
உத்தரபிரதேச மாநிலம் சீதாபூர் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று இந்த பள்ளியில் 10-ம் வகுப்பு பயின்று வரும் மாணவர் ஒருவர் தனது சக மாணவருடன் சண்டையிட்டுள்ளார்.
இதனை கண்ட பள்ளியின் முதல்வர் ராம்சிங் வர்மா என்பவர் அந்த இரு மாணவர்களையும் கண்டித்துள்ளார். மேலும் அவரது பேச்சு கறாராக இருந்ததாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த ஒரு மாணவர், உடனடியாக தனது வீட்டிற்கு சென்று வீட்டிலுள்ள நாட்டுத்துப்பாக்கியை எடுத்துவந்துள்ளார்.

பின்னர் ஆசிரியர் என்றும் பாராமல் அவரை பள்ளியில் வைத்தே சரமாரியாக தாக்கியத்துடன் எடுத்து வந்த நாட்டு துப்பாக்கியால் 3 முறை சுட்டுள்ளார். இதனை கண்ட ஆசிரியர்கள் மற்றும் சில மாணவர்கள், அந்த மாணவனின் கையில் இருந்து துப்பாக்கியை பிடுங்க முயன்றதோடு, சமாதானப்படுத்தவும் முன்றனர்.
பிறகு அந்த மாணவன் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இதைத்தொடர்ந்து குண்டடி பட்ட பள்ளி முதல்வரை அங்கிருந்தவரால் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்ததோடு, இது குறித்து காவல்துறைக்குக் தகவல் கொடுத்தனர். தகவலின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் தப்பியோடி தலைமறைவாகியுள்ள மாணவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இது குறித்து காவல்துறை கூறுகையில், "தற்போது பள்ளி முதல்வரின் உடல் நிலை ஆபத்தான கட்டத்தை தாண்டியுள்ளது. துப்பாக்கியில் உள்ள குண்டுகள் அவரது உடற்பாகங்களை சேதப்படுத்தவில்லை. துப்பாக்கியால் சுட்டு தப்பித்த சிறுவனை நாங்கள் தீவிரமாக தேடி வருகிறோம். ஆசிரியரை மாணவன் சுட்டது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது" என்றனர்.
இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி வைரலாகி வரும் நிலையில், பள்ளி முதல்வரை மாணவன் துப்பாக்கியால் சுட்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.








