
செக்கிழுத்த தியாகச் செம்மல் ! கப்பலோட்டிய தமிழன்! வ.உ.சிதம்பரனார் அவர்கள், தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரத்தில் உலகநாதன் பிள்ளை - பரமாயி அம்மையார் தம்பதியருக்கு 5.9.1872 அன்று மகனாகப் பிறந்தார்கள். ஒட்டப்பிடாரத்தில் அடிப்படைக் கல்வியையும், தூத்துக்குடியில் உயர்நிலைக் கல்வியையும், சட்டக் கல்வியைத் திருச்சியிலும் பயின்று வழக்குரைஞர் ஆனார்கள்.
வ.உ.சிதம்பரனார் சமூக சேவையிலும் அரசியல் பணியிலும் படிப்படியாகத் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார்கள். தாய் நாட்டின் விடுதலைக்காகத் தமிழ்நாட்டிலிருந்து பாடுபட்ட தலைவர்களில் முதன்மையானவராகத் திகழ்ந்தார்.
அரசியல் வாழ்க்கையில் பாலகங்காதர திலகரைத் தமது குருவாக ஏற்றுக் கொண்டு ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை அடியோடு ஒழித்திடப் பாடுபட்டார். ஆங்கிலேயரின் கப்பல் வாணிகத்தை முறியடித்திட அரசியல் ரீதியாகவும், வணிக ரீதியாகவும், தூத்துக்குடியில் "சுதேசி நாவாய்ச் சங்கம்" என்ற கப்பல் நிறுவனத்தைத் தொடங்கினார். இதனாலேயே “கப்பலோட்டிய தமிழன்” எனப் பெயர் பெற்றார்.
வ.உசிதம்பரனாரின் சுதந்திரப் போராட்ட நடவடிக்கைகளால் கோபமடைந்த ஆங்கிலேயர்கள், அரசாங்கத்தை அவமதித்ததாகவும், சுதந்திரத்திற்காகப் பொதுமக்களைத் தூண்டியதாகவும் அவர் மீது வழக்குகள் பதிவு செய்து, இரட்டை ஆயுள் தண்டனை விதித்தார்கள்.து. இதன் காரணமாக, 1908ஆம் ஆண்டு கோவை சிறையில் அடைத்தும் வ.உ.சி அவர்களைச் செக்கிழுக்க வைத்தார்கள்.
தமிழ்நாட்டு மக்களால் பெரிதும் போற்றப்படும் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. பல்வேறு இன்னல்களுக்கு இடையிலும், தாய்மொழியான தமிழ்மொழி மீது கொண்டிருந்த தணியாத பற்றின் காரணமாக பல அரிய நூல்களைப் படைத்தார். சுயசரிதையைக் கவிதை வடிவில் எழுதினார். திருக்குறளுக்கு உரை எழுதினார். தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டார்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தூத்துக்குடியில் வ.உ.சி அவர்களுக்குச் சிலை நிறுவி 5.9.1972 அன்று பிரதமர் இந்திரா காந்தி அவர்களை அழைத்துத் திறந்து வைத்தார்கள். அப்போது, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பிரதமரிடம் விடுத்த வேண்டுகோளின்படி, 1975 முதல் 1976 வரை தூத்துக்குடியில் கட்டிமுடிக்கப்பட்ட 4 கப்பல் தளங்களுக்கு ஒன்றிய அரசினால் செக்கிழுத்த செம்மல் வ.உ.சி அவர்களின் பெயர் சூட்டப்பட்டது. 1998ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் எழுதிய 16 நூல்களும் அரசுடைமையாக்கப்பட்டன.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், 3.9.2021 அன்று சட்டப்பேரவையில் வெளியிட்ட அறிவிப்பின்படி, நம் தேசத்தின் விடுதலைக்காகத் தம்மையே அர்ப்பணித்தும் அயராது பாடுபட்டும், தாய் நாட்டிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்து, மறைந்தும் மக்களின் மனங்களில் என்றும் நிறைந்தும் வாழ்கின்ற, கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார் அவர்களின் 89ஆவது நினைவு நாளான நவம்பர் 18 அன்று “தியாகத் திருநாள்” தமிழ்நாடு அரசின் சார்பில் கடைப்பிடிக்கப்பட்டுப் போற்றப்படுகிறது.

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தவை பின்வருமாறு,
“திராவிட மாடல் அரசும் வ.உ.சிதம்பரனாரும்...
கப்பலோட்டிய தமிழரின் 150-ஆவது பிறந்தநாள் பெருவிழாவாகக் கொண்டாடப்பட்டது!
வ.உ.சி. பெயரில் 5 லட்ச ரூபாய் பரிசுத்தொகையுடன் சிறப்பு விருது அறிவிப்பு!
கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் வ.உ.சி. அவர்களின் சிலை திறப்பு & அவர் சிறையில் இழுத்த செக்கு பொலிவூட்டப்பட்டது!
கோவை வ.உ.சி. பூங்காவில் திருவுருவச் சிலை திறப்பு!
வ.உ.சி. அவர்களின் 150-ஆவது ஆண்டில் நெல்லை, தூத்துக்குடியில் உருவாகும் அனைத்துக் கட்டடங்களுக்கும் அவரது பெயர் சூட்டல்!
வ.உ.சி. அவர்களின் 85-ஆவது நினைவு நாள் 'தியாகத் திருநாள்'!
தூத்துக்குடி மேற்கு பெரிய காட்டன் சாலை வ.உ.சி. சாலை எனப் பெயர் மாற்றம்!
வ.உ.சி. அவர்களின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் நகரும் புகைப்படக் கண்காட்சி!
வ.உ.சி. பன்னூல் திரட்டு, வ.உ.சி. திருக்குறள் உரை, வ.உ.சி. 150 சிறப்பு மலர் & மடிப்பேடு வெளியீடு!
வ.உ.சி. அவர்கள் எழுதிய நூல்கள், கையெழுத்துப் பிரதிகள் மின்னுருவாக்கம் செய்யப்பட்டு சிறப்பு இணையப் பக்கம் உருவாக்கம்!
1908 திருநெல்வேலி எழுச்சி-க்கு நினைவுச் சின்னம் அறிவிப்பு!
- எனத் தம் உயிரையும் உணர்வையும் தமிழுக்காகவும் இந்திய விடுதலைக்காகவும் அளித்த தியாகத் திருவுருவான வ.உ.சி அவர்களின் பெருமையை அனைத்து வகையிலும் போற்றி வரும் நமது திராவிட மாடல் அரசின் சார்பில் செக்கிழுத்த செம்மல் வ.உ.சி. அவர்களின் நினைவுநாளில் அவரை வணங்கிப் போற்றுகிறேன்! வாழ்க வ.உ.சி.!”








