அரசியல்

ஒத்த ஓட்டு பாஜகவை பூஜ்ய வாக்காக அண்ணாமலை மாற்ற துடிப்பது இதுக்கு தானா? : பாஜக ஆதரவாளரின் குமுறல் -சிலந்தி

புதிய மாநிலத் தலைவரால் செய்தியாளர்கள் சந்திப்பால் தமிழக பாஜகவுக்கு தொடர்ந்து ஏற்பட்டு வரும் தொய்வால், கட்சியினரிடையே ஏற்பட்டுள்ள உள்ளக் கொதிப்பும் ஆதங்கமும் நாராயணனின் பதிலில் தெளிவாகத் தெரிகிறது!

ஒத்த ஓட்டு பாஜகவை பூஜ்ய வாக்காக அண்ணாமலை மாற்ற துடிப்பது இதுக்கு தானா? : பாஜக ஆதரவாளரின் குமுறல் -சிலந்தி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

‘மீம்ஸ்’ தயாரிப்பாளர்களுக்கு உதவிடவே, தமிழகத்துக்கு புதுப்புது தலைவர்களை பா.ஜ.க. நியமிக்கிறதோ என்று எண்ணிடும் வகையில் சமீப காலமாகக் ‘காமெடி பீஸ்கள்’ தமிழக பா.ஜ.க. தலைவர்களாகி வருகின்றனர். அதிலும், தற்போதைய தமிழக பா.ஜ.க. தலைவரை, மீம்ஸ் தயாரிப்பாளர்களுக்கே நேர்ந்துவிட்டது போல அவர் நடத்தும் காமெடி கலாட்டாக்களுக்கு அளவே இல்லை!

"முன்னாள் காக்கியும் இந்நாள் சங்கியும்"" - (இப்படி நாம் கூறவில்லை; திருப்பூரில் அவரது கட்சிக்காரர்களே சூட்டிய பட்டமிது!) ஆகிய இந்த ‘காமெடி பீஸ்’, தலைமைப் பொறுப்பை ஏற்று தமிழக பா.ஜ.க.வுக்கு வந்ததிலிருந்து, அவர் நடத்திடும் அரைவேக்காட்டு அரசியல் கண்டு பா.ஜ.க. முன்னணியினர் பலர் நொந்து நூலாகி வருகின்றனர். சமீபத்தில் அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் நாராயணனை செய்தியாளர்கள் சந்திக்கின்றனர். அப்போது அவர்கள் நாராயணனை நோக்கி எழுப்பிய கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்களை நையாண்டி என்பதா? நக்கல் என்பதா? தங்கள் தலைவர் மீது வைத்த நம்பிக்கை என்பதா என்று புரியவில்லை!

நாராயணன் பேச்சில் எப்போதுமே நக்கல் கொஞ்சம் தூக்கலாக இருக்கும். அவரது விவாதங்களைப் பார்த்த பலர் அவருக்கு ‘நக்கல் நாராயணன்’ என்று பெயர் சூட்டியிருப்பதை அவர் அறிவாரோ என்னவோ நமக்குத் தெரியாது! அந்த நக்கல் நாராயணனிடம் செய்தியாளர் கேட்ட கேள்விகளையும், அவர் அளித்த விளக்கமான பதில்களையும் வாசகர்கள் பார்வைக்கே விட்டு விடுகிறோம்.

செய்தியாளர்: வேளாண் சட்டங்களை பிரதமர் இன்று வாபஸ் வாங்கியிருக்கிறாரே.... பஞ்சாப் தேர்தல்தான் காரணமா?

நாராயணன்: இதுகுறித்து எங்கள் மாநிலத் தலைவர் தனியாக தங்களிடம் பேசுவார்.

செய்தியாளர்: சார்; மன்னிப்புக் கேட்கிறோம் என பிரதமர் பேசிய...... (செய்தியாளர் கேள்வியை முடிக்கு முன்பே பதில் கூறுகிறார்.)

நாராயணன்: இதுகுறித்து எங்கள் மாநிலத் தலைவர் தனியாக உங்களிடம் பேசுவார்.

