இந்தியா

கல்வியில் பாகுபாடு : சிறுபான்மையினர் கல்விக்கு வேட்டு வைக்கும் பாஜக!

கல்வியில் அதிகரிக்கும் அநீதி; சிறுபான்மையினருக்கு மறுக்கப்படும் கல்வி; முற்றிலும் இந்துத்துவத்திற்கு ஆதரவான அரசியலை கல்வி வழி திணிக்கும் அவலம்

கல்வியில் பாகுபாடு : சிறுபான்மையினர் கல்விக்கு வேட்டு வைக்கும் பாஜக!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

இந்திய அமைப்பில், மக்கள் தொகை விழுக்காட்டிற்கும்; சாதி மற்றும் மதம் அடிப்படையிலான இடஒதுக்கிடுகளுக்கும் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. இதன் மூலம், சிறுபான்மையினரில் பெரும் பகுதி மக்களுக்கு, கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் பற்றாக்குறை நீடித்து வருகிறது. இந்நிலையில், இருக்கின்ற ஒதுக்கீடு வேறுபாட்டை மேலும் அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது, பாஜக.

இந்திய ஆட்சி முறையில் SC, ST, OBC, EWS மற்றும் GENERAL ஆகியப் பிரிவுகள் வகுக்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு வரையறைப்படி, SC - 15%, ST - 7.5%, OBC - 27%, EWS - 10%, மாற்றுத்திறனாளிகள் - 4% மற்றும் GENERAL - 36.5% என்ற கல்விநிலை இட ஒதுக்கீடும், அரசு வேலைகளில் GENERAL (உயர்சாதியாகக் கருதிக்கொள்கிற) 36.5% க்கும் அதிகமான இடஒதுக்கீடும் செய்து வருகிறது ஒன்றிய பாஜக அரசு. ஆனால், மக்கள் தொகை கணக்கீட்டின்படி, OBC யின் கீழ் வாழும் மக்களே அதிபெரும்பான்மைப் பெற்றவர்களாக இருக்கின்றனர். உயர்சாதியினரில் மக்கள் தொகை 20% க்கும் குறைந்த அளவே உள்ளது. (இங்கு உயர்சாதி என குறிக்கப்பெறுபவர்கள், இந்து மதத்தின் உயர்சாதியினர் மட்டுமே, இஸ்லாமியர் மற்றும் இதர மதங்களில் உள்ள அனைவரும் OBC க்குள் அடக்கப்படும் சூழலே நிலவிவருகிறது.)

இவ்வாறாக சரியான கணக்கீடின்றி பகிரப்படும் இடஒதுக்கீட்டின் மூலம், சிறுபான்மை சமூகத்தினரான இஸ்லாமியர்கள், கிறித்துவர்கள் மற்றும் இதரப் பிரிவினருக்கு, அவர்தம் மக்கள்தொகைக்கேற்ப இடங்கள் ஒதுக்கப்படுவது இல்லை. இதனால், பலருக்கும் கல்வி கிடைக்கப்பெறாத, அரசு வேலைகள் கிடைக்கப்பெறாத நிலை நீண்ட காலமாக நீடித்துவருகிறது.

கல்வியில் பாகுபாடு : சிறுபான்மையினர் கல்விக்கு வேட்டு வைக்கும் பாஜக!

எனினும், அரசு வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீட்டினை ஒழுங்குபடுத்த அதிகாரமற்ற நிலையில், கல்வி நிலையங்களில் மட்டுமாவது தங்களுக்கான கல்வி வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்ளும் நோக்கில், சிறுபான்மையினக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், அந்த வாய்ப்புகளுக்கும் முட்டுக்கட்டைப் போடும் வேலையை பாஜக செய்யத் தொடங்கியுள்ளது.

இந்தியாவின் மக்கள் தொகை கணக்கெடுப்பு, கடந்த 2011 ஆம் ஆண்டிற்கு பின் ஒன்றிய அரசால் முன்னெடுக்கப்படாத நிலையில், தனியார் கணக்கீடுகளின்படி, சுமார் 79% மக்கள் இந்து மதம், 15% மக்கள் இஸ்லாமிய மதம், மீதமுள்ள 6% மக்கள் கிறித்தவம், பெளத்தம் போன்ற மத வழிமுறையாளர்களாக இருக்கின்றனர். (பெல்ஜியம் போன்ற மேலை நாடுகளில் சாதி, மத மறுப்பாளர்கள் எண்ணிக்கையே அதிகப்படியாக இருக்கும் நிலையில், இந்தியாவில் சாதி, மத மறுப்பாளர்களுக்கு என தனிப் பிரிவு வகுக்கப்படவில்லை.)

இந்நிலையில், கடந்த ஆண்டு கர்நாடகத்தில் பாஜக ஆட்சி செய்தபோது, அரசியலமைப்பிற்கு எதிரானது என இஸ்லாமியர்களுக்கு ஒதுக்கப்பட்ட 4% இட ஒதுக்கீட்டை ரத்து செய்வதாக அறிவித்தார் அமித் ஷா. அதனைத் தொடர்ந்து, தற்போது அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல சிறுபான்மையினருக்கான கல்விக் கூடங்களின் செயல்பாடுகளைச் சட்டப்பூர்வமாக நீர்த்துப்போகவைக்கும் வழக்கை, உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ளது ஒன்றிய அரசு. மட்டுமின்றி, கல்வித்துறையில் சிறுபான்மையினருக்காக ஒதுக்கப்பெறும் குறைந்த அளவு இடஒதுக்கீடுகளுக்கும் தடை விதிக்க முனையும் பாஜகவின் நடவடிக்கைகளுக்கு, பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பின்குறிப்பு: ஏறக்குறைய 15% ஆக இருக்கும் இஸ்லாமியர்களுக்கு 4% என்பதே குறைவு. இந்நிலையில் அதையும் குறைக்க முற்படும், பாஜகவின் செயல்பாடுகள், 1000 ஆண்டுகளுக்கு முன்னான, மனுவாதக் கொள்கைகளை முன்னெடுப்பதாகவே உள்ளன.

banner

Related Stories

Related Stories