குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள திமாலியாவாத் பகுதியில் ஜெயின் ஆலயம் ஒன்று இருக்கிறது. இந்த ஆலயத்தில் துறவியாக இருந்த சாந்தி சாகர் (57) என்பவரின் பிரசங்கத்தை கேட்பதற்காக அங்கிருப்பவர்கள் அடிக்கடி அந்த ஆலயத்துக்கு வருவர். இந்த சூழலில்தான் கடந்த 2017-ம் ஆண்டு சாந்தி சாகரின் பிரசங்கத்தைப் பார்ப்பதற்காக வதோதராவில் இருந்து ஒரு குடும்பம், தங்கள் மகளான 19 வயது கல்லூரி மாணவியுடன் சென்றிருந்தனர்.
அப்போது, விசேஷ பிரசங்கம் இரவில் இருக்கும் என்றும், அதுவரை மடத்திலேயே தங்குங்கள் என்றும் அந்த குடும்பத்திடம் கூறவே, அவர்களும் அதற்கு ஒப்புக்கொண்டுள்ளனர். தொடர்ந்து ஒரு விசேஷ சடங்கு இருப்பதாக அந்த குடும்பத்தினரிடம் கூறிய சாந்தி சாகர், அந்த மாணவியை மட்டும் தனியாக அழைத்து சென்றுள்ளார்.
மேலும் அந்த குடும்பத்தினரை தனி தனி அறையில் இருக்க வைத்து ஒரு வட்டம் போட்டு அதில் அமரச்செய்து மந்திரங்களை உச்சரிக்குமாறும், தன்னுடைய அனுமதியின்றி வெளியே வரக்கூடாது என்றும் கூறியுள்ளார். இதையடுத்து அந்த பெண்ணை தனியாக அழைத்து சென்ற சாந்தி சாகர், "நான் சொல்வதை கேட்கவில்லை என்றால், உனது குடும்பத்தினர் இறந்துவிடுவர்" என்று மிரட்டியுள்ளார்.
தொடர்ந்து அந்த பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் தான் எப்போது அழைத்தாலும் வரவேண்டும் என்றும் கூறி மிரட்டிய அவர், இதனை வெளியே சொன்னால் அந்த பெண்ணின் பெற்றோர் உயிருக்கு ஆபத்து என்றும் எச்சரித்துள்ளார். இதனால் பயந்துபோன அந்த பெண் யாரிடமும் கூறவில்லை.
இதையடுத்து தனது வீட்டுக்கு சென்றவுடன் அந்த பெண்ணின் உடல்நிலை பாதிப்படைந்துள்ளது. இதையடுத்து விசாரிக்கும்போதே சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. தொடர்ந்து குடும்பத்தினர் உதவியுடன் பாதிக்கப்பட்ட பெண் இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து கடந்த 2018-ம் ஆண்டு சூரத் மாவட்ட நீதிமன்றத்தில் காவல்துறையினர் குற்றப்பத்திரிகையை சமர்ப்பித்தனர். அவர்கள் 51 சாட்சிகளின் வாக்குமூலங்களைப் பதிவு செய்தனர், மேலும் குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் பாதிக்கப்பட்டவரின் மருத்துவச் சான்றிதழ்கள் மற்றும் சிசிடிவி காட்சிகள் உட்பட 62 ஆவண ஆதாரங்களைச் சமர்ப்பித்ததோடு, பல ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இருந்த சாந்தி சாகரின் மொபைல் போனும் சமர்ப்பிக்கப்பட்டது. அதோடு பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலம், மருத்துவ அறிக்கை, 32 சாட்சிகளின் வாக்குமூலம் ஆகியவற்றின் மூலம் துறவி சாந்தி சாகர் குற்றவாளி என்பது உறுதியானது.
இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்து வந்த சூரத் மாவட்ட கூடுதல் நீதிமன்றம், சமண துறவி சாந்தி சங்கருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.25,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் சாந்தி சாகர் சிறையில் இருப்பதால் அவருக்கு இன்னும் இரண்டரை ஆண்டுகள் மட்டுமே சிறைத் தண்டனை மீதமுள்ளது குறிப்பிடத்தக்கது.