இந்தியாவில் மும்பை ஒரு முக்கிய நகரமாக பார்க்கப்படுவதால், அங்கு பல்வேறு மாநிலத்தவர் பணி நிமித்தம் காரணமாக வசித்து வருகின்றனர். குறிப்பாக வட இந்தியர்கள் பெரும்பாலும் மும்பை போன்ற முக்கிய பகுதிகளில் குடியிருப்பதால், அங்கே மராத்தியர்களுக்கு உள்ள உரிமைகள் பறிக்கப்பட்டு வருவதாக பல ஆண்டுகளாக குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது.
இது ஒரு படி மேலே போய், மராத்திய மண்ணில் மரத்தியர்களுக்கு வீடுகள் கொடுக்க மாட்டோம் என்று அறிவிப்பு பலகை வைத்த சம்பவங்கள் எல்லாம் அரங்கேறின. சொந்த மண்ணில் மராத்தியர்கள் புறக்கணிக்கப்படுவதற்கு பலரும் கண்டன குரல்கள் எழுப்பினாலும், இது தொடர்ந்து நடைபெற்றுதான் வருகிறது. அப்படி ஒரு சம்பவம்தான் இப்போதும் நிகழ்ந்துள்ளது.
மும்பையின் கல்யாண் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பலரும் வசித்து வருகின்றனர். அதில் மராத்திய குடும்பமான தீரஜ் தேஷ்முக் - கீதா தம்பதி வசித்து வரும் நிலையில், அங்குள்ள பொதுவான இடத்தில் அகர்பத்தியை கொளுத்தி வைத்துள்ளார். அப்போது அந்த பத்தியில் இருந்து வெளியேறிய புகை, அருகில் வசிக்கும் அகிலேஷ் சுக்லா என்பவர் வீட்டுக்குள் சென்றதால் அவர்கள் வெளியே வந்து இந்த குடும்பத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வாக்குவாதத்தில் சுக்லா குடும்ப உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து, தீரஜ் குடும்பத்தினர் மீதும், மராத்தியர்கள் மீதும் கடும் விமர்சனங்கள் வைத்துள்ளனர். இதில் வாக்குவாதம் முற்றிப்போன நிலையில், தீரஜ் குடும்பத்தினர் தங்கள் வீட்டுக்குள் சென்றனர். ஆனால் சிறிது நேரத்திலேயே அங்கிருந்த மற்றவர்களும் அகிலேஷ் சுக்லாவுடன் சேர்ந்து தீரஜ் தேஷ்முக் வீட்டின் கதவை தட்டியுள்ளனர்.
அவர்கள் திறந்து பார்த்தபோது, தீரஜ் மற்றும் அவரது சகோதரரை வெளியே இழுத்து வந்து கடுமையாக அடித்து உதைத்து தாக்கியுள்ளனர். மேலும் தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்துக் காட்டி மிரட்டியுள்ளார் அகிலேஷ் சுக்லா. இந்த மோதலில் தீரஜ் சகோதரர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. கடந்த டிச.18-ம் தேதி நடந்த இந்த கடுமையான சண்டை குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது பாதிக்கப்பட்ட மராத்தியர் தீரஜின் சகோதரர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், இதுகுறித்து போலீசில் பாதிக்கப்பட்ட தீரஜ் புகார் அளித்துள்ளார். ஆனால் குற்றம்சாட்டப்பட்ட அகிலேஷ் சுக்லா, மகாராஷ்டிரா தலைமைச் செயலகத்தில் பணிபுரிந்து வருவதால் போலீசார் முதலில் இந்த வழக்கைப் பதிவு செய்யவில்லை.
இதையடுத்து இதுகுறித்து தனது சமூக வலைதளத்தில் பாதிக்கப்பட்ட தீரஜ் வெளியிட்ட பதிவின் எதிரொலியால், போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனிடையே வீடியோ வைரலானதால் அகிலேஷ் சுக்லா தானாக முன்வந்து போலீஸில் சரணடைந்துள்ளார். இது தவிர போலீஸார் மேலும் இரண்டு பேரை கைது செய்துள்ளனர். மேலும் பலரை தேடி வருகின்றனர்.
தற்போது மகாராஷ்ட்ரா சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், இந்த சம்பவம் குறித்து விவாதிக்கப்பட்டது. மராத்தியர்களுக்கு சொந்த மண்ணில் பாதுகாப்பு இல்லை என்று உறுப்பினர்கள் குற்றம்சாட்டிய நிலையில், மராத்தி குடும்பத்தை தாக்கிய அகிலேஷ் சுக்லா அரசு பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுவார் என்றும், மராத்தியர்களுக்கு எதிரான எந்தவிதமான தாக்குதலையும் அரசு பொறுத்துக்கொள்ளாது என்றும் அம்மாநில பாஜக முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.