புதுச்சேரியில் பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் செல்போஃன் கடை உரிமையாளர் மற்றும் அவரது மனைவியின் புகைப்படத்தில் ஆபாச ஆடியோவை இணைத்து, புதுச்சேரியில் உள்ள பல செல்போஃன் கடை உரிமையாளர்களுக்கு அனுப்பிய வழக்கில் சினிமா துணை நடிகர் செல்வம் உட்பட மூன்று பேரை முத்தியால்பேட்டை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்
புதுச்சேரி அண்ணா சாலையில் ஆரஞ்சு மொபைல்ஸ் என்ற செல்போன் கடையை நடத்தி வருபவர் சதீஷ்குமார் (37). இவர் தனது குடும்பத்துடன் முத்தியால்பேட்டை பகுதியில் வசித்து வருகிறார். இந்த சூழலில் கடந்த 8-ம் தேதி மற்றொரு செல்போன் கடை உரிமையாளரான சரவணன் என்பவர் சதீஷுக்கு கால் செய்து, சதிஷும் அவரது மனைவியும் இருக்கும் புகைப்படத்தில் ஆபாச ஆடியோ இணைக்கப்பட்டு தனக்கு யாரோ அனுப்பி உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சதீஷ் அந்த புகைப்பட ஆடியோயுடன் முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது இந்த ஆபாச புகைப்பட ஆடியோவை விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பூவில் என்பவரின் செல்போனிலிருந்து பகிரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, போலீசார் பூவிலை கைது செய்து விசாரித்தபோது, அவரது நண்பர் ஆனந்த் என்கிற ஸ்பார்க் ஆனந்த் புதுச்சேரியில் உள்ள துணை நடிகர் ஒருவரிடம் உதவியாளராக பணியாற்றி வருவதாகவும், அவர்தான் புகைப்பட ஆடியோ மற்றும் பல்வேறு எண்களையும் கொடுத்து அனுப்பச் சொல்லியதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து ஆனந்தை போலீசார் கைது செய்ததில் அவர் பணியாற்றும் துணை நடிகர் செல்வம் தான் தன்னை இதுபோன்ற எடிட் செய்து பலருக்கு அனுப்புமாறு அறிவுறுத்ததியாக கூறினார். இதையடுத்து துணை நடிகர் செல்வத்தை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் இதனை செய்ததாக தெரிவித்தார்.
அதாவது துணை நடிகர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 'சூ மொபைல்ஸ்' என்ற செல்போன் கடையை நடத்தி வந்துள்ளார். அப்போது அவருக்கு சினிமா வாய்ப்புகள் வரவே, கடையை சரிவர கவனிக்க முடியவில்லை. இதனால் தனது கடையை தனக்கு தெரிந்த நண்பரான சதீஷிடம் குத்தகைக்கு விட்டுள்ளார். பின்னர் அவரே கடையை நடத்த முடிவு செய்தபோது, சதீஷ் தமக்கு ரூ.10 லட்சத்துக்கு மேல் பணம் தர வேண்டியது இருந்ததாகவும், இதனை தர காலதாமதப்படுத்தி வந்ததால் இதுபோன்ற செயலில் அவர் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் செல்வத்துடன் சேர்ந்து 3 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புதுச்சேரி காலாப்பட்டு உள்ள மத்திய சிறையில் அடைத்தனர். துணை நடிகர் செல்வம் பிச்சைக்காரன் 1, ஸ்கெட்ச் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.