இந்தியா

”தொடங்கியது 'மான் கி பாத்' பிரதமரின் தேர்தல் கால பகல் வேஷங்கள்” -பேரா., ராஜன் குறை கிருஷ்ணன் கடும் தாக்கு

இந்தச் சட்டங்கள் நன்மை தருபவை என்பதை விளக்கத் தவறி விட்டேன் என்று தேச மக்களிடம் மன்னிப்பு கேட்கிறார். இவரை யார் விளக்க வேண்டாம் என்று தடுத்தார்கள்?

”தொடங்கியது 'மான் கி பாத்' பிரதமரின் தேர்தல் கால பகல் வேஷங்கள்” -பேரா., ராஜன் குறை கிருஷ்ணன் கடும் தாக்கு
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பகல் வேஷம் என்பது உண்மையில் கலை வடிவம். அது என்னவென்றால் தெய்வங்கள் போல வேஷம் போட்டுக்கொண்டு பகல் நேரத்தில் பாடல்களைப் பாடியபடி சுற்றி வருவது. பார்ப்பவர்கள் தரும் சன்மானத்தைப் பெற்றுக் கொள்வது. ஆனால், பேச்சு வழக்கில் அது பகல் நேரத்தில் அணிந்து பின்னர் கலைக்கப்படுவதால், பட்டப் பகலிலேயே வேஷம் போடுவது அதாவது பொய்யான தோற்றத்தைக் காட்டுவது என்ற பொருளை அடைந்து, "பகல் வேஷம் போடாதீர்கள்" என்று ஒருவரை எச்சரிப்பது போன்ற பயன்பாடுகள் உருவாயின. விரக்தியடைந்த ஒரு குடிகாரன் பாடும் திரைப்படப் பாடலில், "வெறும் கோயில் இதிலென்ன அபிஷேகம், உன் மனம் எங்கும் தெருக்கூத்து, பகல்வேஷம்" என்ற வரி வரும். கவிஞர் கண்ணதாசன் எழுதியது.

எதற்காக இதையெல்லாம் கூறுகிறேன் என்றால் இந்தியாவில் மக்களாட்சி என்பதே தேர்தல் காலம் வந்தால் வலதுசாரி அரசியல்வாதிகள் அணியும் பகல் வேஷமாக மாறிவிடுமோ என்ற அச்சத்தால்தான். அந்த அச்சத்துக்கு காரணம் பிரதமர் மோடி திடீரென குருநானக் பிறந்த தினத்தன்று தொலைக் காட்சியில் தோன்றி, அவர் அரசு பதினான்கு மாதங்களுக்கு முன் கொண்டு வந்த வேளாண் சட்டங்களை விலக்கிக் கொள்வதாக அறிவித்தது தான்.

கிட்டத்தட்ட ஓராண்டுக் காலம் விவசாயிகள், குறிப்பாக பஞ்சாப் மாநில விவசாயிகள் அந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து உலகமே வியந்து நோக்கிய மாபெரும் போராட்டத்தைத் தலைநகர் டெல்லிக்கு வெளியே நடத்தி வந்தார்கள். சுதந்திர இந்தியா இதுவரை கண்டிராத அளவு ஒரு நீண்ட அறப்போராக அந்தப் போராட்டம் அமைந்தது. கடும் குளிர், கடும் வெயில் அனைத்திலும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் வெட்ட வெளியில் கூடாரங்கள் அமைத்து தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்தார்கள்.

இந்தியா முழுவதும் இருந்து விவசாய அமைப்புகள், அரசியல் கட்சிகள் அந்தப் போராட்டத்துக்கு ஆதரவாக அங்கே சென்று அவ்வப்போது பங்கெடுத்தார்கள். பல்வேறு மாநிலங்களிலும் அவர்களுக்கு ஆதரவாகப் போராட்டங்கள் நடத்தினார்கள். கேரளா, தமிழ்நாட்டு சட்டமன்றங்கள் இந்தச் சட்டங்களை எதிர்த்து தீர்மானங்கள் நிறைவேற்றின. சர்வதேச ஜனநாயக சக்திகளும் ஆதரவு தெரிவித்தன. புலம்பெயர்ந்த சீக்கியர்கள் கணிசமாக வசிக்கும் கனடா நாட்டு பிரதமரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார். போராட்டக் களத்தில் விவசாயிகள் சற்றேறக் குறைய 700 பேருக்கு மேல் பல்வேறு காரணங்களால் உயிரிழந்தார்கள்.

