இந்தியா

சிறையில் ஏற்பட்ட நட்பு : நண்பனுக்கு பரிசளிக்க புல்லட்டை திருடிய இளைஞர்.. கொத்தாக தூக்கிய போலீஸ் !

சிறையில் ஏற்பட்ட நட்பின் காரணமாக பரிசளிக்க புல்லட் பைக்கை திருடி மீண்டும் சிறை சென்றுள்ள இளைஞரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறையில் ஏற்பட்ட நட்பு : நண்பனுக்கு பரிசளிக்க புல்லட்டை திருடிய இளைஞர்.. கொத்தாக தூக்கிய போலீஸ் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

புதுச்சேரி, லாஸ்பேட்டை அவ்வை நகரை சேர்ந்தவர் ஆதிகேசவ பெருமாள். இவர் மரத்திலான வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்த சூழலில் கடந்த 4-ம் தேதி வழக்கம்போல் தனது புல்லட் பைக்கில் கடைக்கு சென்றுள்ளார். அங்கே வண்டியை நிறுத்திவிட்டு, நீண்ட நேரம் கழித்து மீண்டும் வண்டியை எடுக்க வந்தபோது, அது காணாமல் போயிருந்தது.

இதனை கண்டு பெரும் அதிர்ச்சியடைந்த பெருமாள், இது தொடர்பாக லால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணையை தொடங்கினர். அதில் முதற்கட்டமாக அங்கிருந்த சிசிடிவி காட்சியை ஆய்வு செய்தபோது, அதில் 2 இளைஞர்கள் 'டோ' செய்து பெருமாளின் புல்லட் பைக்கை எடுத்து சென்றது தெரியவந்தது.

சிறையில் ஏற்பட்ட நட்பு : நண்பனுக்கு பரிசளிக்க புல்லட்டை திருடிய இளைஞர்.. கொத்தாக தூக்கிய போலீஸ் !

இதைத் தொடர்ந்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணையை துரிதப்படுத்திய போலீசார், பைக்கை திருடி சென்ற இளைஞர்களை கண்டறிந்தனர். அதோடு கரியமானிக்கம் பகுதியைச் சேர்ந்த அஜித் என்ற இளைஞர் பிடிபட்டார். தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது, ஏற்கனவே திருட்டு வழக்கில் சிறை சென்ற அஜித்துக்கும், அடிதடி வழக்கில் கைதாகி சிறையிலிருந்த போது ருத்ரேஷ் என்பவருக்கும் சிறையில் இருந்தபோது பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அந்த பழக்கம் சிறை விட்டு வெளியே வந்தபோதும் தொடர்ந்தது. அப்போது ருத்ரேஷ், தனக்கு புல்லட் பைக் வாங்க வேண்டும் என்பதே கனவாக இருப்பதாக கூறவே, நண்பனான அஜித், அவருக்கு பரிசுகொடுக்க எண்ணியுள்ளார். அதன்படி தனது சக கூட்டாளியான ஆனந்த் என்பவருடன் ஒரு புல்லட் பைக்கை திருட திட்டமிட்டுள்ளார்.

சிறையில் ஏற்பட்ட நட்பு : நண்பனுக்கு பரிசளிக்க புல்லட்டை திருடிய இளைஞர்.. கொத்தாக தூக்கிய போலீஸ் !

அதன்படி சம்பவத்தன்று ஆனந்தும், அஜித்தும் சேர்ந்து பெருமாளின் புல்லட் பைக்கை திருடி, ருத்ரேஷுக்கு பரிசாக அளிப்பதற்காக எண்ணி திருட்டு வேலையில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து குற்றவாளிகளான அஜித், ஆனந்த், ருத்ரேஷ் ஆகிய 3 பேரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி மத்தியச் சிறையில் அடைத்தனர்.

திருட்டு வழக்கில் கைதாக சிறை சென்றபோது ஏற்பட்ட நட்பு காரணமாக, நண்பனுக்கு பரிசளிக்க எண்ணி, புல்லட் பைக்கை திருடி தற்போது மீண்டும் சிறை சென்றுள்ள இளைஞர்களின் செயல் புதுச்சேரியில் பேசுபொருளாக மாறியுள்ளது.

banner

Related Stories

Related Stories