மகாராஷ்டிர மாநிலம் புனே அருகே அமைந்துள்ளது பிம்ப்ரி சின்ச்வாத் என்ற பகுதி. இங்கு சுராஜ் ராஜேந்திரா (29) என்பவர் வசித்து வருகிறார். அந்த பகுதியில் டேட்டா ஆபரேட்டராக பணிபுரிந்து வரும் இவருக்கும், கனுஜ் பகுதியை சேர்ந்த அங்கிதா என்ற 24 வயது இளம்பெண் ஒருவருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் திருமணமானது. எனவே இந்த தம்பதியினர் அடிக்கடி கோயில், உறவினர் வீடு என்று வெளியே சுற்றி திரிந்துள்ளனர்.
அந்த வகையில் சம்பவத்தன்றும் கணவன் மற்றும் மனைவி இருசக்கர வாகனத்தில் ஒரு கோயிலுக்கு சென்று திரும்பி கொண்டிருந்தனர். அப்போது மனைவி அங்கிதா, அருகில் இருக்கும் தனது தோட்டத்துக்கு செல்லலாம் என்று கூறவே, இருவரும் அங்கே சென்றுள்ளனர். பின்னர் சில மணி நேரம் கழித்து பதற்றத்துடன் தனது தந்தைக்கு போன் செய்த அங்கிதா, தங்களை முகமூடி கொள்ளையர்கள் தாக்கிச் சென்றதாகவும், கொள்ளையர் தாக்குதலில் சுராஜ் இறந்து போனதாகவும் கூறி கதறி அழுதுள்ளார்.
இதனை கேட்டு அதிர்ந்துபோன தந்தை, தங்களது உறவினரை கூட்டி கொண்டு உடனடியாக தோட்டத்துக்கு விரைந்தார். தொடர்ந்து காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள், அங்கிதாவிடம் விசாரித்தனர். அப்போது தான் இயற்கை அழைப்புக்காக வெளியே சென்றிருந்த நேரத்தில் திடீரென வந்த மர்ம நபர்கள் சுராஜை தாக்கியதாக அழுதுகொண்டே கூறினார்.
இதைத்தொடர்ந்து முகம் மற்றும் தலை முழுக்க கத்திக்குத்துக் காயங்களுடன் கழுத்தறுத்து கிடந்த சுராஜின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பினர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து இதுகுறித்து தனிப்படை அமைத்து விசாரணையும் மேற்கொண்டு வந்தனர். அப்போது அங்கிதாவின் வாக்குமூலம் முன்னுக்கு பின் முரணாக இருந்துள்ளது.
எனவே அவரிடம் கிடுக்குபிடி விசாரணை நடத்தினர். அப்போது தான்தான் தனது கணவரை கொன்றதாக வாக்குமூலம் அளித்தார். மேலும் தனக்கும் சுராஜுக்கும் திருமணமானத்தில் இருந்தே, தன்னை சந்தேகித்ததாகவும், தனக்கு தொல்லையும், கொடுமையும் செய்து வந்ததாகவும், இதனால் அவரை கொலை செய்ய திட்டமிட்டு அதன்படி தனது தோட்டத்திற்கு அழைத்து சென்று கத்தியால் குத்தி கொன்றதாகவும் தெரிவித்தார்.
இதனை கேட்டு அனைவரும் அதிர்ந்தனர். தொடர்ந்து அங்கிதா மீது கொலை வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் இந்த சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமான ஒரே மாதத்தில் தனது கணவரை கழுத்தறுத்து கொலை செய்த மனைவியின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.