
டெல்லியில் வசித்து வரும் விபின் குமார் (வயது 35) என்பவர் தனது மனைவி மற்றும் 7 வயதில் மகளுடன் ரக்க்ஷா பந்தன் கொண்டாட தனது சகோதரியின் வீட்டுக்கு பைக்கில் சென்றுள்ளார்.
பைக்கை விபின் குமார் ஓட்ட பின்னால் அவரது மனைவியும் இருவருக்கும் நடுவில் அவர்கள் மகளும் இருந்துள்ளனர்.

வடகிழக்கு டெல்லியில் உள்ள சாஸ்திரிபார்க் மேம்பாலத்தில் இவர்கள் சென்றுகொண்டிருந்தபோது, எங்கிருந்தோ வந்த மாஞ்சா நூல் ஒன்று விபின் குமாரின் கழுத்தை அறுத்துள்ளது, உடனடியாக பைக்கை நிறுத்திய அவர், அங்கிருந்து கீழே விழுந்துள்ளார்.
கழுத்தில் ரத்தம் சொட்டிய நிலையில் அவர் மருத்துவமனைக்கு அளித்துச்செல்லப்பட்டுள்ளார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ரத்தப்போக்கு அதிகரித்து அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

பட்டம் விட பயன்படுத்தும் மாஞ்சா நூலால் பலர் உயிரிழந்த நிலையில், அதை பயன்படுத்த இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது.டெல்லியில் 2016ம் ஆண்டு முதல் மாஞ்சா நூலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மாஞ்சா நூலால் மனைவி, மகள் கண்முன்னே ஒருவர் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.








