சுதந்திர இந்தியா தொடங்கி தற்போது வரை எல்லா வகையிலும் முன்னேறிய மாநிலங்களாக தென் மாநிலங்கள் விளங்குகிறது.
அந்த வளர்ச்சி மக்களிடம் ஏற்படுத்தியுள்ள விழிப்புணர்வால் பாஜகவிற்கு தென் மாநிலங்களை கண்டால் எப்போதும் எரிச்சல் தான்.
அதன் ஒரு பகுதியாக தான் தென் மாநிலங்களின் தொகுதி எண்னிக்கையை குறைத்து நாடாளுமன்றத்தில் எம்.பி-க்களின் பலத்தை சீர்குலைக்க ஒன்றிய அரசு தீட்டியிருக்கும் சதி திட்டம் தான் தொகுதி மறுவரையறை !
தொகுதி மறுவரையறையின் ஆபத்தை முதலில் அனைவருக்கும் உணர்த்தி எதிர்ப்பு நடவடிக்கையை முதலில் துவங்கியது தமிழ்நாடு தான்.
திராவிட மாடல் ஆட்சி நடத்தி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ”தொகுதி மறுவரையறை என்னும் கத்தி தென் மாநிலங்களின் தலைக்கு மேல் தொங்கிக்கொண்டிருக்கிறது” அதை நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
வரலாற்று ரீதியாக இந்த தொகுதி மறுவரையறை 1952, 1963 மற்றும் 1973 ஆகிய ஆண்டுகளில் ஏற்கெனவே நடத்தப்பட்டுள்ளன.
பின்னர் 1976ஆம் ஆண்டில் 42வது சட்டத் திருத்தத்தின் மூலம் இந்தியாவின் தொகுதி மறுவரையறையை 25 ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
மேலும் இந்த திட்டத்தின் படி, மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் மாநிலங்களை தொகுதி மறுவரையறை மூலம் தண்டிக்கக் கூடாது என முடிவு எடுக்கப்பட்டது. பின்னர் வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் தொகுதி மறுவரையறை 2026 ஆம் ஆண்டுவரை நீட்டிக்கப்பட்டதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பின்னர் 2001 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்த போது, மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை மேற்கொண்டால் தங்களது பிரதிநிதித்துவம் குறைந்து விடும். இது நியாயமற்றது என தென் மாநிலங்கள் கடுமையாக எதிர்த்தது. தென் மாநிலங்களின் நியாயமான வலுவான குரலுக்கு அன்றைய ஒன்றிய அரசு பணிந்ததால் அவற்றை முடக்கியது.
இந்நிலையில் வாஜ்பாய் நீட்டித்த முடக்கம் 2026 ஆம் ஆண்டோடு முடிவடைய இருப்பதால் தொகுதி மறுவரையறையை செய்ய ஒன்றிய பாஜக அரசு முன்வந்துள்ளது. இது அரசியலமைப்பின் படி நடக்க வேண்டிய ஒன்றாக இருந்தாலும் இதனை நடைமுறைப்படுத்த வேண்டிய இடத்தில் இருப்பவர்கள் யார் என்பதை கொண்டே இதனை முடிவு செய்ய வேண்டியுள்ளது.
குறிப்பாக மக்கள் தொகை புள்ளிவிவரங்களின் அடிப்படையில், தொகுதி மறுவரையறையை மேற்கொள்ள கடுமையாக ஆட்சேபணை தெரிவிக்க முக்கிய காரணம், அது நாடாளுமன்றத்தில் தென் மாநிலங்களில் எம்.பி.க்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை வெகுவாக குறைத்திடும் என்பதே ஆகும்.
அதுமட்டுமல்லாது மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களுக்கு, இது தண்டனையாக அமையும் என்பதால் இதனை செயல்படுத்த தற்போது எதிர்ப்பு கிளம்பியுள்ளது, கல்வி மற்றும் பொருளாதரத்தில் சிறந்த இடத்தை தமிழ்நாடு அடைய மக்கள் தொகைக் கட்டுப்பாடு மிக முக்கிய காரணங்களில் ஒன்றாகும். மக்கள் தொகை கட்டுப்படுத்தும் இலக்கு இந்தியா முழுவதும் அறிவிக்கப்பட்ட போது தமிழ்நாடு அதனை உறுதியோடு கடைபிடித்தது. ஆனால் இந்த இலக்கில் எல்லா மாநிலங்களும் முழுமையாக ஆர்வம் காட்டவில்லை.
