ஃபெஞ்சல் புயல் டிசம்பர் 1 ஆம் தேதி கரையைக் கடந்தபோது, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த அதிகனமழையால் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து இந்த மாவட்டங்களில் மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், புயல் மீட்புப் பணிகளுக்காக ஒன்றிய அரசு ரூ. 2000 கோடியை உடனடியாக தமிழ்நாட்டுக்கு ஒதுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்நிலையில், ரூ.2,000 கோடி நிவாரணத் தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும் என மக்களவையில் கனிமொழி எம்.பி வலியுறுத்தியுள்ளார்.
இன்று மக்களவையில், தமிழ்நாட்டில் 'நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்த இடைக்கால நிவாரணமாக ரூ.2 ஆயிரம் கோடியை விடுவிக்க வேண்டும். இந்த நிவாரண நிதியை உடனடியாக வழங்குவது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்.
ஃபெஞ்சல் புயல் பாதிப்புகளை மதிப்பிட ஒன்றிய குழுவை அனுப்ப வேண்டும் ஆகியவற்றை வலியுறுத்தி கனிமொழி MP ஒத்திவைப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார்.அதேபோல் தமிழ்நாட்டை சேர்ந்த அனைத்து MP-களும் வெள்ள பாதிப்புகள் குறித்து எடுத்துரைத்தனர்.