தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த மூன்று ஆண்டுகளில், அதிக முதலீடுகளை ஈர்க்கும் உயர் தொழில்நுட்பம் வாய்ந்த தொழில்களையும், அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தொழில்களையும் ஈர்த்துள்ளதோடு, 2030-ஆம் ஆண்டிற்குள் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக தமிழ்நாட்டை மாற்ற வேண்டும் என்ற இலக்கை அடைவதற்காக பல்வேறு நடவடிக்கைகளையும் முனைப்போடு எடுத்து வருகிறது.
அந்த வகையில், வளர்ச்சியின் அடையாளமாக திகழும் தொழில் நிறுவனங்களை தமிழ்நாட்டில் அதிக அளவில் தொடங்கிட முதலீடுகளை ஈர்த்திடும் வகையிலும், இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கிடவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்க நாட்டில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இந்த பயணத்தின் போது முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில் உலகின் பல்வேறு முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதோடு, பல்வேறு நிறுவனங்களின் உயர் அலுவலர்களை சந்தித்து தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பும் விடுத்தார். மேலும், இப்பயணத்தில் முதலமைச்சர் அவர்கள் அமெரிக்க வாழ் தமிழர்களை சந்தித்து, அமெரிக்க தமிழ்ச் சங்கங்களின் சார்பில் சான் பிரான்சிஸ்கோ மற்றும் சிகாகோவில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, தமிழ் சொந்தங்களோடு கலந்துரையாடினார்.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வரவேற்பைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன் என நடிகர் விஜய் சேதுபதி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”அமெரிக்க வாழ் தமிழர்கள் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு அளித்த அபாரமான வரவேற்பைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.