இதனால் ஒவ்வொரு மாநிலமும் வெறுபட்ட மக்கள் தொகை அடிப்படையில் காணப்பட்டன. மக்கள் தொகை கட்டுப்படுத்திய மாநிலங்களில் மட்டுமே மனிதவளக்குறியீடு, ம்க்கள் நலத் திட்டங்கள் மற்றும் பொருளாதார மேம்பாடு முன்னேறின. இது நாட்டிற்கு பெரும் துணையாக இருந்தது. இத்தகைய பெரும் பங்களிப்பை நாட்டிற்கு கொடுத்த மாநிலங்களில் சுயநல அரசியல் லாபத்திற்காக பழிவாங்க துடிக்கிறது ஒன்றிய பாஜக அரசு.
அதாவது தொகுதி மறுவரையறையையும், 2026ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கும் உள்ள இணைத்து தனது தந்திர அரசியலை செய்ய துடிக்கிறது பாஜக. கடந்த 2021ஆம் ஆண்டு நடக்கவிருந்த மக்கள் தொகை கணக்கெடுப்பை கொரோனா காரணம் காட்டி ஒன்றிய பாஜக அரசு நிறுத்தி வைத்தது.
2026ஆம் ஆண்டு நடக்கும் மக்கள் தொகை எண்ணிக்கையில் தொகுதிகளை மறுவரையறை செய்தால் தென்மாநிலங்களில் உள்ள தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா ஆலிய மாநிலங்கள் தலா 8 தொகுதிகளையும், கர்நாடகா 2 தொகுதிகளையும் இழக்கும். அதேபோல், பஞ்சாப், ஒடிசா, மேற்கு வங்கம், இமாச்சலப்பிரதேசம் மற்றும் உத்தர கண்ட் கூட சில இடங்களை இழக்கும். ஆனால் அதேவேளையில் மக்கள் தொகையை கட்டுபடுத்த உத்தரப் பிரதேசம், பீகார், ராஜஸ்தான் மாநிலங்களில் இப்போதிருப்பதிலிருந்து கூடுதலாக 27 தொகுதிகள் அமையும். இதில் என்ன நியாயம் இருக்கிறது?
இந்நிலையில், மக்கள் தொகை கணக்கெடுப்புப் புள்ளி விவரங்களின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செயல்முறைக்கு எதிர்ப்பு எழுந்த பின்னர் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒரு விளக்கத்தை தருகிறார். அதாவது, எந்த தென் மாநிலங்களும் எந்த இடங்களையும் இழக்காது; கூடுதல் இடங்களை மட்டுமே பெறும் என்கிறார்.
அவர் சொல்வதில் இருந்து பார்த்தாலும் விகிதாச்சாரக் கணக்கீடு தற்போதைய இடங்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டதா அல்லது சமீபத்திய மக்கள்தொகை புள்ளி விவரங்களை அடிப்படையாகக் கொண்டதா என்பதை அவரும் தெளிப்படுத்த வில்லை. ஒன்றிய அரசின் அறிக்கையும் தெளிவுப்படுத்தவில்லை.
இதனால் நமது மக்களாட்சியின் அடித்தளமே ஆபத்தில் இருக்கும்போது, இதுபோன்ற தெளிவற்ற உத்தரவாதங்களை நாம் ஏற்கமுடியுமா? நமது மாநிலங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருக்கும் போது, நம்முடன் ஒளிவுமறைவற்ற வெளிப்படையான பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டாமா? என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதுமட்டுமல்லாது இவ்விவகாரத்தில் தென் மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் மேற்கு வங்கம், ஒடிசா மற்றும் பஞ்சாப் மாநிலங்களின் முக்கிய அரசியல் கட்சிகளின் கூட்டத்தை கூட்டி அடுத்தக்கட்ட நகர்வை தொடங்கி இருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
நாடாளுமன்றத்தில் தற்போதைய பிரதிநிதித்துவத்தை சதவீத அடிப்படையில் பாதுகாத்திடும் வகையில் உரிய தீர்வுகளை இணைந்து உருவாக்கவேண்டும் என பொதுவான நிலைப்பாட்டையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்வைத்துள்ளார்.