உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா ஓய்வைத் தொடர்ந்து, புதிய தலைமை நீதிபதியாக பூஷன் ராமகிருஷ்ணா கவாய் என்றும் பி.ஆர்.கவாய் இன்று பதவியேற்றார்.
உச்ச நீதிமன்றம் தொடங்கப்பட்ட 75 ஆண்டுகளில் தலைமை நீதிபதியாக பதவி ஏற்கும் இரண்டாவது பட்டியல் பிரிவு நீதிபதி பி.ஆர்.கவாய் ஆவார். முதல் பட்டியல் பிரிவு நீதிபதியாக நியமிக்கப்பட்ட கே.ஜி.பாலகிருஷ்ணன் 2007 ஆம் ஆண்டு முதல் 3 ஆண்டுகள் தலைமை நீதிபதியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
யார் இந்த பி.ஆர்.கவாய்?
மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் 1960 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிறந்தார் கவாய். இவரது தந்தை ஆர்.எஸ். கவாய் கேரளா, பீகார் மாநில ஆளுநராக இருந்துள்ளார். அமராவதியில் பள்ளி படிப்பை முடித்துவிட்டு, மும்பைக்கு சட்டம் படிக்க சென்றார்.
சட்டப்படிப்பை முடித்து விட்டு, பம்பாய் உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் பிரிவில் வழக்கறிஞராக தனது பணியை தொடங்கினார். பின்னர் நாக்பூர் பெஞ்சில் அரசு வழக்கறிஞராக பதவி வகித்தார்.
இதனைத் தொடர்ந்து 2003 ஆம் ஆண்டு உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் இரண்டு ஆட்டுகள் கழித்து மும்பை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக பணியாற்றினார். இதற்கு அடுத்து 2019 ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார்.
தேர்தல் பத்திரத் திட்டம் அரசியலமைப்பிற்கு விரோதமானது என்ற உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் ஐந்து நீதிபதிகளில் நீதிபதி பி.ஆர். கவாய் ஒருவராக இருந்தார். அதேபோல் உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் மாநிலங்களில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் வீடுகளை இடிப்பது தொடர்பான வழக்கில், வீடுகளை இடித்து அழிப்பது சட்டவிரோதமானது என கண்டித்தவர் நீதிபதி கவாய்.
இப்படி வழக்கறிஞர், உயர்நீதிமன்ற நீதிபதி, உச்சநீதிமன்ற நீதிபதி என பல முக்கிய வழக்குகளில் வாதாடியும் தீர்ப்புகளையும் வழங்கி இருக்கிறார். தற்போது இவர் உச்சநீதிமன்றத்தின் 52 ஆவது தலைமை நீதிபதியாக பதவியேற்று இருக்கிறார்.