இந்தியா

“சிறாரை துன்புறுத்தி வாய்வழி புணர்வது மோசமான பாலியல் வன்முறையாகாது” : தண்டனையை குறைத்து சர்ச்சை தீர்ப்பு!

போக்சோ வழக்கில் சர்ச்சைக்குரிய தீர்ப்பு ஒன்றை அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“சிறாரை துன்புறுத்தி வாய்வழி புணர்வது மோசமான பாலியல் வன்முறையாகாது” : தண்டனையை குறைத்து சர்ச்சை தீர்ப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நாடுமுழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்கள், குடும்ப வன்முறைகள் அதிகரித்துள்ளன. இந்தச் சூழலில் ஒன்றிய அரசும், மாநில அரசுகளும் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பெண்கள் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

இந்நிலையில், பெண்கள், குழந்தைகளை பாதுகாக்கும் நடவடிக்கையில் இருந்து நீதிமன்றங்கள் தவறுகின்றனவா என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது. அதற்கு சமீபத்தில் வழங்கப்பட்ட தீர்ப்புகளே இத்தகைய அச்சத்திற்கு காரணமாக அமைந்துள்ளன.

குறிப்பாக, பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்கள் ஒருபுறம் அதிகரிக்கிறது என்றால், மறுபுறம் சிறார்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கும் அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது. இத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான போக்சோ சட்டத்தின் (Protection of Children from Sexual Offences Act - POCSO) கீழ் வழக்குப் பதிவு செய்யப்படுகிறது.

ஆனால் போக்சோ சட்டத்தின் கீழ் தீர்ப்புகள் வழங்குவதில் நீதிமன்றங்கள் தனது தீர்க்கமான பார்வையை இழந்து தீர்ப்புகள் வழங்குவது வேதனையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

அதற்கு உதாரணமாக சில தீர்ப்புகளை எடுத்துக்கொள்வோம்.

2021 ஜனவரியில் மும்பை உயர்நீதிமன்ற கிளை அளித்த தீர்ப்பில், “பாலியல் ரீதியாக துன்புறுத்த நினைக்கும் ஒருவர், எதிர்பாலினத்தவரை ஆடை இல்லாத நிலையில், தோலுடன் தோல் தொட்டு தொடர்பு கொண்டால் மட்டுமே அது பாலியல் வன்முறை என்று கருதப்படும். அதேநேரத்தில், பாலியல் ரீதியாக துன்புறுத்தும் நோக்கத்துடன் ஒருவரை அவர் அணிந்த ஆடைக்கு மேல் தொட்டு தொந்தரவு கொடுத்தால் அது பாலியல் வன்முறையாகாது. அது பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழும் வராது” என பெண் நீதிபதி புஷ்பா கனேடிவாலா தெரிவித்திருந்தார்.

இப்படி ஒரு தீர்ப்பை வழங்கிய நீதிபதி புஷ்பா கனேடிவாலாவுக்கு எதிராக பெண்கள் அமைப்பினர் பலரும் தங்களின் கண்டனங்களை தெரிவித்தனர். இதனையடுத்து அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இந்த மும்பை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை, உச்சநீதிமன்றம் சில தினங்களுக்கு முன்பு ரத்து செய்தது.

அதேபோல், மற்றொரு வழக்கில், குழந்தைகள் வன்முறை தொடர்பான மற்றொரு வழக்கிலும் நீதிபதி புஷ்பா கனேடிவாலா, சர்ச்சைக்குரிய வகையில் தீர்ப்பு வழங்கியுள்ளார். அதில், ஒருவர் சிறுமியின் கைகளைப் பிடிப்பதும், பேண்ட் ஜிப்பை திறப்பதும் போக்சோ சட்டத்தின் கீழான பாலியல் குற்றத்தில் வராது என்று தீர்ப்பளித்துள்ளார்.

மேலும், போக்சோ சட்டப் பிரிவு 8 மற்றும் 10-இன் கீழ் 5 முதல் 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்க வேண்டியதை, நீதிபதி புஷ்பா, பாலியல் துன்புறுத்தல் என்ற பிரிவு 12-க்கு மாற்றி, 3 ஆண்டுகள் மட்டுமே சிறைத்தண்டனை கிடைக்க வழி செய்துள்ளார்.

அதேபோல், கடந்த ஆகஸ்ட் மாதம் சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம், “சட்டப்படி திருமணம் செய்து கொண்ட மனைவியின் வயது 18 வயதுக்கு கீழ் இல்லாத பட்சத்தில், அவரை கட்டாயப்படுத்தியோ அல்லது விருப்பத்திற்கு மாறாகவோ கணவர் உடலுறவு கொண்டால் அது பாலியல் வன்கொடுமை ஆகாது” என்று தீர்ப்பளித்து சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், போக்சோ வழக்கில் சர்ச்சைக்குரிய தீர்ப்பு ஒன்றை அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அலகாபாத் பகுதியைச் சேர்ந்த சோனு குஷ்வாஹா என்பவர் தனது வீட்டின் அருகில் விளையாடிக்கொண்டிருந்த 10 சிறுவனை கட்டாயப்படுத்தி வாய்வழியாக உறவு கொண்டுள்ளார்.

தொடர்ந்து சிறுவனை துன்புறுத்திய விவகாரம் பெற்றோருக்கு தெரியவர அவரது பெற்றோர் சோனு குஷ்வாஹா மீது அளித்த புகாரின்படி அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனையடுத்து இதுதொடர்பான வழக்கை போக்சோ நீதிமன்றம் விசாரித்து, போக்சோ சட்டத்தின் கீழ் 6 பிரிவுகளில், குறிப்பாக ‘மோசமான ஊடுருவும் பாலியல் வன்கொடுமை’ (aggravated penetrative sexual assault), இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 377, இயற்கைக்கு மாறான பாலியல் குற்றங்கள் மற்றும் 506 ஆகியவற்றின் கீழ் அவருக்கு தண்டனை வழங்கியது.

இதில் ‘மோசமான ஊடுருவும் பாலியல் வன்கொடுமை’க்கு குறைந்தபட்ச தண்டனை 10 ஆண்டுகள் ஆகும். அதன்படி, பிற பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்ட தண்டனையுடன் 10 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது.

இதனை எதிர்த்து சோனு குஷ்வாஹா அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு தொடர்பான விசாரணை நீதிபதி அணில் குமார் ஓஜா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தீர்ப்பளித்த நீதிபதி அணில் குமார் ஓஜா, சோனு குஷ்வாஜா செய்தது, மோசமான ஊடுருவும் பாலியல் வன்கொடுமையின் கீழ் வராது; அது ஊடுருவும் பாலியல் வன்கொடுமையின் ( penetrative sexual assault) கீழ் தான் வரும் எனக் கூறி, ஏற்கனவே வழங்கப்பட்ட 10 ஆண்டு சிறை தண்டனையை 7 ஆண்டுகளாக குறைத்து தீர்ப்பு வழங்கினார்.

இந்த தீர்ப்பு அரசியலமைப்பு சட்டவிதிகளுக்கு எதிராக உள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது. அதாவது போக்சோ சட்டத்தின் பிரிவு 5ன் கீழ் 12 வயதுக்குட்பட்ட குழந்தையின் மீதான எந்த ஒரு ஊடுருவும் பாலியல் வன்கொடுமை, மோசமான ஊடுருவும் பாலியல் வன்கொடுமையாகவே கருதப்படும். அதனால், அவை 'மோசமான' குற்றங்கள் செய்வோருக்கு வழங்கப்படும் மிகவும் கடுமையான தண்டனைக்கே வழிவகுக்கும். ஆனால், நீதிபதி நீதிபதி அணில் குமார் ஓஜா தீர்ப்பு அதற்கு எதிர்மாறாக உள்ளது. நீதிபதிகள் பாதிக்கப்பட்டோர் உடன் நிற்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories