உத்தர பிரதேசத்தின் அம்ரோஹா என்ற பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பல்வேறு மாணவர்கள் படித்து வரும் நிலையில், இங்கு 7 வயது இஸ்லாமிய மாணவர் ஒருவர் கடந்த 5-ம் தேதி, ஆசிரியர் தினத்தன்று அசைவ உணவு பிரியாணி கொண்டு வந்துள்ளார். இதனை கண்ட ஆசிரியர் பள்ளி முதல்வர் அவ்னிஷ் குமார் ஷர்மாவிடம் அழைத்து சென்றுள்ளார்.
அந்த பள்ளி முதல்வரோ, உடனே அந்த சிறுவனை தனி அறையில் அடைத்து வைத்து பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்பேரில் விரைந்து வந்த சிறுவனின் தாய், என்ன என்று விசாரித்தபோது, பள்ளிக்கு அசைவ உணவை சிறுவன் கொண்டு வந்ததாக, இதனால் அவரை டிஸ்மிஸ் செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனை கேட்டு பதறிப்போன தாய், பள்ளி முதல்வரிடம் சண்டையிட்டபோது, சிறுவன் மற்ற மாணவர்களுக்கு அசைவ உணவை கொடுத்து மதம் மாற்ற முயற்சிப்பதாக குற்றம் சுமத்தியுள்ளார். இதனை கேட்டு கொந்தளித்த தாய், "கடந்த சில மாதங்களாக பள்ளியில் இந்து - முஸ்லீம் என்ற பிரச்னை இருந்து வந்துள்ளது. என் மகன் என்னிடம் இதுகுறித்து கேட்கிறான். இந்து - முஸ்லீம் பிரிவினையை சொல்லிக்கொடுப்பதா இந்த பள்ளியின் வேலை?" என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து இடைமறித்த பள்ளி முதல்வர், "வருங்காலத்தில் கோயில்களை இடிப்பவருக்கு எங்கள் பள்ளியில் இடமில்லை" என்று மதக் கலவரத்தை தூண்டும் வகையில் சிறுவன் மீது ஒரு பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்து பள்ளியில் இருந்து வெளியேற்றியுள்ளளார். இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், பள்ளி முதல்வரிடம் சிறுவனின் தாய் வாக்குவாதம் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தொடர்ந்து இதுகுறித்து பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், முஸ்லீம் அமைப்புகள் போலீசில் புகார் அளித்துள்ளது. இதையடுத்து இந்த சம்பவம் குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட விசாரணைகுழு அமைக்கப்பட்டுள்ளது. 7 வயது சிறுவன் அசைவ உணவை கொடுத்து மதம் மாற்ற முயற்சிப்பதாக பள்ளி முதல்வர் கூறியது, பாஜகவின் வெறுப்பு அங்குள்ள மக்களின் ஆழ் மனதில் எந்த அளவு ஊடுருவியுள்ளது என்பதை காட்டுகிறது.