நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவ.25-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று மக்களவையில்,
நூறு நாள் வேலைத்திட்டம் என அறியப்படும் மகாத்மா காந்தி தேதிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடுகள் கணிசமாகக் குறைப்பு, மாநிலங்களுக்குத் தரவேண்டிய நிலுவைத் தொகை உள்ளிட்ட விவரங்கள் குறித்து திமுக எம்பியும், கழக மக்களவைக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த ஒன்றிய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான், இத்திட்டத்திற்கு இதுவரை இல்லாத அளவுக்கு 86 ஆயிரம் கோடி ரூபாய் நடப்பு நிதி ஆண்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், 2023-24 நிதி ஆண்டில், மாநிலங்களுக்குத் தர வேண்டிய நிலுவைத் தொகையான ரூபாய் 16,300 கோடி நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில் விடுவிக்கப்பட்டு விட்டதாகவும் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து மக்களவையில் நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய டி.ஆர்.பாலு,”திட்ட நிதி ஒதுக்கீடுகள் 2019 முதல் தேவையைவிடக் கணிசமாகக் குறைவாக இருப்பதையும்; பின்னர் நிதியாண்டின் இறுதியில்தான் திருத்திய பட்ஜெட்டில் உயர்த்தப்படுவது வாடிக்கையாக உள்ளது என்று கூறினார். உதாரணமாக, நிதியாண்டு 2021-22இல் 1 கோடியை 11 லட்சம் தேவைப்பட்ட நிலையில், பட்ஜெட்டில் 61 ஆயிரம் கோடி மட்டுமே அனுமதிக்கப்பட்டதாக சுட்டிக்காட்டினார். இவ்வாறு தேவைப்படும் நிதியை முழுமையாக ஆண்டின் தொடக்கத்திலேயே ஓதுக்கீடு செய்யாததால் நூறு நாள் வேலைத் திட்டப் பயனாளிகள் தங்களது ஊதியத் தொகையைப் பெறுவதில் தாமதம், மாநில அரசுகள் மீது நிதிச் சுமை போன்ற இடையூறுகள் ஏற்படுகின்றன. இதன் பொருட்டு, ஐக்கிய முற்போக்கு அரசினால் உருவாக்கப்பட்ட முன்னுரிமை திட்டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் செயல்படுத்தப்படுவதில் சுணக்க நிலை ஏற்படுகிறது.
மத்திய பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நூறு நாள் வேலைத்திட்டப் பயனாளிகளுக்கு வழங்கப்படும் தின ஊதியம் குறைவாக இருப்பதால் விவசாயத் தொழிலாளர்களுக்குத் தரப்படும் ஊதியத்துக்கு இணையாக கிடைத்திட வேண்டும்; அதற்காக ஒன்றிய அரசு என்ன நடவடக்கை எடுக்க உள்ளது" என வினவினார்.
இதற்கு பதிலளித்த இணையமைச்சர் சந்திரசேகர், தேவைப்பட்டால் மாநில அரசுகள் தங்கள் பொறுப்பில் ஊதியத்தை உயர்த்தித் தரலாம் என தெரிவித்துள்ளார்.