
வைக்கம் போராட்டத்தில் தந்தை பெரியார் நூற்றாண்டு நிறைவு விழா இன்று கேரள மாநிலத்தின் வைக்கம் பகுதியில் நடைபெற்றது. இந்த விழாவில் துப்பிக்கப்பட்ட பெரியார் நினைவகம், நூலகம், அருங்காட்சியகத்தை முதலமைச்சர்கள் மு.க.ஸ்டாலின், பினராயி விஜயன் திறந்து வைத்து பார்வையிட்டனர்.
இதைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசின் வைக்கம் விருது கர்நாடகாவை சேர்ந்த சமூக ஆர்வலரும் எழுத்தாளருமான தேவநூர மஹாதேவா அவர்களுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். விருதோடு சேர்த்து ரூ.5 லட்சத்துக்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழை வழங்கினார்.
பின்னர் பேசிய கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்,”சமூகநீதியை பாதுகாக்கவும், சாதிய பாகுபாட்டை எதிர்க்கவும் தந்தை பெரியார் குடியரசு பத்திரிகையை நடத்தினார் வர்ணாசிரம கோட்பாடுகளை, பெரியார் தனது கொள்கைகளால் முறியடித்தார்.
சமூக நீதி எனும் மையப்பொருளைக் கொண்டு அனைவருக்கும் சமத்துவம், சுதந்திரம் போன்றவற்றை வலியுறுத்தினார். வைக்கம் போராட்டத்திற்கு தலைமைதாங்கி, அதில் தந்தை பெரியார் வெற்றி கண்டவர். சமூகநீதியை தனது வாழ்நாள் முழுவதும் வலியுறுத்தி வந்த தந்தை பெரியார், சமூகநீதி காவலராகத் திகழ்ந்தார்” என தெரிவித்துள்ளார்.