செய்தியாளர்: சார்.... கடந்த ஒரு வருஷமா விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்களே...

நாராயணன்: இதுகுறித்து எங்கள் மாநிலத் தலைவர் உங்ககிட்டே பேசுவார்..

செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் அந்தக் காலத்து கீறல் விழுந்த கிராமபோன் பிளேட் போல, இப்படி ஒரே பதிலை திரும்பத் திரும்பக் கூறி இருக்கிறார் நாராயணன்! செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு நழுவும் எண்ணத்தோடு இப்படி நாராயணன் பதிலளித்திருப்பார் என்று யாரும் கருதிடத் தேவையில்லை. நழுவும் எண்ணம் இருந்திருந்தால் செய்தியாளர்களைச் சந்திக்காமலே நழுவியிருப்பார்! சந்தித்தது மட்டுமின்றி, அவர்கள் கேட்ட கேள்விகளை உள்வாங்கிப் பதிலளித்துள்ளார்! பதிலளித்துள்ளார் என்பதைவிட, தங்கள் கட்சியின் புதிய மாநிலத் தலைவரைத் தோலுரித்துள்ளார்.

புதிய மாநிலத் தலைவரால் -அவரது செயல்களால், செய்தியாளர்கள் சந்திப்பால் தமிழக பாரதிய ஜனதா கட்சிக்கு தொடர்ந்து ஏற்பட்டு வரும் தொய்வால், தமிழக பா.ஜ.கவினரிடையே ஏற்பட்டுள்ள உள்ளக் கொதிப்பும் - ஆதங்கமும் நாராயணனின் பதிலில் தெளிவாகத் தெரிகிறது! மழை, வெள்ளத்தில் நாடே தவிக்கிறது; மக்கள் வேதனையால் வெந்து போயிருக்கும் நிலையில், பா.ஜ.க.வின் புதிய தலைவர் - பொதுச் செயலாளர் ‘லாரல் ஹார்டி’ போல கணுக்கால் அளவில் உள்ள தண்ணீரில் படகு ஒன்றை நிறுத்தி, அதன் மேல் வேட்டியை உயர்த்தி உட்கார்ந்து கொண்டு, "போட்டோ ஷூட்" நடத்தி அடித்த ‘லூட்டி’களை சமூக வலைதளங்களில் பலர் பார்த்து, மழை -வெள்ள வேதனைகளையும் மறந்து விலாநோகச் சிரித்தனர்!

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்தத் தவறிய ஒன்றிய அரசை நாட்டு மக்கள் அனைவரும் சாடிக் கொண்டிருக்கையில், விலையை தமிழக அரசு குறைக்கவில்லை எனப் போராட்டம் நடத்திய தமிழக பா.ஜ.க. தலைவரின் அரசியல் அரை வேக்காட்டுத் தனத்தையும், "சேம் சைட் கோல்" (Same Side Goal) போட்டு பா.ஜ.கவினரை வெளியே தலைகாட்ட முடியாது செய்த கோமாளித்தன அரசியலையும் கண்டு பா.ஜ.கவினரே வெட்கிப் போயிருக்கின்றனர்! பா.ஜ.கவைப் பொறுத்தவரை அது தமிழகத்தில் செல்லாக் காசாக இருந்தாலும், சில மதிப்புமிகு மனிதர்கள் அதன் தலைவர்களாக இருந்தனர்!

ஒத்த ஓட்டு பாஜகவை பூஜ்ய வாக்காக அண்ணாமலை மாற்ற துடிப்பது இதுக்கு தானா? : பாஜக ஆதரவாளரின் குமுறல் -சிலந்தி

ஜனா.கிருஷ்ணமூர்த்தி, இல.கணேசன், சி.பி.இராதாகிருஷ்ணன் போன்றோர் அதற்கு எடுத்துக்காட்டுகள்! தலைவர் கலைஞர்; மறைந்த பிரதமர் வாஜ்பாய் குறித்து கூறும்போது, ‘Right Man in Wrong Party’ - என்று குறிப்பிட்டது போல அந்த நல்ல மனிதர்கள் சிலர், தவறான இயக்கத்தோடு தங்களை இணைத்துக் கொண்டனர்! அவர்கள் எல்லாம் முட்டி மோதி முனைந்தும் வளர்க்க இயலாத இயக்கத்தை வளர்க்க, ‘பழைய காக்கி, புதிய சங்கி’யை அனுப்பி வைத்து, அந்த புதிய சங்கி நடத்திய அலப்பறையில், உள்ளதையும் இழந்து நிற்கிறது! காவல் துறையிலிருந்து வந்தவராயிற்றே, ஐ.பி.எஸ். படித்தவராயிற்றே - விபரமாக கட்சியை நடத்துவார் என எதிர்பார்த்த பி.ஜே.பி.யினரே; அவரை இப்போது ‘காமெடி பீசாக’ கருதத் தொடங்கிவிட்டனர்.

இதன் வெளிப்பாடே பி.ஜே.பி. செய்தித் தொடர்பாளர் நாராயணன் செய்தியாளர்களுக்கு அளித்த பதிலில் தென்படும் உள் பொருள். நாராயணன் அப்படி ஆதங்கத்தோடு பதில் அளித்ததிலும் உண்மை இல்லாமல் இல்லை. கடந்த காலங்களில் தமிழ்நாட்டில் பி.ஜே.பி. தனித்துப் போட்டியிட்டால் குறைந்தபட்சம் ‘நோட்டா’வோடு போட்டியிட்டு வாக்குகளைப் பெற்றிடும்; இந்தக் கோமாளி காமெடி பீஸ் பொறுப்பேற்ற பின், நடந்து முடிந்த சமீபத்திய உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட பி.ஜே.பி. பிரமுகர் ‘ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு’ என்று ஒரு ஓட்டை வாங்கி ‘ஒற்றை ஓட்டு பி.ஜே.பி.’ எனும் பெயர் பெற்றிடும் வகையில் தமிழ்நாட்டில் பி.ஜே.பி.யை வளர்த்துள்ளார் முன்னாள் காக்கி - இந்நாள் சங்கி. நம்மைச் சந்தித்த பி.ஜே.பி. நண்பர் ஒருவர் இதுகுறித்துக் கூறிய தகவலும் சிந்திக்க வைப்பதாகத் தோன்றுகிறது.

அப்படியும் இருக்குமோ என்று என்னிட வழி வகுக்கிறது. ‘எங்கள் ஆளின் நோக்கம் பி.ஜே.பி.யை வளர்ப்பது இல்லை. நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி. அணி தோற்கடிக்கப்பட்டது. அப்போது பி.ஜே.பி.க்குத் தலைவராக இருந்தவர் கவர்னராக மாற்றப்பட்டார். பின்னர் சட்டமன்றத் தேர்தலில் பி.ஜே.பி. இருந்த அணி மண்ணைக் கவ்வியது. அந்தக் கால கட்டத்தில் பி.ஜே.பி. தலைவராக இருந்தவர் மத்திய அமைச்சராக ஆனார். அவரைத் தொடர்ந்து தமிழக பி.ஜே.பி. தலைவரானவர், உள்ளாட்சித் தேர்தலில் ‘ஒற்றை ஓட்டு பி.ஜே.பி.’ என்ற பெயரை வாங்கித்தந்தார். தொடர்ந்து நடைபெறும் தேர்தலில் ‘பூஜ்ய வாக்கு பி.ஜே.பி.’ என்ற பெயரை வாங்கித் தந்தால் ஏதாவது ஆளுநர், அமைச்சர் பொறுப்பு கிடைக்கும் எனும் பெரிய நோக்கோடு பி.ஜே.பி.யை அழித்தொழிக்கப் பாடுபடுகிறார் போலும்,’ - என்ற தனது ஆதங்கத்தை எடுத்துரைத்தார்!. அதிலும் உண்மை இருக்கலாம் அல்லவா?

நன்றி - முரசொலி சிலந்தி

banner

Related Stories

Related Stories