாகக் வேண்டியது மத்திய அரசின் கடமையாகும். அனைத்து மாநிலங்களின் நலனும் பாதுகாக்கப்படும் என்கிற மோடி அரசு, தமிழ்நாட்டு மக்கள் நீட் தேர்வு ரத்து என்கிற வாக்குறுதிக்கு ஆதரவாக வாக்களித்திருப்பதை மனதில் கொண்டு, செயல்பட வேண்டியது கட்டாயமாகிறது.

நீட் தேர்வை ரத்து செய்யவும், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வரவும் தி.மு.க., நாடாளுமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் தொடர்ந்து பாடுபடும்; போராடும்!” என தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories