அத்தியாவசியப் பொருட்களின் விலை அன்றாடம் உயர்ந்து வருவது குறித்து எந்த கவலையும் இல்லாமல் ஒன்றிய அரசு மெத்தனமா இருப்பதாக நாடாளுமன்றத்தில் தி.மு.க MP கே. ஆர். என். ராஜேஷ்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
இன்று மாநிலங்களவையில் பேசிய தி.மு.க MP கே. ஆர். என். ராஜேஷ்குமார்,"நுகர்வோருக்கு பொருட்கள் நியாய விலையில் கிடைப்பதை உறுதி செய்ய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என கேட்டுள்ளார். அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் தொடர்ந்து கண்காணிக்கவும் அவை லாபம் ஈட்டும் நோக்கில் பதுக்கப்படுகிறதா என அடையாளம் காணவும் வேண்டும் என கூறியுள்ளார்.
அத்தியாவசியப் பொருட்களுக்கான போக்குவரத்து செலவுகளை குறைக்கும் வகையில் விநியோகச் சங்கிலியின் செயல்திறனை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார்.
அதேபோல், நுண்ணூட்டச்சத்துக்கள் மற்றும் மூலப்பொருட்களின் மீதான ஜிஎஸ்டியை குறைத்திட வேண்டும் என தி.மு.க MP பி. வில்சன் மாநிலங்களவையில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து பேசிய பி. வில்சன் MP, "உரங்கள் மற்றும் ரசாயனங்கள் மீதான நிலைக்குழு பரிந்துரையின்படி மூலப்பொருட்கள் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் மீதான ஜிஎஸ்டியை குறைக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது.
மேலும் இறக்குமதியை குறைக்கவும் அதே நேரத்தில் தேவையை பூர்த்திசெய்யவும் உள்நாட்டில் உர உற்பத்தியை அதிகரிக்க அரசாங்கம் எடுத்திருக்கும் நடவடிக்கையின் விவரங்கள் வெளியிடவேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார்.