ஒன்றிய பா.ஜ.க அரசு மத்தியில் ஆட்சியை கைப்பற்றியதிலிருந்தே சிறுபான்மையினர், பெண்கள் மற்றும் தலித் மக்களுக்கு எதிரான நடவடிக்கையை தொடர்ச்சியாக செய்து வருகிறது.
குறிப்பாக சிறுபான்மையினர் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுவந்த கல்வி உதவித்தொகையை நிறுத்தும் நடவடிகையில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒருபடியாக, 2022-2023ஆம் ஆண்டு முதல் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மெட்ரிக் கல்விக்கு முந்தைய கல்வி உதவித்தொகையை ஒன்றிய அரசு திடீரென ரத்து செய்தது.
ஒன்றிய அரசின் இத்தகைய நடவடிக்கைக்கு பல்வேறு எதிர்க்கட்சிகள் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு இதுதொடர்பாக கடிதம் எழுதியுள்ளார்.
இந்நிலையில், இந்தியாவில் உயர் கல்வி பயின்று வரும் சிறுபான்மையினர் மாணவர்களின் கல்வித் தகுதி அடிப்படையில் வழங்கப்பட்டு வந்த மவுலானா ஆசாத் தேசிய கல்வி உதவித் தொகையை ஒன்றிய பா.ஜ.க அரசு இந்த கல்வியாண்டில் இருந்து கைவிடுவதாக அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு சிறு பான்மை மக்கள் நல குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், "சிறுபான்மையினர் ஆராய்ச்சி மாணவர்களின் மவுலானா ஆசாத் தேசிய கல்வி உதவித் தொகையை ஒன்றிய அரசு நிறுத்தியதை தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு வன்மையாக கண்டிக்கிறது.
இந்தியாவில் உயர் கல்வி பயின்று வரும் சிறுபான்மையினர் மாணவர்களின் கல்வித் தகுதி அடிப்படையில் வழங்கப்பட்டு வந்த மவுலானா ஆசாத் தேசிய கல்வி உதவித் தொகையை ஒன்றிய அரசு இந்த கல்வியாண்டில் இருந்து கைவிடுவதாக அறிவித் திருக்கிறது.
2006ஆம் ஆண்டு அன்றைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி - இடதுசாரி கூட்டணி அரசால் சிறுபான்மையினரின் கல்வி, பொருளாதார, வாழ்நிலை சம்பந்த மாக ஆய்வு செய்வதற்காக அமைக் கப்பட்ட நீதியரசர் ராஜேந்திர சச்சார் குழுவின் ஆலோசனைகளின் அடிப்படையில் பிரதம மந்திரி 15 அம்சத் திட்டம் அறிவிக்கப்பட்டு, 2009ஆம் ஆண்டிலிருந்து நடை முறைப்படுத்தப்பட்டு வருகிறது.
சிறுபான்மையினர் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை 1 ஆம் வகுப்பிலிருந்து உயர்கல்வி வரை பல்வேறு மட்டங்களில் வழங்கப் படுவதற்கான நடைமுறை கடை பிடிக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு ஒன்றிய அரசால் நடத்தப்படுகிற உயர் கல்வியில் குறிப்பாக எம்.ஃபில், பி.ஹெச்டி போன்ற பாடங்களில் சேர்வதற்கான தேர்வில் வெற்றி பெற்ற சிறுபான்மையினர் மாணவர்களுக்கு அவர்கள் கல்வியை தொடர வேண்டும் என்பதற்காக ஒன்றிய அரசால் மவுலானா ஆசாத் தேசிய கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
அவ்வாறு வழங்கப்பட்டு வருவதன் மூலம் இந்தியாவில் சராசரியாக ஆண்டிற்கு 2,000க்கும் மேற்பட்ட ஆய்வு மாணவர்கள் கல்வி பயில்வதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது. ஆனால் கடந்த 8 ஆண்டுகளில் ஒன்றிய பா.ஜ.க அரசு இந்த எண்ணிக்கையை சிறுக சிறுக குறைத்து, 2022-23ஆம் ஆண்டு உதவித்தொகையை நிறுத்துவதாக நாடாளுமன்றத்தில் அறிவித்திருக்கிறது.
ஒன்றிய அரசின் பிற்போக்குத் தனமான, சிறுபான்மையினர் விரோத, இந்தியாவின் வளர்ச்சியை கணக்கில் கொள்ளாத இந்த முடிவு கண்டிக்கத்தக்கது. கடந்த மாதம் தான் ஒன்றிய அரசு 1ஆம் வகுப்பிலிருந்து 8ஆம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மையினர் மாணவர்களுக்கான ப்ரீ மெட்ரிக் உதவித்தொகையை நிறுத்தி அறிவித்தது.
இப்போது ஆராய்ச்சி மாணவர்களுக்கான உதவித் தொகையையும் நிறுத்தி இருக்கிறது. ஒன்றிய ஆட்சியை கையில் வைத்துக்கொண்டு மதவழி சிறுபான்மையினராக இருக்கிற இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், பார்சிகள், சீக்கியர்கள், ஜைனர்கள், புத்த மதத்தைச் சார்ந்தவர்களை இந்தியாவிலிருந்து அந்நியப்படுத்தும் காரியங்களை தொடர்ந்து செய்து வருகிறது.
டிச.17 ஆர்ப்பாட்டம் ஒன்றிய பா.ஜ.க அரசின் இது போன்ற மதவெறி செயல்கள் இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு, ஒருமைப்பாட்டிற்கு, நல்லிணக்கத்திற்கு எதிரானது. எனவே, உடனடியாக ஒன்றிய அரசு உயர்கல்விக்கான மவுலானா ஆசாத் தேசிய கல்வி உதவித் தொகையையும், சிறுபான்மை மாணவர்களுக்கான பிரீ மெட்ரிக் உதவி தொகையையும் வழங்க வேண்டும்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற டிசம்பர் 17ஆம் தேதி தமிழக முழுவதும் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அனைத்து பகுதி ஜனநாயகம் எண்ணம் கொண்டோரும், இயக்கங்களும், நண்பர்களும் பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்" எனத் தெரிவித்துள்ளனர்.