நீட் மருத்துவ மேற்படிப்பு முறைகேடு தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பர்திவாலா, மகாதேவன் அமர்வு சில வழிகாட்டி நெறிமுறைகளை பரிந்துரைத்து வெளியிட்டுள்ளது.அதில், தேசிய அளவில் கலந்தாய்வு அட்டவணை வெளியிட வேண்டும், தேசிய மற்றும் மாநில சுற்றுகள் குறித்து நவீன தொழில்நுட்ப உதவியுடன் கலந்தாய்வு அட்டவணை தயாரித்து வெளியிட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தனியார், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் கலந்தாய்வு கட்டணம், கல்வி கட்டணம், மாணவர் விடுதி கட்டணம், வைப்புத்தொகை உள்ளிட்ட அனைத்து கட்டணங்களையும் வெளிப்படையாக வெளியிட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. தேசிய அளவில் ஒருமைப் படுத்தப்பட்ட கட்டண ஒழுங்குமுறை கட்டமைப்பை தேசிய மருத்துவ ஆணையம் நிறுவ வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
இரண்டாவது சுற்று கலந்தாய்வு முடிந்த பிறகு அடுத்த கலந்தாய்வை தொடங்காமல் மாணவர்கள் வேறு கல்லூரிகளுக்கு செல்வதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் நுழைவுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களை வெளிப்படத் தன்மையுடன் வெளியிட வேண்டும். தவறிழைக்கும் கல்லூரிகளுக்கு கடுமையாக தண்டனை விதிக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
நீட் கலந்தாய்வில் இருந்து விலக்கப்பட வேண்டும், தொடர்ந்து தவறு செய்யும் கல்லூரிகளை கருப்பு பட்டியலில் சேர்க்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளது.
நீட் முறைகேட்டில் ஈடுபடும் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், அனைத்து மாநிலங்களிலும் ஒரே மாதிரியான கலந்தாய்வு நடைமுறையை பின்பற்ற வேண்டும், மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கை கலந்தாய்வை மேற்பார்வையிட மூன்றாம் தரப்பு தணிக்கை முறையை ஏற்படுத்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.