குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இந்த தொடர் கனமழையால் பல்வேறு பகுதிகளில் பாலம், கட்டடம் உள்ளிட்டவை சேதம் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது குஜராத்தில் 6 ஆண்டுகளான கட்டடம் ஒன்று இடிந்து விழுந்த விபத்தில் 7 பேர் பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் சூரத் அருகே சச்சின் பாலி என்ற கிராமம் உள்ளது. இங்கு 6 மாடி கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த கட்டடத்தில் பல நூறு பேர் வசித்து வருகின்றனர். இந்த சூழலில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நேற்று (ஜூலை 6) அந்த 6 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது. இந்த சம்பவத்தை கண்ட அப்பகுதி மக்கள் உடனே போலீசாருக்கும், ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள் மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். தொடர்ந்து போலீசாரும் இதுகுறித்து விசாரித்தனர். அப்போது 30 வீடுகள் கொண்ட அந்த கட்டடத்தில், விபத்து நேர்ந்த அந்த சமயத்தில் 4 - 5 கட்டடத்தில் மட்டுமே ஆட்கள் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து 15-க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்ட நிலையில், 3 பேரின் சடலங்கள் உடனே மீட்கப்பட்டது.
மேலும் இடர்பாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் மீட்புக் குழு ஈடுபட்டு வருகின்றனர். இந்த கோர சம்பவத்தில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிகழ்வு குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.