இவ்வளவு பெரிய போராட்டம் தலைநகர் எல்லையில் ஓராண்டுக் காலம் நடந்தபோதும், 2021 குடியரசு தினத்தன்று அவர்கள் ஊர்வலம் செங்கோட்டை வரை வந்த போதும், கலவரங்கள் மூண்ட போதும் இந்தியப் பிரதமர் விவசாயிகள் பிரதிநிதிகளைச் சந்திக்க மறுத்தார். அமைச்சரவை சகாக்களும், அதிகாரிகளும் பேச்சு நடத்தினார்களே தவிர, போராடுபவர்கள் எவ்வளவு தூரம் வற்புறுத்தியும் பிரதமர் அவர்களைச் சந்திக்க மறுத்தார். எந்த காரணம் கொண்டும் இந்த வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற முடியாது என்பதே அரசின் நிலைப்பாடாக இருந்தது. இந்த மூன்று சட்டங்களையும் திரும்பப் பெற்றே தீர வேண்டும் என்பதே விவசாயிகளின் நிலைப்பாடாக இருந்தது.

”தொடங்கியது 'மான் கி பாத்' பிரதமரின் தேர்தல் கால பகல் வேஷங்கள்” -பேரா., ராஜன் குறை கிருஷ்ணன் கடும் தாக்கு

பல நூறு ஆண்டுகள் போராடினாலும் ஒரு காற்புள்ளியைக் கூட மாற்ற மாட்டோம் என தமிழக பாரதீய ஜனதா கட்சித் தலைவர் அண்ணாமலை கொக்கரித்தார். போராட்டம் மேற்கு உத்தரப் பிரதேசத்துக்கும் பரவியது. அங்கே மகேந்திர சிங் திகாய்த் என்ற புகழ்பெற்ற விவசாயிகள் தலைவரின் மகன் ராகேஷ் திகாய்த் அந்தப் போராட்டத்துக்கு தலைமை தாங்கினார். அந்தப் போராட்டத்தின் முத்தாய்ப்பான ஒரு கொடூர நிகழ்வு சென்ற மாதம் உத்தரப் பிரதேசம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் நிகழ்ந்தது. அக்டோபர் மூன்றாம் தேதி ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா பயணம் செய்த அமைச்சரின் கார் சாலையில் சென்று கொண்டிருந்த போராடும் விவசாயிகளின் மீது பின்புறமாக மோதி எறிந்து எட்டு பேரைக் கொன்றது.

அந்த காணொலியைக் கண்டு நாடெங்கும் ஏற்பட்ட கொந்தளிப்பு, உச்ச நீதிமன்றத்தின் கடுமையான கண்டனம் ஆகியவற்றுக்குப் பிறகு அமைச்சரின் மகன் கைது செய்யப்பட்டார். கவனியுங்கள். ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றும் அழகு இதுதான். இன்னும் அவர் பதவியில்தான் நீடிக்கிறார். மந்திரி மகனை கைது செய்ய நாடே போராடி, உச்ச நீதிமன்றமும் எச்சரிக்க வேண்டியிருந்தது. இனிதான் வழக்கு, தீர்ப்பு. இத்தனை உயிரிழப்புக்கும் பிறகு திடீரென பிரதமர் சட்டங்களை விலக்கிக் கொள்கிறார். இதைத் தான் செய்யச் சொல்லி காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் சென்ற ஆண்டே மீண்டும், மீண்டும் வலியுறுத்தினார். விவசாயிகள் எதிர்க்கும் சட்டங்களில் திருத்தம் செய்வதை விட, அவற்றை விலக்கிக் கொண்டு விவசாயிகளையும் கலந்தாலோசித்து அவர்கள் உடன்பாட்டுடன் மீண்டும் சட்டம் கொண்டு வரலாம் என்பதே அவர் கருத்து.

