இந்தியா

அம்பேத்கரையும், அரசியலமைப்பையும் எதிர்த்த அமைப்பு ஆர்.எஸ்.எஸ் : மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு!

அரசியலமைப்பு வரையறுக்கப்பட்ட போது விமர்சித்தவர்களும், தொடர்ந்து அரசியலமைப்பிற்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுப்பவர்களும், காங்கிரஸை அரசியலமைப்பிற்கு எதிரானவர்கள் என கூறுவது தவறு : மல்லிகார்ஜுன கார்கே!

அம்பேத்கரையும், அரசியலமைப்பையும் எதிர்த்த அமைப்பு ஆர்.எஸ்.எஸ் :  மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

10 ஆண்டு கால பா.ஜ.க ஆட்சியில், கலவரங்களை கட்டவிழ்த்து, குற்றவியல் சட்டங்களில் மாற்றத்தை கொண்டு வந்து, இந்தியாவின் ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது பா.ஜ.க என எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் முழக்கம் எழுப்பியது.

அதிலும், குறிப்பாக பா.ஜ.க.வின் கருத்தியல் தலைமையாக கருதப்படும் ஆர்.எஸ்.எஸ், இந்திய அரசியலமைப்பை எதிர்க்கும் பல கூற்றுகளை, இந்தியா சுதந்திரம் பெற்றது முதல் முன்மொழிந்து வருகிறது என்ற குற்றச்சாட்டு, மாநிலங்களவையில், முதன்மை குற்றச்சாட்டாக வைக்கப்பட்டது.

ஆனால், அதனை ஏற்றுக்கொள்ள இயலாத குடியரசுத் துணைத்தலைவரும், மாநிலங்களவை சபாநாயகருமான ஜெகதீப் தன்கர், ஆர்.எஸ்.எஸ்.க்கு எதிரான குற்றச்சாட்டுகளை அவைக்குறிப்பிலிருந்து நீக்கினார்.

இதனால், மேலும் மாநிலங்களவையில் பதற்றம் அதிகரித்தது. இந்நிலையில், மக்களவையில் 2 மணிநேரத்திற்கு மேல், பல பொய் குற்றச்சாட்டுகளை வைத்து பேசிய பிரதமர் மோடி, மாநிலங்களவையில் அதே குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

இடைமறித்து கருத்து தெரிவிக்க மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்வந்த போது, அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. எனவே, இந்தியா கூட்டணி மாநிலங்களவை உறுப்பினர்கள் முழக்கமிட்டனர்.

இதனையடுத்து, மோடி தனது மாநிலங்களவை உரையில், “காங்கிரஸ் கட்சி அரசியலமைப்பிற்கு எதிராக செயல்படுகிறது, பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது” என பேசினார்.

இதற்கும், மறுப்பு தெரிவிக்க எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதால், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கூட்டாக வெளிநடப்பு செய்தனர்.

இது குறித்து தனது X தளத்தில் பதிவிட்ட காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே,

“1949ஆம் ஆண்டு அம்பேத்கரால், இந்திய அரசியலமைப்பு வடிவமைக்கப்பட்டபோது, இதில் இந்தியர்களுக்கான எந்த வரைவும் இல்லை. இந்திய பண்பாட்டை வளர்ப்பதற்கான எந்தக்கூறுகளும் இல்லை. முக்கியமாக மநுநீதியின் உட்கருத்து புறக்கணிக்கப்பட்டுள்ளது என அம்பேத்கருக்கும், அரசியலமைப்பிற்கும் எதிராக நின்றவர்கள் தான் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர். ஆனால், தற்போது அந்த கருத்தியலை கொண்டவர்கள், அரசியலமைப்பிற்கு எதிராக காங்கிரஸ் செயல்படுகிறது என வீண்பழி சுமத்துகின்றனர்.

அதிலும், அப்போதைய காலத்தில் அம்பேத்கர் அவர்களே, “இந்திய அரசியலமைப்பு வரைவு உருவாக்கும் குழுவில், என்னை விட திறமை வாய்ந்தவர்கள் பலர் இருந்தும், எனக்கு வாய்ப்பளித்திருக்கிறது காங்கிரஸ்” என தெரிவித்திருந்த நிலையில், காங்கிரஸ் அரசியலமைப்பிற்கு எதிராக செயல்படுகிறது என்று முன்வைக்கப்பட்டுள்ள முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது” என பதிவிட்டுள்ளார்.

இதனையடுத்து, காங்கிரஸ் பெரும்பான்மை பெறவில்லை என மோடி விமர்சித்ததிற்கு, காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், “தேர்தல் பிரச்சாரத்தை போல நாடாளுமன்றத்திலும் பொய் பரப்பல் செய்யும் மோடி, பல செய்திகளை திரித்து பேசி வருகிறார். காங்கிரஸ் பெரும்பான்மை பெறவில்லை என கூறும் மோடி, தனது கட்சியும் பெரும்பான்மை பெறவில்லை என்பதை உணர வேண்டும்” கண்டனம் தெரிவித்துள்ளார்.

எனினும், இவ்வகையான குற்றச்சாட்டுகளை ஏற்காத மோடி அரசு, எவ்வகையான ஆக்கப்பூர்வ விவாதத்திலும் ஈடுபடாமல், இரு அவைகளையும் காலவரையின்றி ஒத்திவைத்துள்ளது.

banner

Related Stories

Related Stories