ஜம்மு காஷ்மீரில் குப்வாரா என்ற பகுதியில் குர்ஹாமா என்ற கிராமம் உள்ளது. இங்கு முகமது இக்பால் கட்டானா என்பவர் குடும்பத்தோடு வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 4 பிள்ளைகள் இருக்கும் நிலையில், இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது.
இது கடந்த 1 வருடமாக அதிகரித்து காணப்பட்டுள்ளது. இருப்பினும் இருவரும் பிள்ளைகளுக்காக ஒன்றாக இருந்து வந்துள்ளனர். இந்த சூழலில் கடந்த மார்ச் 29-ம் தேதியும் இவர்கள் இருவருக்குள்ளும் வழக்கம்போல் சண்டை ஏற்பட்டுள்ளது. அது கைகலப்பாக மாறவே கணவரை மனைவி அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த இக்பால் தற்கொலை செய்ய எண்ணியுள்ளார்.
அதன்படி தனது வீட்டில் இருந்த கத்தியை எடுத்துக்கொண்டு தனது பைக்குக்கு பஞ்சர் பார்ப்பதாக கூறி வெளியே சென்றுள்ளார். அந்த சமயத்தில் அவரது 8 வயது மகள் அவருடன் செல்ல அடம்பிடித்துள்ளார். அவரை சமாதானப்படுத்தி 10 ரூபாய் சாக்லேட் வாங்கி கொடுத்துள்ளார் இக்பால். இருப்பினும், தந்தை இக்பாலை பின்தொடர்ந்து சென்றுள்ளார்.
இதனால் வேறு வழியின்றி அவரை தன்னுடன் அழைத்து சென்றுள்ளார் இக்பால். அப்போது மேலும் கோபத்தில் இருந்த இக்பாலிடம் மகள் எதோ கேட்க ஆத்திரத்தில் தனது கையில் இருந்த கத்தியை வைத்து அவரது கழுத்தை அறுத்துள்ளார். அவசரத்தில் செய்த இந்த தவறை மறைக்க எண்ணிய இக்பால், அவரது சடலத்தை உறவினர் வீட்டு அருகில் உள்ள பகுதி ஒன்றில் மறைத்து விட்டு திரும்ப சென்றுள்ளார்.
அங்கே அவரது மகளை தாய் தேடவே, கணவரிடம் இதுகுறித்து கேட்டுள்ளார். அவரோ தன்னுடன் வரவில்லை என்று மறுத்துள்ளார். இதனால் வேறு வழியின்றி தாய் இதுகுறித்து போலிசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
சுமார் 6 நாட்களுக்கு பிறகு மகளின் சடலம் கழுத்தறுக்க பட்ட நிலையில், அவரது உறவினர் வீட்டு அருகே மீட்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தந்தையிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டதில், இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர்.
தற்கொலை செய்துகொள்ள சென்ற தந்தைக்கு இடையோயூறாக 8 வயது மகள் இருந்ததால் அவரை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குடும்ப விவகாரம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை காரணமாக “மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக அரசின் சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 எண்ணை அழைத்து, இலவச கவுன்சிலிங் பெறலாம்.”
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், கழக நிகழ்வுகள் மற்றும் இன்றைய முக்கிய செய்திகள் என அனைத்து செய்திகளை உடனுக்கு உடன் அறிய கலைஞர் செய்திகள் இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம்!