Repeal and Re-enact என்று பலமுறை கூறினார். ஏனெனில் அவரும் சீர்திருத் தங்களை முழுமையாக எதிர்ப்பவரல்லர் என்பதுதான் காரணம். அதற்கு ஏன் அரசு இத்தனைநாள் இணங்கவில்லை? ஏன் முரட்டு பிடிவாதம் காட்டியது? இப்போது ஏன் விலக்கிக் கொள்கிறது? அனைவருக்கும் விடை தெரியும். இன்னும் ஒருசில மாதங்களில் உத்தரப்பிரதேச தேர்தல் வரப்போகிறது. லக்கிம்பூர் சம்பவத்துக்குப் பிறகு எந்த விவசாயியாவது பாரதீய ஜனதாவுக்கு வாக்களிப்பாரா என்ற கேள்வி எழுகிறது. பொதுவாகவே ஆட்சிக்கு எதிராக வாக்களிக்கும் Anti-incum-bency மனநிலை மக்களுக்கு உண்டு. கொரோனாதொற்றால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில்தோற்பது, 2024 நாடாளுமன்றத் தேர்தலை கடுமையாக பாதிக்க வாய்ப்பு இருக்கிறது.

அதனால்தான் திடீரென விவசாயிகள் உணர்வுகளைப் பற்றிய அக்கறை. இத்தனை நாளாக வராத திடீர் அக்கறை. பிரதமர் மனம் எங்கும் பகல் வேஷம். எதற்காக இந்தச் சட்டங்கள்? ஏன் இந்த பிடிவாதம்? விவசாயம் என்பது மாநிலங்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு துறை. உண்மையில் விவசாயம் தொடர்பான ஒரு சட்டத்தை மாநில அரசுகளை கலந்தாலோசிக்காமல் மத்திய அரசு கொண்டு வருவதே மக்களாட்சிக்கு, கூட்டாட்சி தத்துவத்துக்கு அழகல்ல எனலாம். ஆனால் வர்த்தகம் என்பதன் அம்சங்கள் பொதுப்பட்டியலில் உள்ளது. இந்தச் சட்டங்கள் விவசாய விளைபொருட்களை வர்த்தகம் செய்வது தொடர்பானவை என்பதால் மத்திய அரசு அதில் சட்டம் இயற்ற உரிமையுள்ளதாகக் கருதுகிறது. விளைபொருட்களை விற்பதை விவசாயத்திலிருந்து எப்படிப் பிரிக்கமுடியும்? இந்த மூன்று சட்டங்கள் என்ன, அவற்றின் பிரச்சினை என்னவென்பதெல்லாம் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.

கூகுள் பயன்படுத்தினால் காணொலியாகவும், கட்டுரையாகவும் சுலபமாகப் படிக்கலாம். அதனால் விவரங்களுக்குள் போகாமல் சுருக்கமாகச் சொல்கிறேன். இந்திய விவசாயத்தை கார்ப்பரேட் முதலீட்டின் கைப் பிடிக்குள் கொண்டு வருவதுதான் இந்தச் சட்டங்களின் நோக்கம். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்னும் எளிமையாக மக்களுக்கு புரியும்படி"அம்பானி - அதானி" சட்டம் என வர்ணித்தார்.

இந்தியாவின் பெரும்பாலான விவசாயிகள் சிறு, குறு விவசாயிகள். இவர்கள் அரசின் மானியம், குறைந்தபட்ச ஆதார விலை ஆகியவை இல்லாமல் முதலீட்டிய பொருளாதாரத்தில் தாக்குப் பிடிக்க முடியாது. இவர்களை ஆதரவு தளமாகக் கொண்டு இயங்கும் மாநிலக் கட்சிகள், தலைவர்கள் இந்த சிறு, குறு விவசாயிகளுக்கு ஆதரவாகத்தான் இயங்க முடியும். ஆனால் பாரதீய ஜனதா முழுவதும் அகில இந்திய மேல்தட்டினர் கட்சி; அவர்களுக்கு கோடி கோடியாகக் குவியும் பெயர் சொல்லத் தேவையில்லாதவர்களின் தேர்தல் நன்கொடை கார்ப்பரேட் நலன்களை முன்னெடுக்கவே தரப்படுகிறது. எனவே விவசாய விளைபொருள் கொள்முதல், ஒப்பந்த முறையில் பயிரிடல் என கார்ப்பரேட் நிறுவனங்களை உள்ளே நுழைத்துவிட்டால் மெள்ள மெள்ள விவசாயம் அவர்கள் கைக்குப் போய்விடும்.

