
ஒன்றியத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே மக்கள் விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறது. மேலும் மக்களுக்கு தேவையானவற்றை கொடுக்காமல், மக்களை வஞ்சிக்கும் நோக்கில் பல்வேறு அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறது. அதோடு பாஜக ஆளாத மாநிலங்களை குறிவைத்து நிவாரணம் உள்ளிட்ட நல்ல திட்டங்களை வழங்காமல் ஓரவஞ்சனை காட்டி வருகிறது.
இதற்கு தொடர்ந்து மக்கள் மத்தியிலும், எதிர்க்கட்சிகளும் கண்டனம் எழுந்து பல்வேறு போராட்டங்கள் முன்னெடுத்தப்பட்டபோதிலும், பாஜக திருந்தவில்லை. இந்த சூழலில் SIR என்று சொல்லப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை, பீகாரில் நடத்தியது பாஜக கைப்பாவையாக இருக்கும் இந்திய தேர்தல் ஆணையம். இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியபோதிலும், தேர்தல் ஆணையம் தொடர்ந்து மேற்கொண்டது.

இதைத்தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட வாக்காளர் பட்டியல்படி, பீகாரில் பல லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்களில் தற்போது தேர்தல் ஆணையம் SIR பணிகளை தொடங்கியுள்ள நிலையில், இதற்கு தமிழ்நாடு முழுவதும் கண்டனங்கள் வலுத்து வருகிறது.
அதோடு 12 மாநிலங்களிலும் SIR பணிகள் வெறும் ஒரு மாதத்திலேயே நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ள நிலையில், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) அதிகாரிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். இதன் காரணமாக SIR பணிகள் தொடங்கிய சில நாட்களிலேயே மேற்கு வங்கத்தில் BLO அதிகாரிகள் புகார் தெரிவித்தனர்.

இருப்பினும் தொடர்ந்து இதையே தேர்தல் ஆணையம் செய்து வரும் நிலையில், புதுப்புது உத்தரவு பிறப்பித்து பணிச்சுமையை அதிகரிப்பதாக தேர்தல் ஆணைய ஆலோசனைக் கூட்டத்திலேயே BLO அதிகாரிகள் கடந்த நவ.15-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த சூழலில் கடந்த நவ.16-ம் தேதி கேரளாவில் உள்ள அனீஷ் ஜார்ஜ் (41) என்ற BLO அதிகாரி ஒருவர் பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்துகொண்டார்.
இந்த விவகாரத்தை தொடர்ந்து கேரளாவில் போராட்டம் நடைபெற்ற நிலையில், தற்போது ராஜஸ்தானிலும் அரசு அலுவலர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் பகுதியில் அமைந்துள்ள நரி கா பாஸ் என்ற பகுதியை சேர்ந்த முகேஷ் ஜாங்கிட் (45) என்பவர் அரசுப் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த சூழலில் BLO அதிகாரியாக பணியாற்றி வந்த இவர், நாளொன்றுக்கு அதிக நேரம் வேலை செய்ததாக கூறப்படுகிறது.

மேலும் நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையில் விண்ணப்பங்களை வழங்காவிட்டால், பணி நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மேலதிகாரிகள் மிரட்டல் விடுத்ததாகவும், அதோடு தினமும் 100 வீடுகளுக்கு சென்று விண்ணப்பங்களை வழங்க வேண்டும் என்று அதிகாரிகள் அழுத்தம் கொடுத்துள்ளனர். இதன் காரணமாக நேற்று (நவ.17) பிந்தயாகா என்ற பகுதியில் உள்ள இரயில்வே கிராசிங்கில் இரயில் வந்துகொண்டிருந்தபோது, BLO அதிகாரி முகேஷ் ஜாங்கிட் இரயில் முன் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
BLO அதிகாரியின் தற்கொலையை தொடர்ந்து ஆசிரியர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். மேலும் வேலைப்பளுவை குறைக்க வேண்டும் என்றும் தலைமை தேர்தல் அதிகாரிக்கு மனு அளித்துள்ளனர். SIR வேலைப்பளு காரணமாக அரசுப் பள்ளி ஆசிரியர் ஓடும் இரயில் முன் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.








