இந்தியாவிலேயே மலிவான போக்குவரத்தாக கருதப்படும் ரயில்வேயில், புதுப்புது வளர்ச்சிகளைக் கொண்டு வருகிறோம் என பல கோடி ரூபாய்களை ஒன்றிய பா.ஜ.க அரசு செலவிட்டு வருகிறது.
சில நேரங்களில் செலவிடப்படுவதாக தெரிவிக்கிறது. காரணம், செலவிடப்படும் தொகைக்கு இணையான வசதிகள் பல நேரங்களில் விடுபடுவதே. அதற்கு அண்மை எடுத்துக்காட்டாக, பல கோடி செலவில் ஒன்றிய பா.ஜ.க அரசால் கொண்டு வரப்பட்ட வந்தே பாரத் வண்டியின் இயந்திர கோளாறு நிகழ்வும் அமைந்துள்ளது.
சீனா, ஜப்பான் நாடுகளுக்கு இணையான தொழில்நுட்ப வளர்ச்சியை இந்தியாவிலும் நிறுவ இருக்கிறோம் என தெரிவித்து, ஒன்றிய பா.ஜ.க அரசால் கொண்டு வரப்பட்ட வண்டி தான், வந்தே பாரத்.
ஆனால், வந்தே பாரத் வண்டி நடைமுறைக்கு வந்ததிலிருந்தே, பாதுகாப்பு வசதிகள் பெருமளவில் இல்லை என்ற விமர்சனங்கள் வலுத்து வருகின்றன. மேலும், இயல்பான தொடர்வண்டியைப் போல தான், வந்தே பாரத்தும் இருக்கிறது, ஆனால் கட்டணம் மட்டும் வானுயர்ந்திருக்கிறது என்ற கண்டனமும் மறுபுறம் வலுத்துவந்தன.
இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தின் உடாவா பகுதியில் சென்று கொண்டிருந்த வந்தே பாரத் வண்டி இயந்திர கோளாறு காரணமாக, பயணத்தின் இடையே நின்றதும், அதனை காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட எக்ஸ்பிரஸ் வண்டி இழுத்து வருவதுமான காணொளி இணையத்தில் பரவி, பெரும் பேச்சு பொருளாகியுள்ளது.
இதனை குறிப்பிட்டு, காங்கிரஸ் கட்சி, தனது X சமூக வலைதளப் பக்கத்தில், “பா.ஜ.க.வின் Engine தோல்வியை அடுத்து, இழுத்து வந்த காங்கிரஸின் Engine” என கேலி செய்து பதிவிட்டுள்ளது.