அதற்குப் பிறகு தேர்தல் நேரத்தில் பகல் வேஷம் போட்டு பல இனாம்களை, சலுகைகளை அறிவித்து, தேச பாதுகாப்பு அச்சம் காட்டி, இஸ்லாமிய வெறுப்பைத் தூண்டி ஆட்சியைப் பிடித்து விடலாம் என்பதுதான் திட்டமும் சட்டமும். பிகார் மாநிலம் பல ஆண்டுகளுக்கு முன்னமே இந்தச் சட்டங்கள் சொல்லும் சீர்திருத்தங்களைச் செய்தது. அதனால் அங்கு விவசாயிகளின் வருவாய் குறைந்துள்ளது என்பதே புள்ளி விவரம் காட்டும் உண்மை. பஞ்சாப் விவசாயிகள் அவர்கள் கூட்டுறவு விற்பனை மையங்களால் பயனடைந்தவர்கள். அவர்கள் கார்ப்பரேட் வருகைக்குக் கம்பளம் விரிக்க தயாராக இல்லை. அதனால்தான் பொங்கி எழுந்து போராடினார்கள். மத்திய அரசும், பிரதமரும் மக்கள் போராடுகிறார்கள் என்பதையே ஏற்கவில்லை.

முதலில் இடைத்தரகர்கள், கமிஷன் ஏஜெண்டுகள் போராடுகிறார்கள் என்றார்கள். இத்தனை லட்சம் இடைத்தரகர்கள் போராடினால் அவர்களும் மக்கள்தானே? இவர்கள் பொய் பிசு பிசுத்தது. பிறகு காலிஸ்தான் தீவிரவாதிகள் தூண்டிவிடுகிறார்கள் என்று நாடகம் போட்டார்கள். இப்போதும் போடுகிறார்கள். இவர்கள் கூட்டணியில் இருந்த அகாலி தளம் முழு மூச்சாக எதிர்க்கிறதே? அதன் தலைவர் பிரகாஷ் சிங் பாதல் பத்ம விருதையே திருப்பி கொடுத்துவிட்டாரே? அப்போது காலிஸ்தான் தீவிரவாதிகளுடனா பாரதீய ஜனதா கட்சி கூட்டணி வைத்திருந்தது? அடுத்து சூழலியல் போராளி கிரேட்டா தன்பர்க் போராட்ட வழிமுறைகளைப் பகிர்ந்ததை வைத்து அந்நிய சக்திகள் தலையீடு என்று பெரும் ஆரவாரம் செய்தார்கள்.

கார்ப்பரேட் நிறுவனங்களெல்லாம்தான் தேச பக்தர்களா, அவர்களது முதலீட்டிய நடைமுறைகள் எல்லாம் வேதங்களிலே பாடப்பட்டதா என்ன? உலக முதலீட்டிய சக்திகளின் இசைக்கேற்ப ஆடும் கால்கள் தானே இவை? முதலீடு வெளிநாட்டிலிருந்து வந்தால் இனிக்கும் என்றால், எதிர்ப்பு மட்டும் வெளிநாடுகளிலிருந்து வரக்கூடாதா என்ன? உலக முதலீட்டியத்தை உலக மக்கள் ஒன்றிணைந்துதானே எதிர்க்க முடியும்? ஆயிரம் பொய்களைச் சொல்லியும், நாடகம் ஆடியும் சீக்கிய விவசாயிகளின் மன உறுதியைக் குலைக்க முடியவில்லை.

