நாடாளுமன்றத்தில் அரசியல் சாசனத்தின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று மாநிலங்களவையில் ரசியல் சாசனத்தின் மீதான விவாதத்தில் தி.மு.க MP திருச்சி சிவா பங்கேற்று பேசினார்.
அதன் விவரம் வருமாறு:-
”பாகிஸ்தான் பிரிக்கப்பட்டபோது இங்குள்ள இஸ்லாமியர்கள் ’இந்தியா’ எங்கள் நாடு என்று கூறி இங்கு தங்கினர். சுதந்திரம் பெறும்போது, இஸ்லாமியர்களுக்கு உரிய உரிமைகள் கொடுக்கப்படும் என கூறப்பட்டது. ஆனால் ஒன்றிய பா.ஜ.க ஆட்சியில் இஸ்லாமியர்கள் ஏமாற்றப்படுகிறார்கள்.
பெரியார், அண்ணா போன்றோரின் முன்னெடுப்பால் முதல் அரசியல் சாசனம் திருத்தம், இட ஒதுக்கீட்டுக்காக கொண்டு வரப்பட்டது. இன்று அரசியல் சாசனத்துக்கு எதிரான நடவடிக்கைகள் நடைபெறுகிறது. மாநில அரசுகளுக்கு உரிய உரிமைகளை ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது பறித்தும், நசுக்கியும் வருகிறது. ஒன்றிய பா.ஜ.க அரசின் நடவடிக்கையால் மாநில அரசுகள் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை.
மத்திய, மாநில உறவுகளை நிலை நாட்ட முத்தமிழறிஞர் கலைஞர்,நீதிபதி ராஜமன்னார் குழுவை அமைத்தார். இக்குழுவின் பரிந்துரை இன்றும் முக்கிய ஆவணமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. நிதி ஒதுக்கீட்டில் மாநிலங்களுக்கு இடையே அதிக பாகுபாடு காட்டப்படுகிறது. தமிழ்நாடு உயர்கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மிகவும் சிறப்பாக உள்ளது.
சுதந்திரத்துக்கு முன்பு ஆங்கிலம் மட்டும்தான் அலுவல் மொழியாக இருந்தது. பின்னர்தான் இந்தி சேர்க்கப்பட்டது. இந்தியா பல்வேறு கலாச்சாரம், மொழிகள், மதங்களைக் கொண்ட நாடு.நாடாளுமன்றத்தில் தற்போது அனைத்து மசோதாக்களும் இந்தியில் கொண்டு வரப்படுகிறது.
மொழிக் கொள்கைக்கு எதிராக ஒன்றிய அரசு செயல்படுகிறது. தமிழ்நாட்டில் இருமொழி கொள்கை தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகிறது. இந்தியா 22 மொழிகளைக் கொண்ட நாடு. ஆனால் எங்கு போனாலும் இந்தி மட்டும்தான் தெரிகிறது. இந்தியா பல மாநிலங்களின் ஒன்றியம். அதனை மறந்துவிடக்கூடாது. ஆனால் ஒன்றிய அரசு மாநில மொழிகளை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. இந்தி திணிப்பை ஒருபோதும் நாங்கள் ஏற்கமாட்டோம்.
இவ்வாறு திருச்சி சிவா எம்.பி தெரிவித்துள்ளார்.