பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் இறங்கிய இந்தியா, கர்னல் சோபியா குரேஷி தலைமையிலான படைகள் மூலம் தாக்குதல் நடத்தியது. ஆபரேசன் சிந்தூர் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலை குறிப்பிட்ட பா.ஜ.க ஆளும் மத்திய பிரதேச பழங்குடியினர் துறை அமைச்சர் விஜய் ஷா, தீவிரவாதிகள் மற்றும் கர்னல் சோபியா குரேஷியை மதரீதியாக ஒப்பிட்டு பேசினார்.
இதற்கு கண்டனம் தெரிவித்த மத்திய பிரதேச மாநில உயர் நீதிமன்றம், விஜய் ஷா மீது, 4 மணி நேரத்தில் வழக்குப் பதிந்து, பி.என்.எஸ். சட்டம் 152ன்படி விசாரிக்க வேண்டும் என காவல் துறைக்கு உத்தரவிட்டது. இதனை அடுத்து மத்திய பிரதேச பாஜக அமைச்சர் விஜய் ஷா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மத்தியப்பிரதேச உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை கோரியும், முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வேண்டுமெனவும் அமைச்சர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது உயர்நீதிமன்ற உத்தரவுக்கும், எஃப்.ஐ.ஆர். மீது தடை விதிக்கவும் நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர். அமைச்சராக இருக்கும் ஒருவர் இவ்வாறு பொறுப்பற்ற முறையில் கருத்துகளை தெரிவிக்கக் கூடாது என கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தனர்.