மேற்கு உத்தரப் பிரதேசத்துக்கும் தீ பரவியது. மந்திரி குமாரன் விவசாயிகளை காரை ஏற்றிக் கொல்லும் அளவு வெறி முற்றியது. மக்களை கால் தூசுக்கும் மதிக்காமல் நடத்திய ஆணவம் தலைக்கேறியது. மக்களாட்சி கொடுங்கோலாட்சியாக மாறியது. ஆனால், வந்தது தேர்தல்; தொடங்கியது பகல் வேஷம். ‘மன் கி பாத்’ பிரதமர் மக்களாட்சியில் ஒரு நல்ல அரசியல்வாதி பத்திரிகையாளர்களைத் தொடர்ந்து சந்திப்பதை கடமையாகக் கொள்வார். அதற்கு இந்திய அளவில் சிறந்த உதாரணம் தலைவர் கலைஞர். எத்தனை கேள்விக் கணைகளைத் தொடுத்தாலும் அயராமல் பதில் சொல்வார். ஏனெனில் பத்திரிகையாளர்கள் மக்கள் சார்பாக கேட்கிறார்கள். அவர்களுக்கு பதிலளிப்பது அரசியல் வாதியின்பொறுப்பு; ஆள்வோரின் புனித கடமை. ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், இரவும் பகலும் கலைஞர் அரசியல்வாதி. அவருக்கு மக்களாட்சி பகல் வேஷமல்ல. நெஞ்சுக்கு நீதி.

”தொடங்கியது 'மான் கி பாத்' பிரதமரின் தேர்தல் கால பகல் வேஷங்கள்” -பேரா., ராஜன் குறை கிருஷ்ணன் கடும் தாக்கு

ஆனால், பிரதமர் நரேந்திர மோடி ஜெயலலிதா போல பத்திரிகையாளர்களைச் சந்திக்கவே மாட்டார். அவர்கள் கேள்விகளுக்கு பதிலளிக்கும் பொறுமை அவருக்குக் கிடையாது. பல ஆண்டுகளுக்கு முன் கரண் தாப்பர் என்ற பத்திரிகையாளருக்கு மோடி பேட்டியளித்த போது முதல்வன் திரைப்பட ரகுவரன் போல பாதியில் நிறுத்து, நிறுத்து என்று எழுந்து சென்று விட்டார். அதன் பிறகு அவர் பத்திரிகையாளர் சந்திப்புகளை நடத்துவதில்லை. அதற்கு பதில் ‘மன் கி பாத்’ (மனதின் குரல் - மனதில் உதிக்கும் வார்த்தைகள்/சிந்தனை) என்ற நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்கு நேரடியாக உரையாற்றுவார். அவர் பேசுவார்; நாடே கேட்க வேண்டும். அவ்வளவு தான்.

அப்படிப்பட்டவர் விவசாயிகளுக்கு இந்தச் சட்டங்கள் நன்மை தருபவை என்பதை விளக்கத் தவறி விட்டேன் என்று தேச மக்களிடம் மன்னிப்பு கேட்கிறார். இவரை யார் விளக்க வேண்டாம் என்று தடுத்தார்கள்? போராடும் விவசாயிகளிடம் சென்று இந்தச் சட்டங்களின் நன்மைகளை விளக்க வேண்டியதுதானே? குறைந்தபட்சம் கூட்டணி கட்சித் தலைவர் பிரகாஷ் சிங் பாதலிடம் விளக்க வேண்டியதுதானே? அதுதானே மக்களாட்சி. இரு வேறு கருத்துகள் இருக்கும் போது விவாதங்களின் மூலம் சமரசத்தை எட்டுவதுதானே மக்களாட்சி? ஓராண்டுக் காலம் கொடுங்கோலர்களும் வெட்கப்படுமளவு போராடும் மக்களை புறக்கணித்தவர், இன்று என்னால் புரியவைக்க முடியவில்லை என்று மன்னிப்பு கேட்கிறார். உம் மனமெங்கும் பகல் வேஷம், மன் கி பாத் பிரதமரே!

எழுத்து: ராஜன் குறை கிருஷ்ணன், (பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுடெல்லி)

நன்றி - மின்னம்பலம்

Related Stories

Related Stories