
பீகாரில் 243 சட்டசபை தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சி தலைவர்கள் வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
முதல்கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், 18 மாவட்டங்களில் உள்ள 121 தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதல்கட்ட தேர்தலில் மொத்தம் ஆயிரத்து 192 ஆண்கள், 122 பெண்கள் என ஆயிரத்து 314 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 2-ம் கட்டமாக 123 தொகுதிகளுக்கு 11-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இரண்டு கட்ட தேர்தலிலும் பதிவாகும் வாக்குகள் நவம்பர் 14-ம் தேதி எண்ணப்பட உள்ளது.
இந்த நிலையில், முதற்கட்ட தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும் பதற்றமான தொகுதிகளில் துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். முதல் தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் 16 தொகுதிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்த தேர்தலில் இந்தியா கூட்டணிக்கும், பா.ஜ.க கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இத்தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்றும், முதலமைச்சராக தேஜஸ்வி பதவி ஏற்பார் என கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகிறது.






